Sunday, December 24, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 144

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் 19ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞராக விளங்கியவர். இன்று அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் எத்துணை பேருக்கு அவரைத் தெரியுமோ, என்பது பெரிய கேள்விக்குறியே.

உ.வே.சாவின் வாழ்வில், தன் இளம் வயதில் அவர் கல்வி கற்க ஆரம்பித்த நாட்களில் மகாவித்வானைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்ற பேராவலுடன் பெருங்கனவினை மனதில் வளர்த்து வந்தார். அவரது கனவு மெய்ப்பட்டு வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்க்கல்வி பாடம் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆறு வருடங்கள் தான் அவருக்கு இவர் மாணவராக இருந்தார் என்றாலும் உ.வே.சாவின் சிந்தனையை முழுமையாக ஆர்ப்பரித்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஏனெனில், தன் சுயசரிதத்தை எழுதுவதற்கு முன்னர், மகாவித்துவானின் வரலாற்றை இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தார் உ.வே.சா.  அதோ தன் சரிதத்திலும் ஏறக்குறை பெரும்பகுதிகளில் மகாவித்துவான் பற்றிய தகவல்களை வழங்கியிருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, மணிமேகலை போன்ற நூல்களைத் தமிழறிஞர்கள் பலர் பாராட்டி சொல்லும் போது, எப்போதும் உ.வே.சா தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களைப் போற்றிப்புழ்வார், என உ.வே.சா அவர்களின் மகன் கலியான சுந்தரம் அவர்கள் என் சரித்திரம் நூலுக்கு வழங்கிய முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ்க்கல்வியினால் தமக்கு ஏற்பட்டுவரும் பெருமைக்கெல்லாம் அவரே காரணம் என்று தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கின்றார் உ.வே.சா.

இத்தகைய புகழுரைகளைக் கேட்ட பலரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலாக வெளிவந்தால் அது பலருக்கும் பயன்தரும் எனப் பல முறை சொல்லிக் கொண்டிருக்க, அந்த எண்ணம் உ.வே.சா அவர்களுக்கு மனதில் வலுப்பெற்று வந்தது.

1930ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் சென்னையில் தனது தியாகராச விலாசம் வீட்டின் மாடியிலிருந்து படிகளில் நடந்து வரும் பொழுது கால் தடுக்கி கீழே விழுந்து விட்டார் உ.வே.சா. காலில் அடி நன்றாகப் பட்டுவிட படுத்தப் படுக்கையாகி விட்டார். சில நாட்கள் ஆகியும் குணமாகாத நிலையில் அவரது இல்லத்திலேயே அவருக்கு சத்திரசிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் அதிகமாகப் படிக்கக்கூடாது, ஓய்வுதான் தேவை என மருத்துவர்கள் சொன்னாலும் அவரால் இந்தக் கட்டளைகளை ஏற்க முடியவில்லை. படுக்கையில் இருந்த போது அவருக்கு ஆசிரியரின் நினைவு மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிக்காமல் தனது சரித்திரம் முடிந்து விடுமோ என்ற அச்சம் வந்திருக்குமோ எனத் தனது நூலான என் ஆசிரியப்பிரானில் குறிப்பிடுகின்றார் உ.வே.சாவிடம் தமிழ்க்கல்வி பயின்ற கி.வ.ஜகந்நாதன் அவர்கள். தான் மகாவித்துவான் பற்றி எழுதிவைத்திருந்த குறிப்புக்கட்டை எடுத்துவரும்படி தமக்கு கட்டளையிட்டு  தான்   உடல் நலிவுற்றுக்கிடந்த அவ்வேளையில் அவரது சரிதத்தை எழுதும் பணியைத் தொடங்கியதைக் குறிப்பிடுகின்றார். உ.வே.சா சொல்லச் சொல்ல, அந்த நூல்களை எழுதியவர் கி.வ.ஜகந்நாதன் தான். இப்படித்தான் அந்த இரு நூல்களும் பிறந்தன.

