Wednesday, October 8, 2003

JK's Letters to the Schools - 3

"Learning has been the ancient tradition of man, not only from books, but about the nature and structure of the psychology of a human being. As we have neglected this entirely, there is disorder in the world...."

கல்வி என்பது ஒருவரை தொழிலுக்குத் தயார் செய்யும் ஊடகமாக தற்பொழுது பெரும்பாலும் எடை போடப்படுகின்றது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பரீட்சைக்குத் தயார் செய்வதிலேயே ஆசிரியர்களும் பெற்றோர்களும் குறியாக இருக்கின்றனர். ஏன் பள்ளிப் படிப்பு என்றால், ஒரு குறிப்பிட்ட வேலை செய்வதற்காக என்பதும், அந்த குறிப்பிட்ட வேலை எதற்காக என்றால் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம், நல்ல வரன் அல்லது பெண் கிடைப்பாள் என்ற உலகியல் காரணங்களுக்காக கல்வி தேவை என்ற எண்ணம் நமது மனதின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கற்கின்றோம்; புதியவர்களைப் பார்க்கும் போது, புதிய இடங்களுக்குச் செல்லும் பொது, பிரச்சனைகளை எதிர் நோக்கும் போது, இயற்கையை ரசிக்கும் போது என எப்போழுதும் ஒன்றினை கற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் அதுவும் கற்றல் தான் என்பதை நினைக்க மறந்து விடுகின்றோம். வாழ்க்கை மிக மிக அவசரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது; இந்த அவசர உலகில் நமது மனதின் ஓட்டங்களை அதன் தேவைகளை பூர்த்தி செய்கின்றோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.


கல்வி அல்லது ஞானம் என்பது நமது மனதிற்கு ஒழுங்கினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது. சிந்தனையைத் தூண்டும் நூல்களை வாசிக்கும் போது நமது உள்ளத்தில் எழுகின்ற பல கேள்விகளுக்கான விடைகளை கண்டெடுத்துக் கொள்ள முடிகின்றது. சில வேளைகளில் நமது சிந்தனைக்குத் தோன்றாத, நாம் இதுவரை நினைத்திராத சில விளக்கங்கள் பிறரது அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் எட்டி அது எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கும் போது அந்த அனுபவத்தையும் நாம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது.

புத்தகங்கள் மட்டுமன்றி அனுபங்களையும் உலகையும் வாசிக்க நாம் பழகும் போது இதுவரைக் காணாத அனுபவத்தைப் பெறமுடிகின்றது. இயற்கையில் கிடக்கும் அதிசயங்களைச் சிந்திக்கும் போது, நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பலப் பல விஷயங்களையும் கூர்ந்து நோக்கி அதற்கு தெளிவு காணும் போது நமது மனம் கற்பதை உணர முடிகின்றது.

பெரும்பாலும் நமது எண்ணங்கள் பிறரை சுற்றியே வலம் வருகின்றன. எனது அண்டை வீட்டுக்காரர், எனது மேலாளர், எனது தோழர்கள், எனது உறவினர், எனது மனைவி, எனது கணவர், இப்படி மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் இப்படி செய்கின்றார்கள் என்று பிறரது குறைகளைக் கண்டு பிடிப்பதிலேயே நமது சிந்தனையைச் செலவிடுபவர்களாக
இருக்கின்ற நிலையை மாற்றிக் கொண்டு நமது சுய சிந்தனை போகின்ற போக்கினை கவனிக்க ஆரம்பித்தால், நமது உள் மனத்தோடு சம்பாஷிக்கப் பழகும் ஆற்றலைப் பழக்கிக் கொண்டால், நமது மனதின் sensitivity கூடுகின்றது. இது உணரக்கூடிய ஒன்று; எழுத்துக்களால் விளக்கப்பட முடியாத ஒன்றும் கூட!

No comments:

Post a Comment