இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். விசுவின் அரட்டை அரங்கத்தில் இந்திய தேசிய தினத்தன்று நெய்வேலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் வழி ரு அருமையான விஷயத்தை அவர் நம் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தைச் சார்ந்த திரு விஷ்வநாதன் உருவாக்கியிருக்கும் அழகி என்ற தமிழ் மென்பொருளைப் பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தனது நிகழ்ச்சியிலேயே ஒரு அங்கமாக வைத்து, வந்திருந்த பார்வையாளர் அனைவரும் அந்த மென்பொருளை அறிந்து கொள்ளும் படி செய்து விட்டார் விசு. "தமிழில் கணினிகளில் பயன்படுத்த எத்தனையோ மென்பொருட்கள் வந்து விட்டன. ஆக இதில் என்ன விஷேஷம் இருக்கின்றது" என்று கேட்கத் தோன்றுகின்றது இல்லையா?
இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கும் இளைஞரான திரு. விஷ்வநாதான் உடல் நோயினால் வாடுபவர். தனது மனைவி மற்றும் குடும்பத்தாரின் அரவனைப்பின் வழி, வெளி உலக தொடர்புகளைப் பெற்று தனது கணினில் மென்பொருளை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றார். விசுவின் இந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு வருவதற்குள் உடல் உபாதையின் கரணமாக பல முறை வாந்தியெடுத்து சிரமப்பட்டிருக்கின்றார். 7 km தூரம் வெளியே செல்வதே இவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத சிரமமான ஒரு காரியம். எப்போழுதும் தனது நோயின் காரணத்தால் அறையிலேயே அடைந்து கிடக்கும் திரு. விஷ்வநாதானுக்குக் கணினியில் அதுவும் தமிழில் எதாவது செய்தே தீரவேண்டும் என்ற தனியாத ஆர்வத்தினால் தமிழில் எழுத வழிவகுக்கும் இந்த 'அழகி' மென்பொருளை உருவாக்கியிருக்கின்றார்.
இந்த மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள http://www.azhagi.com/ என்ற வலைப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள். இந்த மென்பொருளின் விலை மிகவும் மலிவாகவே இருக்கின்றது. சோதனை செய்து பார்க்க ஏதுவாக free download பகுதி ஒன்றும் வழங்கியிருக்கின்றார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Microsoft Office மென்பொருட்களிலும் மேலும் Yahoo, MSN chat போன்றவற்றையும் தமிழிலேயே செய்ய முடியும். இது ஒரு பாராட்டப்படக் கூடிய ஒரு சாதனை என்பதை மறுக்கவே முடியாது.
எத்தனையோ திறமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே முடங்கி விடுகின்றன. இம்மாதிரியான திறமைகளை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொலைக்காட்சிகள் அதிகமாகவே பங்கு வகிக்க முடியும். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் விசுவின் சேவை ஒரு நல்ல உதாரணம். அவரது சேவைத் தொடர வேண்டும்.
No comments:
Post a Comment