Sunday, November 2, 2003

JK's Letters to the Schools - 8



1 Oct 1982
Mind is infinite, is the nature of the universe which has its own order, has its own immense energy. It is everlastingly free. The brain, as it is now, is the slave of knowledge and so is limited, finite, fragmentary. When the brain frees itself from its conditioning, then the brain is infinite.... - J.K.

மேல் உள்ள வாசகத்தை வாசித்த போது என்னுள்ளே எழுந்த எனது சிந்தனை....கீழே தொடர்கின்றது.

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே என் மனம் யாசிக்கின்றது. என் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும் போது என் மனதிற்கு அமைதியும் அலாதியான சந்தோஷமும் கிடைக்கின்றன.

ஒரு நண்பர்  ஒருவர் ஒரு முறை சொன்ன வாசகங்கள். "இப்போதெல்லாம் நமக்கு எங்கே சுதந்திரம் இருக்கின்றது. வெளி உலகத்தில் மட்டும் தான் நமது சுதந்திரம் பறிக்கப்படுகின்றது என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே, நமது மனதிற்குள்ளேயே சுதந்திரம் பறிபோய்விட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். சமுதாயத்தின் அழுத்தம், அந்த அழுத்தம் நமது மனதிற்குள்ளே உருவாக்கும் கட்டளைகள் நம்மை நாமாக இருக்க விடுவதில்லை. பிறரது கருத்துக்கள் வலிய நமது மனதிற்குள் திணிக்கப்படுகின்றன. ஆக சுதந்திரம் அற்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம்."

இன்னொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்; தமிழர்தான். பேச்சு ஒரு விஷயத்தைப் பற்றியது. பேசும் போது தனது கருத்தைத் தெரிவித்த நண்பர், எனது கருத்தை நான் சொல்ல எத்தனிக்கும் போது உரையாடலை மாற்றி அவர் சொல்வதுதான் சரி என்று அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். நான் சொல்ல வந்த கருத்தைக் கேட்க அவருக்கு விருப்பமில்லை; ஏனென்றால் எற்கனவே அவரது மனதிற்குள் தனது கருத்துக்கள் எல்லாமே சரியானவை; முழுதும் சரியானவை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய கருத்தைத் தெரிவிக்க அங்கு சுதந்திரம் இல்லை. இதேபோல பல வேளைகளில், பலரோடு பேசும் போது இந்த வகை அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. கலந்துரையாடல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் ஒரு விஷயம் ego என்ற ஒன்று வந்து மோதும் போது உடனேயே அங்கு முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கின்றது.

நமது மனதிற்குள் எண்ணற்ற கருத்துக்கள் முளைக்கின்றன. அந்தக் கருத்துக்கள் எல்லாம் சரியானவைதானா என்பதை யோசிக்க வேண்டியது அவசியமாகின்றது. அப்போதுதான் "சிந்தனை வளர்ச்சி" என்ற ஒன்று தோன்றும். ஒரு உரையாடலின் போது "இந்த மேதாவி சொல்லி விட்டார்; அந்த ஞானி சொல்லிவிட்டார்; அவரது கருத்துக்கள் தான் எவ்வளவு சரியானவை; ஆக மற்றவையெல்லாம் பொய்யானவை; உனது கருத்துக்கள் முட்டாள்தனமானவை, ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவை" என்று ஒருவர் நினைப்பாரேயானால் அவர் சிந்தனை என்ற ஒன்றையே மறுப்பவர் என்று தான் கொள்ள முடியும்.

எதற்கெல்லாமோ சுதந்திரத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நாம் நமது மனதிற்குள்ளேயே பற்பல வகைகள ல் அடிமைகளாகிப் போயிருக்கின்றோம் என்பதை ஏன் சிந்திக்க மறந்து விடுகின்றோம்? ஒருவர் கூறிய விஷயத்தைக் கேட்டவுடனேயே அதை அப்படியே எந்த சிந்தனையுமின்றி எனது கருத்தாக நான் எடுத்துக் கொண்டேன் என்றால் எனக்கு உண்மையான ஆன்ம வளர்ச்சி இருக்குமா..? ஆனால், நான் கேட்ட விஷயத்தை கொஞ்சம் யோசித்து, அந்த விஷயம் எந்த வகையில் எனது சிந்தனை, அனுபவம், உலக நியதி, போன்றவற்றோடு ஒட்டியோ அல்லது மாறுபட்டோ செல்கின்றது என்று யோசித்து அதில் தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை ஒதுக்கும் போதுதானே சிந்தனை வளர்ச்சி என்ற ஒன்றே தோன்றும்!

பற்பல விலங்குகளை நாமே போட்டுக் கொள்கின்றோம். அதற்கு பண்பாடு, கலாச்சாரம், சமயம் என்று அழகிய பெயர்களை அரணாகப் பயண்படுத்திக் கொள்கின்றோம். ஏன் சிந்தனையில் நமக்கு நாமே விலங்கை மேலும் மேலும் போட்டுக் கொண்டிருக்கின்றோம்?

எனக்கு நானே சிந்தனைச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள முடியாத போது பிறரது சுதந்திரத்தைப் பறிப்பதற்கு எந்த வகையில் எனக்கு நியாயம் இருக்கின்றது..?

No comments:

Post a Comment