Tuesday, October 14, 2003

JK's Letters to the Schools - 6



15 February 1982 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில வரிகள்....

"What are you going to become as a human being? ..... Are you going to become a mediocre human being without any passion, in conflict with yourself and with the world? This is really a serious question you have to ask yourself."
- by J.K



நான் பல முக மூடிகளை வைத்திருக்கின்றேன். மற்றவரின் தேவைகேற்ப முக மூடிகளை மாற்றிக் கொண்டு நான் என்னை அவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கின்றேன். பிறர் விரும்பும் வகையில் என்னைக் காட்டிக் கொள்வதுதான் சரி என்று நினைக்கின்றேன். அதனால் எனக்கு இந்த முகமூடிகள் தேவைப்படுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாமல் இருந்தால் எங்கே, நான் என்னோடு பழகும் பிறரை திருப்தி படுத்தமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றேன். ஆனால் என்னோடு நான் சம்பாஷித்துக் கொள்ள எனக்கு முகமூடி தேவையா என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்க மறந்து விடுகின்றேன். சில வேளைகளில் நான் அணிந்திருந்த முகமூடிதான் உண்மையில் நான் என்று என்னையே நான் பொய்யாக நினைத்துக் கொள்கின்றேன். முக மூடிகள் இல்லாமல் நான் என்னைக் காண எனக்கு தைரியம் இருக்கின்றதா? முகமூடிகள் இல்லாமல் நான் என்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள எனக்கு தைரியம் இருக்கின்றதா?

என்னை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன். உலகமே என்னைத்தான் பாரட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன். என்னை நான் மிகவும் தூய்மையானவராக, உயர்ந்த சிந்தனை உடையவராக, அன்புள்ளம் படைத்தவராக, அதோடு 'எல்லாம்' தெரிந்தவராக காட்டிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த மாயத்திரையை பிறர் கிழித்தெரியும் போது திகைத்து நிற்கிறேன்.

என்னுடைய எல்லா முகமூடிகளும் கிழிந்து விட்ட நிலையை அந்த கணத்தில் தான் நான் உணர்கின்றேன். இதுவரை நான் போட்டிருந்த அனைத்து முகமூடிகளும் நிறந்தரமற்றவை என்பதை உணரும் போது ஆள்மனத்தில் மாபெரும் சலனம் தோன்றுகின்றது. அப்படியென்றால் எதுதான் நிரந்தரம்?முகமூடிகளைத் தூக்கி எறிந்து விட்டு என்னை, எனது சிந்தனைகளை, எனது முகமூடியற்ற முகத்தை நானே எந்த விதமான மாயாஜாலங்களும் இன்றி பார்க்கின்றேன். நான் என் இப்படி இருக்கின்றேன்?

நான் ஏன் இப்படி சிந்திக்கின்றேன் என்று என்னையே நான் கேள்விகள் கேட்கின்றேன். என்னை இப்போது என்னால் சரியாகப் பார்க்க முடிகின்றது. ஒரு தந்தைக்கும் தாய்க்கும் மகளாக அல்ல; ஒரு தோழனுக்கும் தோழிக்கும் தோழியாக அல்ல; ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரு சகோதரியாக அல்ல; ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பொறியியலாளராக அல்ல; ஒரு மனிதராக என்னை நான் காண்கின்றேன். இந்த முகமூடிகளையெல்லால் தூக்கி வீசிவிட்டு, நான், எனது ஆன்மாவின் சிந்தனை, எனது அபிலாஷைகள் யாவை என்பதை சிந்திக்கின்றேன். இப்போது எனக்கு எந்த வித மாயையும் அற்ற நிலையிலேயே என்னை பிடிக்கின்றது. இதில் சலனம் இல்லை. என் முகமூடி கிழிந்துவிடுமோ என்ற அச்சம் இல்லை!

No comments:

Post a Comment