முதல்பாகம் 1933ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 1934ம் ஆண்டும் என வரிசையாக ஓராண்டு இடைவெளியில் இந்த நூல்கள் பிறந்தன. தமிழ் நூல்கள் அச்சுப்பணியாக்கம் போல இந்த இரு வாழ்க்கை வரலாற்று நூல்களும் உ.வே.சா அவர்களின் சிறந்த படைப்புக்களாகத் திகழ்கின்றன.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் சரிதத்தை எழுதத் தொடங்கிய பின்னர் 1931ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சென்னை மயிலாப்பூரிலுள்ள 'லா ஜர்னல்' பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய உறவினர் இராமச்சந்திர ஐயருடன் உ.வே.சா அவர்களைப் பார்க்க வந்திருக்கின்றார். 1932 ஜனவரி தொடங்கி 'கலைமகள் ' என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டு அதில் உ.வே.சாவின் கட்டுரைகள் இடம்பெறவேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டுக் கொண்டதாக கி.வ.ஜா அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகின்றார். 'கலைமகள் ' என்ற பெயரிலேயே அதற்கு முதல் கட்டுரையை உ.வே.சா அவர்கள் எழுதித்தந்திருக்கின்றார். இதன் தொடர்ச்சியாக கலைமகள் பத்திரிக்கையில் கி.வா.ஜா அவர்கள் முதலில் துணை ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் மூன்று ஆண்டுகளில் கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். பத்திரிக்கையாக மட்டுமன்றி கலைமகள் பிரசுரத்தின் வழியாகத் தமிழ் நூல்களை வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் ஆலோசனையின் படி சில தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டமையை கி.வா.ஜா வின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.

உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்றின் முதல் 43 ஆண்டுகளின் நிகழ்வினை படம்பிடித்துக் காட்டுவது போல விவரிப்பது 'என் சரித்திரம்'. அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சாவின் வரலாற்றில் விடுபட்ட செய்திகளைத் தொகுத்து 'என் ஆசிரியப்பிரான்' என்ற பெயரிட்டு நூலாக வெளியிட்டவர் கி.வா.ஜா என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா அவர்கள் தனது சரிதத்தில் குறிப்பிடாவிட்டாலும் கூட அவரது பணிகளில் சிறந்த படைப்புக்களுள் ஒன்றாகத் திகழ்வது அவரது குறுந்தொகை அச்சுப்பதிப்பாக்கமாகும். குறுந்தொகை எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாக இடம்பெறுவது.

உ,வே.சா வெளியிடுவதற்கு முன்னரே திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் என்ற தமிழறிஞர் குறுந்தொகையை 1915ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டிருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாமல் ஏதோ ஒருவகையில் உரையெழுதி அச்சிடப்பட்ட பதிப்பு அது. அச்சில் குறுந்தொகை வந்துவிட்டதால், தான் அதே பணியை செய்ய வேண்டாம் என உ.வே.சா அவர்கள் நினைத்திருந்தார். ஆனாலும் அந்தப் பதிப்பில் பல செய்திகள் விடுபட்டிருந்தமையைக் கருத்தில் கொண்டு தானே குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பிக்க வேண்டும் என பணிகளைத் தொடங்கி விட்டார். குறிப்புக்களை எழுதி விரிவான உரையைத் தயாரித்தார். நச்சினார்க்கினியரும், பேராசிரியரும் ஏற்கனவே எழுதிய உரைகளை எங்குத் தேடியும் உ.வே.சாவிற்கு அவை கிட்டவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் எதையோ இழந்து விட்டது போன்ற நிலையில் உ.வே.சா இருந்ததாக கி.வா.ஜா குறிப்பிடுகின்றார். பொக்கிஷம் போன்ற இலக்கியங்களைப் போற்றத்தெரியாத மூடர்களை எண்ணி அவர் மனம் வருந்தியிருக்கும் போல..!

முதுமையினாலும் உடல் தளர்ச்சியினாலும் அவரால் வேகத்துடன் பல காரியங்களைச் செயல்படுத்த இயலவில்லை. ஆயினும் இந்த அச்சுப்பதிப்பின் எழுத்துப் பணிகளில் அவருக்குத் துணையிருந்து பெரிதும் உதவியவர் கி.வா.ஜா. இதனைக் குறுந்தொகை நூலின் முகவுரையில் உ.வே.சா பதிகின்றார். சென்னை பல்கலைகழத்தின் பொருளுதவியுடன், கேணி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு உ.வே.சாவின் உரையுடன் கூடிய குறுந்தொகை, 1937ம் ஆண்டு வெளிவந்தது.தொடரும்..
சுபா

No comments:

Post a Comment