Monday, December 25, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 145

சமய நிறுவனங்களில் நிர்வாகத்தில் பூசல்கள் நடப்பது என்பது புதிதல்ல. வாட்டிக்கன் ஆகட்டும், தமிழகத்தின் மதுரை ஆதீனமாகட்டும், காஞ்சி சங்கரமடமாகட்டும். ஒரு நிறுவனம் என்றாலே அதற்குள் ஏதாவது ஒரு உட்பூசல்கள் எழுவதைத் தடுக்க முடியாது. சமய நிறுவனங்களுக்கும் அது பொருந்தும் என்பதை செய்தி ஊடகங்களின் வழி கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன .

உ.வே.சா அவர்களின் வாழ்க்கை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் அறிமுகத்திற்குப் பின்னர், திருவாவடுதுறை சைவத்திருமடத்தோடு முற்றும் முழுதுமாக பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்பதை மறுக்கமுடியாது. அத்திருமடத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளில் உ.வே.சாவின் ஈடுபாடு இருந்தமையும்,  அத்திருமடம் உ.வே.சாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல நல்ல மாற்றங்களுக்கும் உயர்வுக்கும் அடிப்படையை அமைத்துக் கொடுத்தமையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். உ.வே.சா தன் சரிதத்தில் பதியாமல் விடுபட்ட ஒரு குறிப்பு, ஆனால் அவரது மாணவர் கி.வா.ஜ அவர்கள் என் ஆசிரியப்பிரான் நூலில் குறிப்பிடும் ஒன்று இத்திருமடத்தில் நிகழ்ந்தது.

1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அப்பொழுது மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் மடத்தின் தம்பிரான்களில் ஒருவரான காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த தலைமைப் பொறுப்பு ஏற்கும் விழாவில் உ.வே.சா அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்டார். மடத்தின் வழக்கப்படி அம்பலவாண தேசிகர் என்ற பட்டப்பெயருக்குப் பின் பதவி ஏற்போர் ஏற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்ற திருப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்த காலகட்டத்தில் திருமடத்தின் தலைமைப்பீடம் தனக்கே வேண்டும் என்று அதே மடத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அந்தச் சமயத்தில் சில கலவரங்கள் திருவாவடுதுறை ஆதீனத்தில்  நிகழ்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்தச் சூழலில் புதிதாகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தில்  தனக்குத் துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்று விரும்பி உ.வே.சா அவர்களை உடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக அறியமுடிகின்றது. ஆக, ஏப்ரல் 1920 முதல் உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் தொடர்ந்து சில மாதங்கள் தங்கியிருக்கின்றார். அந்தச் சமயத்தில் மடத்தின் சரசுவதி மகாலில் இருந்த ஓலைச்சுவடிகளை மீண்டும் கண்டு ஆராயும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. அச்சமயத்தில் உ.வே.சா தான் மட்டும் என்றில்லாமல் தனது மாணாக்கர்கள் சிலரையும் அங்கு வரச் செய்து உடன் இருக்கும் படி ஏற்பாடுகள் செய்து அங்கே தமிழ்ப்பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார். உ.வே.சா மடத்திலேயே இருந்ததால் தலைமைப் பீடத்திற்கு ஆசைப்பட்டோர் மடத்தில் கலவரங்களை நிகழ்த்தாமல் அமைதியாகிச் சென்றுவிட்டனர். திருவாவடுதுறை மடத்திலேயே அவரது தமிழ்ப்பணி இக்காலகட்டத்தில் வாசிப்பு, சுவடி ஆராய்ச்சி, பாடம் போதித்தல் இறைவழிபாடு என்று கழிந்து கொண்டிருந்தது.

அதே ஆண்டு நவராத்திரியின் போது உ.வே.சா ஆதீனத்தின் சார்பில் அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அப்போது அதற்குச் 'சுப்பிரமணிய தேசிகர் கலாசாலை' என்ற பெயர் வழங்கப்பட்டது. அங்குத் தமிழ்ப்பாடசாலையும் தேவாரப் பாடசாலையும் தொடங்கி நடத்தப்பட்டன. மடத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் திருமடமே உடையும் உணவும் வழங்கி ஊக்குவித்தது.

இதற்கு அடுத்த ஆண்டு, 1921ல் மாசி மாதத்தில் நிகழ்ந்த கும்பகோண மகாமகப் பெருவிழாவில் ஆதீனகர்த்தரும் உ.வே.சாவும் கலந்து கொண்டனர். அங்கு நடத்த இலக்கிய நிகழ்வுகளை உ.வே.சா முன்னின்று நடத்தும் வகையில் ஆதீனகர்த்தர் ஏற்பாடுகளைச் செய்து தந்திருந்தார்.

