Tuesday, October 7, 2003

JK's Letters to the Schools - 2

J.K. 15 December 1981 அவர்கள் 'Letter to the Schools" அன்று எழுதிய ஒரு கடிதம். அதனை ஒட்டிய சில சிந்தனைகள்." A school is a place of learning and so it is sacred. The temples, churches and mosques are not sacred for they have stopped learning. They believe, they have faith and that denies entirely the great art of learning......" - by J.K. எங்கே புனிதம் ஒருக்கின்றது என்று சமுதாயத்தை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கருத்தினை வைக்கும் முயற்சி இது என நான் நினைக்கின்றேன். மனிதர்கள் வாழ் நாள் முழுதும் கற்க வேண்டும். கற்றல் இருக்கின்ற இடத்திலே தான் வளர்ச்சி இருக்கும். கற்கின்ற மனிதர் தான் சிந்திக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றார். கற்கின்ற வாய்ப்பு என்பது எப்போதும் யாருக்கும் தானாக வந்துவிடுவதில்லை. சமுதாய அமைப்புக்கள் கொடுக்கின்ற வாய்ப்புக்களின் வழியாகத்தான் ஒரு தனி நபர் வாழ்க்கையில் கற்க முடிகின்றது.


பள்ளிக்கூடம் என்பது அறிவை கூர்மையாக்கி சிந்தனையைச் தூண்டச் செய்கின்ற இடம். கற்பித்தல் என்ற ஒரு நடவடிக்கை அங்கு இருந்தாலும் 'கற்றல்' தான் அங்கு மிக முக்கியமான ஒரு அம்சம். ஒரு பள்ளி எனப்படும் இடத்தில் மாணவர்கள் மட்டும் கற்பதில்லை; மாறாக ஆசிரியர்களும் கற்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. எண்ணங்கள் உயர்ந்தனவாக இருப்பதற்கும், வாழ்க்கையின் போராட்டங்களை சமாளிப்பதற்கும் மனதை தயார்படுத்திக் கொள்ளும் பயற்சிக்கூடமாக அமைகின்ற ஆரம்பகால இடமாக இருப்பதும் பள்ளி தான்.

மதங்களும் சமய நெறிகளும் ஞானத்தைப் புகட்டுவதற்காகவும், அல்லல் படும் மனித வர்க்கத்தின் மனதிற்கு ஆறுதலும் விளக்கமும் தந்து அறிவினில் தெளிவை உருவாக்கவும் தோன்றின. ஆனால் இன்றைய நிலையில் அவற்றின் நோக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டமை கண்கூடான ஒன்று. ஆலயங்கள் வணிக நிறுவனங்களாக மாறி செயல்படுவதும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பயிற்சிக் கூடங்களாக மாறிக் கொண்டிருப்பதும் உலகம் முழுதும் நாம் காணக்கூடிய ஒன்றாகத் தான் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

எப்போது 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற சிந்தனை என் உள்ளத்தில் தோன்றுகின்றதோ அப்போது நான் சிந்திக்கும் திறனையும் கற்கும் ஆற்றலையும் இழந்து விடுகின்றேன். பல சமய நிறுவனங்கள் இப்போது அப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கின்றன! "இதைத்தான் செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது.

அப்படி செய்து விட்டால் உனது சமயத்திற்கு நீ பாவம் இழைக்கின்றாய். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் சமயத்தின் புனிதத்தை அழிக்கக்கூடியவை" என்று பயம் காட்டுவதும், "இதைச் செய்தால் இந்தப்பலன் கிடைக்கும்; அதைச் செய்தால் உன் பாவங்கள் அழிக்கப்படும்" என்று வித்தை காட்டும் கூடாரங்களாகவும் மாறி 'இறை' எனும் புனிதத்தை மறந்து விட்ட நிலையில் தான் உள்ளன. மனிதனை மதத்தின் பெயரால் பிரித்துப் பார்க்கவும், பல வேறான சாதிகளில் பிரித்து வைத்துப் பார்க்கவுமே சமயம் விரும்பினால், குலம் கோத்திரம் கேட்டுத்தான் இறைனிடம் அறிமுகம் செய்து வைக்கமுடியும் என்று கூறினால், அதை விட வேறு என்ன மடமை இருக்க முடியும்? இந்த மடமையையும் தலையை ஆட்டிக்கொண்டு ஏற்றுக் கொண்டு அவற்றை நியாயப்படுத்தகாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டே சென்றால் அன்புதான் என் சமயத்தின் அடிப்படை என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?

No comments:

Post a Comment