இந்தப் பகுதி ஒழுக்கம் ஒழுங்கு என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றது. பொதுவாகவே நல்ல சிந்தனை நல்ல செயல் என்று பேசும் போது நமக்குப் எப்போதும் பிறருக்கு அறிவுறைக் கூறி "இப்படி நடந்து கொள், நீ செய்வது தவறு, இப்படி மாற்றிச் செய், என்னைப் போல இருக்கப்பழகிக் கொள்" என்று பலவாறாக நம்மை சிறந்தவர்களாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கவே நமது எண்ணமும் மனமும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் அந்தத் தவறுக்கு நான் தான் காரணமாக இருக்கின்றேன் என்பதைப் பார்க்க மனது தயங்குகின்றது. பிறரின் மீது அந்த தவற்றுக்கான காரணத்தைச் செலுத்தி மற்றவர்கள் தான் அந்தப் பிரச்சனை உருவாகக் காரணமானவர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்ளும் ஆசாமிகளாகவே நாம் பெரும்பாலும் இருக்கின்றோம். நமது சுய தவறுகளை மணக்கண்ணைக் கொண்டு நன்றாகப் பார்த்து நானும் தவறு செய்தவர் தான்; நான் தான் அந்தத் தவறு நடப்பதற்குக் காரணமாக இருந்தேன் என்று நமது மனசாட்சியிடம் பேசக்கூடிய தைரியமற்ற கோழைகளாகவே பெறும்பாலும் நாம் இருக்கின்றோம்.

ஒழுங்கு என்பது வெளியில் காட்டிக் கொள்ளக் கூடிய ஒன்று மட்டுமல்ல. அது மனதின் அடித்தளத்திலேயே இருக்க வேண்டும். பிறருக்காக ஒழுங்காக இருப்பதாக என்னை நான் வெளியே காட்டி கொண்டே உள்ளே, மனத்தில் ஒழுங்கீனத்தை வளர்த்துக் கொண்டு வந்தால் அங்கே உண்மையற்று போய்விடுகின்றது. யாருக்காக நான் இந்த உலகில் வாழ்கின்றேன் என்ற கேள்வியை நான் அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமே என்ற காரணத்திற்காக நான் எனக்குப் பிடிக்காத ஒன்றை அது மனசாட்சிக்கு முறன்பாடான ஒன்றாக இருப்பினும் அதை நான் செய்யலாமா..? அதனை நான் செய்வதனால் என்னுடைய மனதிற்கு நான் ஒழுங்கானவராக இருக்கின்றேனா?
மனம் முழுவதிலும் அழுக்கையும் அசுத்தத்தையும் வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நான் எப்படி ஒழுக்கத்தைப் பற்றிப் பேச முடியும். நான் என்னளவில் நல்ல எண்ணங்கள் இல்லாத நிலையில் பிறரிடம் நல்லெண்ணத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லதவராகி விடுகின்ற நிலையில் எப்படி நான் பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்க முடியும். வீட்டில் வேலை செய்யும் தனது வேலைக்காரியிடம் அன்பு காட்ட முடியாத ஒரு ஆசிரியை பள்ளியில் மாணவர்களிடம் அன்பைப் பற்றி பாடம் நடத்துவது என்பது எப்படி சாத்தியமாகும்?
நாம் பெரும்பாலும் பிறருக்காக வாழ்வதாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிறருக்காக வாழ்வது என்பது நல்ல சிந்தனை; அது பிறருக்கு உபயோகப்படும் வகையில் பிறரின் நல்வாழ்வுக்கு உதவுவது, பிறர் மேன்மைக்கு உதவுவது போன்ற நல்ல உதாரணங்களுக்குப் பொருந்தும். ஆனால் என்னுடைய வாழ்க்கையே பிறர் புகழ்வதற்காகவும், பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதற்காக பயந்து அஞ்சி ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு வாழ்வதுமாக இருந்தால் அதனால் எனக்கு என்ன பயன்? நானே என்னை, எனது சிந்தனைகளை, எனது வாழ்க்கை முறையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் அகத்திலே ஒரு வாழ்க்கையும் புறத்திலே மற்றொரு வாழ்க்கையும் என்று இரண்டு வாழ்க்கையை வாழும் நிலைதானே எனக்கு ஏற்படும். ஏன் இந்த conflict? என் மனதில் தோன்றும் எண்ணங்கள், உண்மையான, சரியான ஒன்று தான் என்பதில் முதலில் எனக்கு நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கை உறுதியைத் தரும் போது உள்ளே ஒரு வாழ்க்கை வெளியே வேறு ஒரு வாழ்க்கை என்ற நிலை தோன்ற வழியில்லையே.
அப்போதுதானே மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்!
No comments:
Post a Comment