அதே கால கட்டத்தில் சென்னையில் உ.வே.சாவின் சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் இரண்டாம் பதிப்பு அச்சாகி வெளிவந்தன. நீண்ட இடைவெளியில் முன்னர் பதிப்பித்தபோது விடுபட்ட செய்திகளையும் தகவல்களையும் விளக்கங்களையும் இந்த இரண்டாம் பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார்.

இதற்கு அடுத்த ஆண்டு, 1922 ஜனவரி மாதத்தில் அப்போதைய காலணித்துவ இந்தியாவை ஆட்சி செய்த  ஆங்கிலேய அரசு,  புலவர்களைச் சிறப்பிக்கும் ஒரு நிகழ்வினை 13ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் இளவரசர் எட்வர்ட் இந்தியா வந்திருந்தார். தமிழ்ப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் அந்த நிகழ்வில் பரிசளித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர். அப்படிச் சிறப்பு செய்யப்பட்டவர்களில் உவே.சா அவர்களும் ஒருவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புப் பெறுவதற்காக மெட்ராஸ் புறப்பட்டார் உ.வே.சா. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு அணியவேண்டிய பிரத்தியேக தலைப்பாகை, அங்கி ஆகியவற்றை அணிந்து கொண்டு தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பினைப் பெற்றுக் கொண்டார்.  மெட்ராசில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்தபோது அதிர்ச்சி தரும் செய்தி அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து கிட்டியது. ஈராண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்றுக் கொண்ட ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் காலமானார் என்பது தான் அந்தத் துயரச் செய்தி. ஆதீனகர்த்தர் எழுதி உ.வே,சாவும் சாட்சிக் கையெழுத்து இட்டு வைத்துச் சென்ற உயிலின் படி ஆதீனத்தில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் அடுத்த ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கோண்டார்.

திருமடத்தில் முன்னர் ஏற்பட்ட குழப்பங்கள் மீண்டும் தலைதூக்கின. புதிதாக 1922ம் ஆண்டு மடத்தின் தலைமைப்பீடத்தை ஏற்றுக் கொண்ட  ஆதீனகர்த்தர் காலத்தில் இந்தக் குழப்பங்கள் மேலும் பெருகவே, தம்மோடு வந்து மடத்தில் தங்கியிருந்து உதவுமாறு ஆதீனகர்த்தர் கேட்டுக் கொள்ளவே உ.வே.சாவும் மீண்டும் மெட்ராசிலிருந்து புறப்பட்டு திருவாவடுதுறை சென்று அங்கு மடத்தில் தங்கியிருந்தார் என்பது தெரிகிறது. அங்கே நிகழ்ந்த பூசல்களும் பிரச்சனைகளும் குறைவதாக இல்லை. உ.வே.சா அவர்களின் சீரிய தமிழ்ப்பணி தொடர முடியாத நிலைக்கு உள்ளானது.    இதே வகையில் தொடர்வது தமது பதிப்புப் பணியைப் பாதிக்கும் என முடிவெடுத்து உ.வே.சா ஆதீனகர்த்தரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மெட்ராசுக்குத் திரும்பினார். தன் பதிப்புப் பணிகளில் மீண்டும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். அப்போது சீவக சிந்தாமணியின் 3ம் பதிப்பு பணிகள் தொடங்கி அதே ஆண்டு 3ம் பதிப்பும் வெளிவந்தது.

ஆரம்பமும் முடிவும் இல்லாத கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை நூலின் சுவடிப்பிரதி ஒன்று உ.வே.சாவிற்கு முன்னர் ஏடு தேடச் சென்ற சமயத்தில் கிடைத்திருந்தது. அதனை ஆராய்ந்து பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். இதனைப் பதிப்பிப்பதற்காக உ.வே.சா பெரும் உழைப்பைப் போடவேண்டியதாக இருந்தது. தயாரித்த ஒரு பிரதியை ராவ்பகதூர் கனகசபைப்பிள்ளையின் ஒரு சொற்பொழிவுக்காக வழங்கினார்.  ஆனால் அப்பெரியவர் எதிர்பாராதவிதமாக இறந்து போனமையால் அப்பிரதி இவர் கைக்கு வராமலேயே போனது. குறிப்பெழுதி தயாரித்த ஏட்டுச்சுவடியின் படி காணாது போனது உ.வே.சாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பல இடங்களில் தேடியும் வேறு படிகள் இந்த நூலுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சுவடியை மீண்டும் ஆய்ந்து குறிப்பெழுதி முகவுரையும் சேர்த்து 1924ம் ஆண்டில் அது வெளியீடு கண்டது. இந்த நூலைத் தனது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உரிமையாகிக்கியிருந்தார். 18.2.1924ம் தேதி இந்த நூல் வெளியீடு கண்டது.


தொடரும்

சுபா

No comments:

Post a Comment