Thursday, November 6, 2003
Jaws
கடலில் விளையாடுவது என்பது சந்தோஷமான ஒரு விஷயம்தான். பல மணி நேரங்கள் நண்பர்களோடு கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது என்றால் எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகவும் பிடிக்கும். பினாங்குத் தீவில் இருந்ததால் சிறிய வயதிலிருந்தே கடற்கறைக்கு ஏறக்குறைய ஒவ்வொரு வார இறுதியிலும் விளையாடுவதற்காகச் சென்று விடுவோம்.
அப்போது தான் ஸ்பீல்பெர்க்கின் Jaws ஆங்கிலப்படம் திரையரங்குகளில் வந்திருந்தது. இம்மாதிரியான படங்களைப் பார்ப்பதென்றால் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம். வீட்டில் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டு அந்தப்படம் பார்க்கச் சொன்றிருந்தோம். படம் பார்க்கும் போது அவ்வளவு திகிலாகவும், குஷியாகவும் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்தது தான் பிரச்சனையே.
Jaws படத்தைப் பார்த்ததிலிருந்து எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் கடலில் சுராமீன் வாயைத் திறந்து கொண்டு என்னை கடிக்க வருவதாக ஒரு அனாவசியக் கற்பனை. கடலில் கொஞ்ச தூரம் சென்று விளையாடுவேன். பிறகு மீன் வந்து கடித்து விடும் என பயந்து ஓடி வந்து விடுவேன். கடற்கரையில் மீன் பிடிக்கும் சிறிய படகுகளில் கயிறு கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீரில் நிற்கும் போது அந்த கயிறு காலில் பட்டு விட்டாலும் மீன் கடிக்க வந்து விட்டது என்று கத்திக் கொண்டு ஓடி வருவேன். அப்படி ஒரு பயம். பல ஆண்டுகள் ஆனது எனக்கு இந்த பயம் தொலைவதற்கு.
சினிமா படங்களினால் பல பாதிப்புக்கள்; அதிலும் குழந்தைகளுக்கு எம்மாதிரியான உளவியல் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்பதை இந்த மாதிரியான சுய அனுபவத்திலேயே தெரிந்து கொள்ள முடிகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment