Monday, November 24, 2003

Friendship

நல்ல நண்பர்கள் அமைவது என்பது சாதாரண ஒரு விஷயமில்லை என்பதை வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கின்றது. இளம் வயதில் பள்ளி நாட்களில் என்னோடு சேர்ந்து படித்த நண்பர்களில் இரண்டு பேர்தான் இன்றளவும் என்னோடு தொடர்புடன் இருக்கின்றனர். !இவர்கள் இருவரும் எனது இனிய தோழிகள். மற்ற நண்பர்கள் எல்லாம் எங்கே என்ன செய்கின்றார்கள் என்பது கூடத் தெரிவதில்லை.

உற்ற நண்பர்களாக பள்ளிக் காலத்தில் இருந்தாலும் காலம் ஏற்படுத்தும் பிரிவு நாள்பட நாள்பட ஒருவரை ஒருவர் மறக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விடுகின்றது. காலம் செல்லச் செல்ல பல புதிய நண்பர்கள் அறிமுகமாகின்றார்கள். நண்பர்கள் என்பவர்கள் ஓரளவிற்காவது ஒத்த சிந்தனையுடையவர்களாக இருந்தால் தான் அந்த நட்பில் இனிமையை உணரமுடிகின்றது. ஓரளவேனும் மன அலைகள் ஒத்தவர்களாக இருக்க வேண்டும். ஓரளவிற்காவது சில விஷயங்களில் ஒரே மாதிரியான விருப்பம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நட்பு வளர்வதற்கு பதிலாக வெறுப்பு வளர்வதற்கான நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நல்ல நண்பர்கள் என்பவர்கள் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கு மட்டுமல்ல; மாறாக மனதில் பிரச்சனைகளும் கவலைகளும் தோன்றும் போது அதனை பகிர்ந்து கொள்வதற்கும் தேவை. நன்றாக நம்மை புரிந்து கொண்டவர்கள் தான் நண்பர்களாக இருக்க முடியும். புரிந்துணர்வு இல்லாமல் ஏதாவது ஒரு தேவைக்காக உறவை வளர்த்துக் கொள்ளும் போது அங்கே உண்மையான நட்பு இல்லாமல் போய்விடுகின்றது. சில வேளைகளில் நண்பர்களால் உருவாகின்ற பிரச்சனைகளை பார்க்கும் போது இந்த மாதிரி நட்பு தேவையே

இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒரு சிலர், நண்பர்களை அவர்களது பலகீனத்தை கேலி செய்தே சந்தோஷமடைபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை எப்படி நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வது?

மனிதர்கள் மாத்திரம் தான் நண்பர்களாக இருக்க முடியும் என்பதல்ல. புத்தகங்களும் கூட நமக்கு நல்ல நண்பர்களாகலாம்; மனதிற்குப் பிடித்த விஷயங்களை அவை தெளிவுபட நமக்கு விவரிக்கும் போது!

No comments:

Post a Comment