என்னுடைய மனதை சோதித்துப் பார்க்கின்றேன். என் மனதில் எண்ணற்ற விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான விஷயங்கள். பல வேறு பட்ட விஷயங்கள். என்னுடைய வாழ்வில் இதுவரை நான் கடந்து வந்த அனுபவங்கள், பார்த்துப் பழகிய மனிதர்கள், அவர்களைப் பற்றிய எனது அபிப்ராயம், அவர்களோடு நான் நடத்திய உரையாடல், அந்த உரையாடல்களுக்குப் பிறகு அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் அபிப்ராயம் எனப் பலப் பல விஷயங்கள் மனதிற்குள் அடங்கிக் கிடக்கின்றன. அடங்கிக் கிடக்கின்ற இந்த தகவல் வங்கியைப் பயன்படுத்திக் கொண்டு நிஜத்தில் வாழ்கின்றேன்.
எனது சிந்தனை எப்போதும் புதிதாக இருப்பதில்லை. ஒருவர் என் உள்ளத்தை வேதனைப் படுத்தி விட்டார் என்றால் அந்த வேதனையும் கவலையும் என் மனதை விட்டு வெகு சீக்கிரமாக விலகி விடுவதில்லை. அந்த வேதனை உணர்வும், அந்த உணர்வு ஏற்படக் காரணமாக இருந்த அந்த நிகழ்வும் மனக்கண்ணில் நினைத்துப் பார்த்தால் தோன்றும் அளவுக்கு மனதில் பதிந்திருக்கின்றன. அதே போலத்தான் சந்தோஷமான நிகழ்வுகளும். என் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த ஒரு நிகழ்வினை மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் போது என் மனம் மகிழ்கின்றது. முகம் சந்தோஷத்தில் மலர்கின்றது.

நினைவுகளைக் கொண்டு ஒரு அனுபவத்திற்கு உயிர் கொடுத்து, அதனை நிஜமாக்கி, அது தரும் உணர்வுகளை அனுபவிக்க முடிகின்றது. எனது ஆழ் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நிகழ்கால வாழ்க்கையை நடத்துகின்றேன்; அனுபவத்தின் மூலம் கிடைத்த கற்றலை வைத்துக் கொண்டும் இன்றைய பொழுதின் தேவைகளை சமாளிக்கின்றேன்.
நடக்கின்ற அனைத்திலுமே காலத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகின்றது. ஒரே பொருளை நேற்று நான் பார்க்கும் போது எனக்கு அது வேறு விதமாகத் தோன்றுகின்றது. அந்த தோற்றத்தின் அடிப்படையில் இன்று கிடைத்த அனுபவத்தோடு சேர்த்துக் கொண்டு பார்க்கும் போது இன்று வேறொறு விதமாகத் தோன்றுகின்றது. ஒரு புதிய நபரைப் பார்க்கின்றேன். முதல் சில நாட்கள் பேசிப் பழகும் போது அமைகின்ற அபிப்ராயம் வேறு விதமாக இருக்கின்றது. குறுகிய காலத்தில் அவரோடு பழகிய அனுபவத்தை வைத்து அவரைப் பற்றி எடைபோட்டு மனதில் அவரைப் பற்றிய ஒரு image
ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்கின்றேன். அடுத்த முறைப் பார்க்கும் போது நான் அவரைப் பற்றி தயாரித்து வைத்திருக்கும் அந்த image -ன் அடிப்படையை வைத்துக் கொண்டே அவரோடு பழகுகின்றேன்; உரையாடுகின்றேன். ஆனால் நன்றாகப் பேசிப் பழகிய பின்னர், அவரைப் பற்றி மேலும் புரிந்து கொண்ட பின்னர், அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு நெருக்கமாக வருவதை உணர்ந்த பின்னர் நான் அவரைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த image-ல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படுகின்றது. பழகித் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமையாத போது முன்பிருந்த அந்த பழைய image அப்படியே மனதில் தங்கிக் கிடக்கின்றது.
என் மனம் மட்டுமல்ல; நம் அனைவரின் மனங்களிலும் அனுபவப் பழமை கொட்டிக் கிடக்கின்றன. இந்த அனுபவங்களை, இந்த பழமைகளை, நாம் காலத்தைக் கடக்கும் நிலையை எட்டும் போது மட்டும் தான் தொலைக்க முடியும்!
No comments:
Post a Comment