Wednesday, November 26, 2003

Work Life

அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றேன் என்று அன்பானவர்கள் என் மேல் கோபப்பட்டுக் கொள்வார்கள். பற்பல தொடர் பிரச்சனைகளைக் கணினிகள் வழங்கிக் கொண்டிருக்கும் போது வேலையை அப்படியே விட்டு விட்டு 5 மணிக்கெல்லாம் வீடு திரும்பலாம் என்பதெல்லாம் சாத்தியப்படுத்தப்பட முடியாத ஒன்றாகி விட்ட நிலை. வேலையில் நம்மை மறந்து மூழ்கிப் போய்விடும் போது, நேரம் செல்வதே தெரியாமல் போய்விடுகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதமாக என்னையே மறந்து விடச்செய்யக்கூடிய வகையில் வேலை பளு அதிகரித்து விட்டமையால் வார இறுதி நாட்களிலும் அலுவலகத்திலேயே 'இனிமையாக' பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றேன்.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை அலுவலகமே கதி. சில நேரங்கங்களில் அலுவலகம் தான் புகுந்த வீடாகி விட்டதோ என்ற நிலை தான் மனதில் தோன்றுகின்றது!
நம்மில் பலருக்கு இப்படிப்பட்ட நிலை தவிர்க்கமுடியாத ஒன்று தான் என்பதை நான் அறிந்திருக்கின்றேன். வேலையில் மூழ்கி அதிலேயே மெய்மறந்து போய்விடும் நிலை என்பது வற்புறுத்தலால் வருவதில்லை. ஒரு கடமையில் ஈடுபாடு இருக்கும் போது, அதனை மனம் விரும்பும் போது மனதில் மற்ற எண்ணங்கள் தோன்றாமல் அலுவலகமே கதி என்ற நிலமைக்கு வந்து விடுகிறோம் என்றே நினைக்கின்றேன்.

நம்மை மறந்து இப்படி வேலையிலேயே மூழ்கிப்போய்விடுவதால் சில வேளைகளில் வெளி உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடுகின்றது. ஆனாலும் இணையம் தந்திருக்கும் வாய்ப்பு என்பது உலகின் எல்லா மூலைகளிலும் நடக்கும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையை வழங்கியிருப்பதால் 24 மணி நேரமும் இணையத் தொடர்புள்ள வகையிலான தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவதில்லை. மின்னஞ்சல் மூலமாகவும் MMS SMS வழியாகவும் உடனுக்குடன் நண்பர்களுடனும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடிகின்றது. தொலைத் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியினால் தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பது சாத்தியமாகின்றது. ஆனாலும் பல நேரங்களில் அலுவலகமே உலகம் என்ற நிலையை படிப்படியாக இந்தப் போக்கு வளர்ப்பதையும் பார்க்க முடிகின்றது. எப்படி இந்த நிலையை சமாளிப்பது என்பது தான் பிரச்சனையே!

No comments:

Post a Comment