Wednesday, October 1, 2003

சாமி ஆட்டம்..:-)

கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தானே. எங்கள் ஊரில்..அதாவது பினாங்கில் (ஜெர்மனிக்கு சென்று விட்ட பிறகும் பினாங்கு தான் என் ஊர்..:) ) தைப்பூசத் திருவிழா தான் மிக மிக பிரசித்தி பெற்ற ஒரு சமயத் திருவிழா. இது தவிர வேறு சில கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும் பல திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. திருவிழாக்கள் என்றால் நமக்கு எத்தனையோ விஷயங்கள் ஞாபகம் வரும் இல்லையா..? ஆனால் எனக்கு மனதில் தோன்றுவது இந்த திருவிழாக்களின் போது சில 'பக்தர்களுக்கு' சாமி வந்து அவர்கள் போடும் ஆட்டம்தான்.

இளம் வயதில், தைப்பூசத் திருவிழாவில் வேடிக்கைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் யாராவது சாமி வந்து ஆடிக்கொண்டிருந்தால் என் பெற்றோர்கள் பின்னால் ஓடி ஒளிந்து கொள்வேன் அவ்வளவு பயம். சிலர் நீண்ட அலகுக் கம்பியை வாயில் செறுகிக் கொண்டு சாமி வந்து ஆடுவதை பார்க்க பயமாகத்தான் இருக்கும்.

அப்போது எனக்கு வயது 14 இருக்கும். தைப்பூசத்திற்கு மறுநாள் பினாங்கில் வழக்கமாக தண்ணீர்மலையிலுள்ள இடும்பன் ஆலயத்தில் ஒரு விஷேஷமான பூஜை செய்வார்கள். அதற்கு இடும்பன் பூஜை என்று பெயர். யாரெல்லாம் தைப்பூசத்தில் காவடி எடுத்தார்களோ அவர்கள் எல்லாரும் அந்த இடும்பன் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு ஐதீகம். அந்த பூஜையைப் பார்ப்பதற்காக நாங்கள் குடும்பத்தோடு சென்றிருந்தோம்.

பூஜையெல்லாம் முடிந்து குருக்கள் இடும்பன் சுவாமிக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் நீளமான அலகு போட்டிருந்த ஒரு ஆசாமிக்கு சாமி வந்து விட்டது. தட்டில் இருந்த சாட்டையை எடுத்து தன்னுடைய உடம்பில் சுற்றி மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.எனக்குத்தான் இதைப் பார்த்தால் பயமாயிற்றே. என் அம்மாவின் பின்னால் ஓட்டி ஒளிந்து கொண்டேன். அந்த சாமி வந்தவர் அத்தோடு நிற்கவில்லை; சாட்டையை கீழே போட்டுவிட்டு குருக்களின் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டு கோயிலைச் சுற்றி ஒட ஆரம்பித்து விட்டார். இந்த கோயில் மிகச் சிறிய ஒரு கோயில். அவர் சுற்றி வரும் போது அவரது அலகு என் மேல் பட்டு விட்டது. அவ்வளவுதான். என்னைத்தான் அவர் விரட்டுகின்றார் என நினைத்து நான் பயந்து ஓட ஆரம்பித்து விட்டேன். ஆசாமி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இப்போது நான் ஓட என்னை விரட்டிக் கொண்டு அவர் ஓட் ஆரம்பித்து விட்டார். பயத்தில் அலறிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு சுற்று ஒடி வந்துவிட்டேன். என் அப்பா அதற்குள் என்னை தேடிப் பிடித்துக் கொண்டார். சாமி வந்த ஆசாமி கோயிலுக்குள் மீண்டும் சென்று இடும்பன் சுவாமியின் வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார். அதற்குள் சிலர் அவரைப் பிடித்து அவருக்கு விபூதியை நெற்றியில் தேய்த்து அவருக்குப் பிடித்திருந்த இடும்பன் சாமியை மலையேற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பிறகும் பல முறை சாமி வந்து ஆடுபவர்களைப் பார்த்திருக்கின்றேன். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிதான் கண்முன்னே வந்து நிற்கும். இப்படி முட்டாள்தனமாக பயந்திருக்கின்றேனே என்று நினைத்துக் கொண்டாலும் வேடிக்கையான ஒரு அனுபவமாகத்தான் தோன்றும். பல முறை இதை நினைத்து நானே சிரித்துக் கொள்வதுண்டு!

1 comment:

  1. ஓம்
    அன்பு மகள் சுபா! நலம் வேண்டுகிறேன்.
    கிராமங்களில் உலகம் மிகவும் சிறியது. தனக்கு தெரிந்தவர்கள், உறவுகள், பழகிய இடம்,தன்னிடம் உள்ள புரிந்துகொண்டவரையிலான அனுபவம் இவையே அந்த உலகம்.
    உறவும் பிறரும் ஒருங்கே இணையும் நிகழ்வுதான் கோயில் கொடை. தொடர்ந்து ஏற்பட்டுள்ள வாழ்வின் நிகழ்வுகள் பசுமரத்தாணி போல் உள்ளத்தில் பதிந்திருக்கும் நிலையில் குறைபாடுகளுக்கு விடியல் எதிர்பார்த்து ஏங்கும் ஏழைமக்களுக்கு கொடைகோயில்களில் ஆழ்ந்த நம்பிக்கை விதைக்கிறது.
    வேடசந்தூர் வட்டத்தில், (தாலுகா) கோட்டாநத்தம் பிர்க்காவில் நான் வருவாய் ஆய்வராகப் பணியாற்றும் போது, கூடலூர் கிராமத்தில் வரிவசூல் தொடர்பாக கிராம அதிகாரிகளை ஊக்கப் படுத்த/ தணிக்கை செய்ய மேலதிகாரிகள் வந்து போவார்கள்.. பணியிலுள்ள தலையாரி (கிராமச் சிப்பந்தி) கோயில் சாமியாடி யாக இருந்தார்.. கிராம மக்களோடு மக்களாக நானும் கலந்து கொண்டு மக்களின் பேரார்வத்தையும், கள்ளங்கபடற்ற இனிமையான விருந்தோம்பலயும் கண்டு மிகவும் மகிழ்ச்சிகொண்டேன். வரி வசூல் எண்ணங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு உள்ளூர்காரனாக இணைந்திருந்தேன்.
    சம்பிரதாயச் சடங்களுக்குப்பின் நீண்ட அரிவாள் எடுத்து இளைஞர் இருவர், இடுப்பளவு உயரத்தில் பிடித்துக்கொண்டனர். சாமியாடி துள்ளிக்குதித்து அரிவாளின் கூரான பகுதியின் மீது ஏறி நின்றுகொண்டே கண்களை எரச் செறுகிக்கொண்டே அவர் பக்தர்களின் வேண்டுகோளுக்கும், குடும்பச் சிக்கல்களுக்கான காரணங்களை ஓரிரு வார்த்தைகளில், அல்லது வரிகளில் பதில் கூறுவார். அஷ்டாவதானியின் செயல் போல வரிசையாக ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்வார்.
    ஒரு மூதாட்டி ’மழை வேண்டுமே! சாமி எப்போ மழை வரும்?’ என்று கேட்டார். ’இன்றே மழை வரும்’ என்றார் சாமியாடி. வானம் வெளுத்தே இருந்தது. ஒரு மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது.
    ’ உள்ளத்தின் அந்தரங்க சுத்தமான ஆசைகள் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன’- அண்ணல் காந்திஅடிகள்.
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete