[1 october 1982]
"We all want security physically as well as emotionally and this is becoming more and more difficult and painful." - J.K.
எனது சிந்தனை....
எதிரிகளிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் இன்றைய பல அரசாங்கங்களின் முக்கியப் பிரச்சனை. புறத்திலே மட்டும் இந்தக் கவலையில்லை. மனத்திலே நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கவலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
நமக்கு ஏற்படுகின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பது அச்ச உணர்வே. பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் மனதில் பயம் தோன்றுகின்றது. பய உணர்வு ஏன் தோன்றுகின்றது என்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் மிக முக்கியக் காரணமாக அமைவது பாதுகாப்பு இல்லாமை தான். பாதுகாப்பு இல்லாமல் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுகின்ற சமயத்தில் மனத்திலே பயம் பூதாகாரமாக வியாபித்து விடுகின்றது.
மனம் பல வகையில் கற்பனை செய்யும் திறமையை பெற்றிருக்கின்றது. உண்மையில் நடக்காத பல விஷயங்களை மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியும். அந்த கற்பனையை மீண்டும் மீண்டும் செய்து மனதிலே பதிய வைக்கும் போது அந்த கற்பனை மனதிலே நிஜமாகிப் போய் விடக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. மனத்திலே காண்கின்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் நினத்துப் பார்த்து அந்த நினைவுகளையே நிஜம் என நினைக்கும் ஒரு நிலையை அடைந்தவர்களால் நிஜமாக புற உலகில் நடப்பதைக் காணமுடியாது. மனம் அடிப்படையில் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பதையே விரும்புகின்றது. அளவுக்கு மீறிய பிரச்சனைகள், கவலைகள் தோன்றும் போது அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாதவர்கள், கற்பனை செய்து, அந்தக் கற்பனை உலகில் வாழ்வதையே பாதுகாப்பாக நினைக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர். சில வேளைகளில் தங்களையே வருத்திக் கொள்ளும் வகையில் கூட கற்பனைகள் அமைந்து விடுவதுண்டு. இது ஒரு வகையான திரிபு நிலை. உண்மையை உண்மையாகக் காணமுடியாத நிலை.
உறவுகள், சுற்றத்தார், குடும்பத்தினர் என சொந்தங்களை விரும்பி அமைத்துக் கொள்வதும் இந்தப் பாதுகாப்பை எண்ணித்தான். பொதுவாக திருமணப் பேச்சை எடுப்பவர்கள் கூட, பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக ஒரு துணை தேவை என வலியுறுத்தியே திருமண பந்தத்தையே ஆரம்பித்து வைக்கின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் கூட, பிற்காலத்தில் வயதான காலத்தில் பிள்ளகள் உதவுவார்களே என நினைப்பவர்களும் உண்டு. சுற்றத்தாரின் அரவணைப்பில் இருக்கும் போதும் நமக்கு பாதுகாப்புக் கிடைப்பதாக நினைத்துக் கொள்கின்றோம்.
ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. எனது வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்து விஷயங்களுக்குமே நானே மூல காரணமாக அமைகின்றேன். எனது துன்பங்களை என் உறவினர்களால் ஓரளவு தீர்த்து வைக்க முடியுமே தவிர முற்றாக ஒழித்து விட முடியாது. அவர்களால் ஆறுதல் சொல்ல முடியுமே தவிர வேதனையிலிருந்து என்னை வெளியேற்றி உடனே ஒரு தீர்வினை எனக்குத் தந்து விட முடியாது. இதுதான் உண்மை. அவரவர் வாழ்க்கைக்கும் அவரவரே பொறுப்பு. ஆக மனதில் உறுதியையும், தெளிவையும், தன்னம்பிக்கையையும் சேர்த்துக் கொள்ளும் போதுதான் படிப்படியாக பய உணர்வை போக்கிக் கொள்ள முடிகின்றது.
No comments:
Post a Comment