Tuesday, November 4, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 75

மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது மேலும் பல புதியமுயற்சிகளில் ஈடுபட மனம் நம்மைத் தள்ளும். உற்சாகம் பிறக்க மன மகிழ்ச்சி தேவை. அந்த மன மகிழ்ச்சியைப் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என நாம் எல்லோருமே அறிவோம்!

மன மகிழ்ச்சி பல காரணங்களால் ஏற்படலாம்.

சிலரது அன்பான சொற்கள் ஆர்வத்தைத் தூண்ட உதவலாம். சிறப்புக்கள் பெறும் போது மனதில் உற்சாகம் தோன்றும். பரிசு, பொருள், பாராட்டு .. என இவையெல்லாமே மனதில் மகிழ்ச்சியைத் தரக்கூடியவைதான் -  அந்தந்த சூழ்னிலைக்கேற்ற வகையில்!

பெரியவர்களே பாராட்டையும், இன்சொற்களையும், பரிசுகளையும் நினைத்து மகிழும் போது சிறுவர்களும் இளைஞர்களும் எத்தகைய வகையில் மன உற்சாகம் பெறுவார்கள் என்பதை நம்மால் உணர முடியும். இதனால் தான் நல்ல செயல்கள் செயப்படும் போது உற்சாகம் ஊட்டும் வகையில் பாராட்டுதல்களும் பரிசும் இன்சொற்களும் வழங்குவது மாணக்கர்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரவல்ல மாமருந்தாக அமைகின்றன. பள்ளிகளில் தான் பரிசும் இன்சொற்களும் பாராட்டுதல்களும் பெற்றால் இளைஞர்கள் நன்கு ஊக்கம் பெற்று கல்வியிலும் ஏனைய துறைகளிலும் நாட்டம் செலுத்துவார்கள் என்பதல்ல. இல்லத்தில் இனிமையான சூழலில் இன்சொற்களும் பாராட்டுதல்களும், பரிசுகளும் இளைஞர்களுக்கு மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்க வல்லன.

பல பெற்றோர்கள் கடுமையான சொற்களைச் சொல்லி, தங்கள் சிரமங்களை தம் குழந்தைகளுக்குச் சொல்லி, அதன் வலியை பகிர்ந்து கொள்வதே, குழந்தைகள் சிறப்பாக பெற்றோர் தம் சிரமம் அறிந்து  வளர உதவும் என்ற சிந்தனை கொண்டோராக இருப்பர். சில பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக தந்தைமார் பலருக்கு முகத்தில் கடுகடுப்பும், கோபமும் கடுமையும் தான் தென்படும். குழந்தைகள் பயத்துடனும் நடுக்கத்துடனும் குற்ற உணர்ச்சியுடனுமே வலம் வருவதை விரும்பும் பலர் இன்றும் இருக்கின்றனர். இதுவே குழந்தைகளை பொறுப்பு மிக்கவர்களாக ஆக்கும் என்ற தவறான போக்கு கொண்டோர்கள் இத்தகையோர்.

குழந்தைகளின், இளைஞர்களின் உளவியல் கூறுகளை அறிந்து பெற்றோர் நடக்க வேண்டியது மிக அத்தியாவசியமானது. குழந்தைகளும் இளைஞர்களும் செய்யும் சிறு சிறு நல்ல   விஷயங்களையும் கவனித்து அதனை தக்க முறையில் பாராட்டுவது அவர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தை அளிக்கும். இப்போது செய்வதை விட இன்னமும் சிறப்பாகச் செய்து பாராட்டுதல் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டும். பெற்றோர் நமது நல்ல நடவடிக்கைகளைப் பார்த்து நம்மை, நமது செயல்களை அங்கீகரிக்கின்றனர் என்ற உணர்வே பல வேலைகளில் இளைஞர்களுக்கு ஒரு உளவியல் பலத்தையும் வழங்குகின்றது என்பதை நினைவு கொள்தல் அவசியம். அன்பு காட்டுதல், இனிய சொற்கள் சில கூறுவதும், ஒருவர் செய்த காரியத்தைச் சொல்லிக் காட்டி அதற்காகப் புகழ்ந்து பாராட்டுவது என்பன செய்வதற்கு அதிக சிரமமோ பொருள் தேவைப்படும் ஒன்றோ அல்ல. ஆனாலும் இதனைச் செய்வதற்குத்தான் பல பெற்றோருக்கு மனம் வருவதில்லை என்பது வேதனையான உண்மை. 

அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உள்ள வலிமை மிகப் பெரிது. இதனை உணர்ந்து தக்க முறையில் பயன்படுத்தும் போது அதனால் ஏற்படும் நல்ல வளர்ச்சி குறிப்பிடத்தக்க பலனைத் தருவதாகவே அமையும். 

உ.வே.சாவிற்கு உற்சாகம் கொடுக்கும் நிகழ்வுகளும் திருவாவடுதுறை மடத்தின் சார்பில் சில முறை நடந்தேறியுள்ளன. மதுரைக்கான பயணத்தின் போது கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றையும் பட்டு சால்வை, பட்டு தலையணை ஆகியவற்றை ஆதீனகர்த்தரிடமிருந்து பரிசாகப் பெற்றார் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

பயணத்தின் போது செல்லும் வழியில் மன்னார்குடியில் தங்கி இருந்த பொழுதில் உ.வே.சாவின் காதில் இருந்த பழைய கடுக்கனைப் பார்த்திருப்பார் போலும் தேசிகர். இந்த இளைஞனுக்குப் புதிதாக ஒரு கடுக்கண் வாங்கித்தருவோம் என நினைத்து ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய சிகப்புக் கல் கடுக்கணை வாங்கி அதனை அணிந்து கொள்ளும்படி செய்திருக்கின்றார். இந்தக் கடுக்கணை கஸ்தூரி ஐயங்காரென்னும் ஒருவரை அழைத்து போட்டு விடும்படி தேசிகர் கேட்க அன்றிலிருந்து இந்தப் புதிய சிவப்புக்கல் கடுக்கண் உ.வே.சாவின் காதுகளை அலங்கரித்தன.

அதுமட்டுமா..?  மன்னார்குடியிலிருந்து புறப்படும் வேளையில் பட்டுக் கோட்டையில் ஒரு மோதிரத்தை வாங்கி தேசிகர் உ.வே.சாவிற்கு அணிந்து கொள்ளச் செய்திருக்கின்றார். இப்படி பொண்ணாபரணங்கள் பெற்ற மகிழ்ச்சி பெரும் குதூகலத்தை உ.வே.சாவிற்கு ஏற்படுத்தியது. அங்கிருந்து திருப்பெருந்துறை சென்று அங்கு சிலரை சந்தித்து உரையாடி பின் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியான பொழுதுகளையும் அது தனக்களித்த இன்ப அனுபவத்தையும் உ.வே.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோஷத்தால் பூரித்தேன்.

தொடரும்..


சுபா

1 comment:

  1. மதிப்புமிகு தோழமைக்கு,
    வணக்கம். என் பெயர் சி.குருநாதசுந்தரம். நான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். தங்களின் அரும்பணி என்னை வியக்க வைத்தது. நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர்(m.phil}பயின்று வருகிறேன். அதற்கான ஆய்வாக தங்களாது வலைப்பூவில் உ.வே.சா வுடன் ஒரு உலா என்ற வாசிப்பனுபவத்தை ஆய்விற்கு எடுத்துள்ளேன். தங்களின் மேலான உதவியை நாடி வேண்டுகிறேன். என் ஆய்வு வெற்றியடைவதற்குத் தாங்கள் எனக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள் என நம்புகிறேன். தங்களது வாசிப்பனுபவம் முழுவதையும், தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதன் மீதான நல்லாய்வு தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்களின் தமிழ்த் தொண்டைப் பறைசாற்றும் வண்ணம் அமையும் என நம்புகிறேன். என் மின்ன்ஞ்சல் முகவரி :gurunathan4272@ gmail.com. இவ்வாய்விற்கு தங்களின் மேலான ஒத்துழைப்பினை வேண்டுகிறேன். நன்றி. அன்புடன், சி.குருநாதசுந்தரம். புதுக்கோட்டை. தமிழ்நாடு. என் செல்பேசி :9442052825

    ReplyDelete