கடந்த வெள்ளியன்று வார இறுதி நாட்களோடு கூடுதலாக கிடைத்த ஒரு நாள் விடுமுறையையும் பயன்படுத்திக் கொண்டு இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். [இந்த பயணத்தைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் http://subaonline.log.ag - Germany in Focus வலைப்பூவில் காணலாம்] பயணம் சுகமான அனுபவம் என்றாலும், சில மணி நேரங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதிலேயே செலவிட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், பெரும்பாலும் ஏதாவது புத்தகத்தைக் கையோடு கொண்டு செல்வது எனது வழக்கம். இந்த முறை என் கைக்குக் கிடைத்தது தத்துவச் சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'Letters to the Schools - Volume Two' என்ற சிறிய புத்தகம்.
இது ஒரு வித்தியாசமான நூல். சிறிய சிறிய கட்டுரைகளாக 1981 லிருந்து 1983 வரையில் அவர் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பே இது. புத்தகத்தின் தலைப்பு Letters to the Schools என்றிருந்தாலும் வெறும் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் இவர்களை மனதில் கொண்டு மட்டுமே எழுதப்பட்டவை என்று நினைக்க முடியாது. கடிதங்கள் தானே என சாதாரணமாக இந்த நூலை எடை போட்டு விட முடியவில்லை. நூலின் ஆரம்பத்தில் மிகச் சிறிய அறிமுக உறை ஒன்றை ஜே.கே தருகின்றார். அதில் "These letters are not meant to be read casually when you have a little time from other things, nor are they to be treated as entertainment. These letters are written seriously and if you care to read them, read them with intent to study what is said as you would study a flower by looking at the flower very carefully..." என்று ஆரம்பிக்கின்றார்.
முதல் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம். எவ்வளவு ஆழமான சிந்தனை. உலகை எப்படி நோக்க வேண்டும்; எப்படி சிந்திக்க வேண்டும்; எதனை சிந்திக்க வேண்டும், கல்வி என்றால் என்ன போன்ற பல பல விஷயங்களை வரிக்கு வரி மனதைத் தாக்கி சிந்திக்கத் தூண்டும் வகையில் இந்த கடிதங்களில் தனது எண்ணங்களை இந்த சிந்தனையாளர் வெளிப்படுத்துவது அபாரம். அழகுக்காக அல்லது வார்த்தைகளை நிரப்பி கட்டுரையை அமைக்க வேண்டுமே என்ற சிந்தனையோ எந்த முயற்சியோ இன்றி வரிக்கு வரி கருத்துக் குவியல்கள். இந்தக் கடிதங்களை இத்தாலியின் அழகிய நகரான Milan-லிருந்து Rome சென்று சேரும் வரை கிடைத்த நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். படிக்கப் படிக்க என்னுள்ளே எழுந்த சிந்தனைகளை எழுத்து வடிவாக்கித் தருவதற்காகவே இந்த முயற்சி.. தினம் தொடரும்..!
No comments:
Post a Comment