Saturday, December 23, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 143

இன்று இப்பதிவினை எழுதும் போது என் மனம் கனக்கின்றது.

என் சரித்திரம் நூலில், தனது வாழ்க்கையில் தான் செய்த தமிழ்ப்பணியில் மிக முக்கியமானதொன்றாக உ.வே.சா அவர்கள் கருதும் மணிமேகலை பதிப்பைப் பற்றியும், அதன் தொடர்ச்சியாக அதன் வெளியீட்டையும், அதன் பின்னர் மணிமேகலைக்குத் தமிழறிஞர்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த வரவேற்பினையும் விவரிக்கும் அத்தியாயம் 122. இந்த அத்தியாயத்தை அவர் எழுதி அனுப்பிய பின்னர் இத்தொடர் தொடரப்படவில்லை. உ.வே.சா அவர்கள் 28.4.1942 அன்று மறைந்தார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக முடிந்த வரை வாரம் ஒன்று என்றும் பல வேளைகளில் எனது அலுவலகப் பணிகளாலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளாலும் ஏற்படும் நீண்ட இடைவெளிக்குப் பிறகும் உ.வே.சா அவர்கள் எழுதிய என் சரித்திரம் நூலை வாசித்து, அவர் இந்த நூலில் தந்துள்ள செய்திகளைச் சிந்தித்து அவற்றுடன் நான் உலா செல்லும் போது என் மனதில் தோன்றும் கருத்துக்களை இத்தொடரின் வழி பதிந்து வந்துள்ளேன்.

இந்த என் சரித்திரம் எனும் நூல் தனிச்சிறப்பு கொண்டது. ஏனெனில் உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானவையாக மனதில் கருதி, தமிழ் உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்த பகுதிகள் அனைத்துமே தமிழ்க்கல்வி தொடர்பானவையே. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நிகழ்வுகளின் வரலாற்றுக் குறிப்பு போலத் தனது சொந்த குடும்பத்தின் செய்திகளைக் குறிப்பிடுகின்றார். இவற்றை நீக்கினால் நூல் முழுக்க மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், திருவாவடுதுறை சைவமடமும், ஓலைச்சுவடிகளும், தமிழ் ஆய்வுகளுமே இந்தச் சரிதத்தை நிறைத்திருக்கின்றன.

2014ம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய கால விடுமுறைக்காக கனேரிய தீவுக்கூட்டத்தில் உள்ள தீவு ஒன்றிற்கு விடுமுறை சென்றிருந்தபோது வாசிக்க வேண்டும் என என் சரித்திரம் நூலைக் கையில் எடுத்துச் சென்று அந்த விடுமுறையில் முழுமையாக இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். சில நேரங்களில் வாசிக்கும் போது நான் அவரது ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் இடைவெளி விடாது இணைந்து நடப்பது போல உணர்ந்திருக்கின்றேன். சில பகுதிகளை வாசித்தபோது என் சுய கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் நீர் வழிந்தோடுவதை உணர்ந்திருக்கின்றேன் தடுக்க மனமில்லாமல்!

நான் வாசித்தது மட்டும் போதாது! இன்றைய ஆய்வுலகமும், இளைய தலைமுறையும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இதனை வாசித்து முடித்தபோது எனக்குள் எழுந்ததன் விளைவாகத்தான் இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. மே மாதம் 14ம் தேதி 2014ம் ஆண்டு இத்தொடரின் முதல் பதிவினை நான் எழுதி தமிழ் மரபு அறக்கட்டளையின் இணைய ஊடகமான மின்தமிழில் பகிர்ந்து கொண்டேன். அதில் உள்ள சில பத்திகளை, இவை வாசகர்களுக்கு உதவும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவில் மீள்பார்வைக்காக மீண்டும் பதிகிறேன்.

என் சரித்திரம் என்னும் இந்நூல் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும் அல்லவா?

1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட சில நண்பர்களின் எண்ணத்தில் உ.வே.சா அவர்கள் தனது சுயசரிதத்தை எழுத வேண்டும் என்ற கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரத்தையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குறுந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவறவில்லை.

ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.

இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment