Tuesday, November 11, 2003

JK's Letters to the Schools - 9

15 November 1982
..... A relationship is a process of learning. A relationship is not a static affair but a living movement and so it is never the same. What it was yesterday it is not today. When yesterday dominates in relationship, then relationship is what it was, not a living thing. ..

உலகம் கணம் கணம் மாறிக் கொண்டேயிருக்கின்றது. உயிருள்ள பொருள்கள் மாறுகின்றன; உயிரற்ற பொருட்களும் மாறுகின்றன. அதோடு மனித மனங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் கற்றுக் கொண்டேயிருப்பது தெரிகின்றது. வாழ்க்கை அனுபவம் புகட்டும் பாடத்தில் மனித மனங்களில் மாற்றங்கள் தென்படுவது மிக மிக சகஜம்.

ஒரு உறவு என்பது எப்படி அமைகின்றது என்பது மிகவும் சூட்சமமான விஷயமாகப் படுகின்றது. உலகில் பிறக்கும் போதே உறவுகலுடனேயே பிறக்கின்றோம். உலகுக்கு வந்த காரணத்தைப் புரிந்து கொண்டு கடமையைச் செய்கின்றோமோ இல்லையோ ஆனால் உறவுகளின் வட்டத்தை பெறுக்கி அதில் இன்பம் காண்பதை வளர்த்துக் கொள்கின்றோம். இயற்கை அதில் இன்பத்தை வைத்திருக்கின்றது.

உறவுகளைச் சட்டங்களைப் போட்டு வைத்து பாதுகாப்பது என்பது முடியாத காரியம். ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கின்றதா? இளம் வயதில் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களை அவர்கள் வயதான பிறகு பாதுகாப்பது ஒரு மகன் அல்லது மகளின் கடமை என்று சட்டம் இருக்கின்றதா..? அல்லது இப்படிப்பட்ட சட்டங்கள் தான் தேவையா? சட்டங்களைக் கொண்டு மனித உறவுகளை கட்டிக் காக்க முடியுமா..?

உறவுகளின் தன்மை மாறிக் கொண்டே தான் இருக்கும். இது காலத்தின் கட்டாயம். சிந்தனை வளர்ச்சி; உலக அறிவு; வாழ்க்கை தெளிவு; வாழ்க்கைப் பாடம் புகட்டும் ஞானம் இவையெல்லாம் சேர்ந்து மனித மனங்களில் வளர்ந்திருக்கும் உறவுகளின் தன்மைகளை மாற்றிக் கொண்டே தான் இருக்கின்றன. 'அன்பு' என்ற ஒன்று இருந்தாலும் அது வெளிப்படும் தன்மை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு கொண்டே தான் இருக்கும். உறவுகளில் ஏற்படுகின்ற எல்லா பிரச்சனைகளுக்குமே மூல காரணமாக அமைந்து விடுவது 'நமது எதிர்பார்ப்புக்கள்' தான். எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் வாழ்வது மனித உடலெடுத்த நமக்கு கஷ்டமான ஒன்று. எதிலும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதால் தான் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணமுடியும். ஆனால் அதே சமயத்தில், எதிர்பார்ப்புக்களால் ஏற்படும் மன வேதனைகளையும்
மறுப்பதற்கில்லை.

அவரவர் கடமையை அவரவர் செய்தால் எங்கே பிரச்சனை வரப்போகின்றது? மனதில் தூய்மையும் தெளிவும் இருந்தால் ஏன் பிறரை தனது சுய சந்தோஷத்திற்காக பலியாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றப்போகின்றது? வாழ்க்கையில் அனுபவிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுமே மாந்தர்கள் அனைவரும் நீதியுடனும், கடமை உணர்வுடனும் இருந்து விட்டால் தோன்றப் போவதில்லை. உலகம் பிரச்சனைகள் நிரம்பியதே. மனிதர்கள் பல வகை; அவர்களின் பக்குவத்திற்கேற்ற சிந்தனை போக்கு; வாழ்க்கை முறை. பிரச்சனைகள் நிரம்பிய இந்த உலகத்தில் இன்பத்திற்கும் பஞ்சமில்லை. பிரச்சனைகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் வரை உலகில் இறைவன் வழங்கியிருக்கும் இன்பங்களை ரசிக்கும் தனமையை இழந்து விடுகின்றோம். பாரதியார் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா..? என்று எவ்வளவு அழகாகப் பாடுகின்றார். (பாடல் முழுமையும் Suba's Musings எனும் எனது வலைப்பூவில் Oct 14ம் திகதிக்கான குறிப்பில் இருக்கின்றது)

இசையில் இன்பம்; சிரிப்பில் இன்பம்; அன்பில் இன்பம்; வெற்றியில் இன்பம்; தியாகத்தில் இன்பம்; கடமையைச் செய்வதில் இன்பம்; இறைவனோடு கலப்பதில் இன்பம்; இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன. ஆனால் அதனை அனுபவிக்கும் எளிமையான மனம் நமக்கு இருக்கின்றதா என்பதே கேள்விக் குறி!

No comments:

Post a Comment