Thursday, December 21, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 142

தனது முந்தைய அச்சுப் பதிப்பு நூல் வெளியீடு போலன்றி நூலுக்கு உரையையும் எழுதி வெளியிட்ட புதிய முயற்சியாய் மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் இருந்தது. எளிய உரை நடையில் விளக்கம் என அமைத்திருந்தமையினால் மணிமேகலை அக்காலத்து தமிழறிஞர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. நூலின் அமைப்பு முறை வாசிப்போருக்குப் பொருளை மிக எளிமையானதாக ஆக்கியிருந்தது. பல கூடுதல் தகவல்களையும் விரிவாக உ.வே.சா நூலில் இணைத்திருந்தார். இவையெல்லாமே இந்த நூலை வாசகர்கள் மத்தியில் ஈர்ப்பனவாக அமைந்திருந்தது.

இந்த நூலில் புறத்திரட்டு நூல்களை ஆராய்ந்தபோது அதில் கிட்டிய குண்டலகேசி காப்பியத்தின் செய்யுட்களையும் தாம் இந்த நூலில் சேர்த்தமையைப் பற்றி உ.வே.சா குறிப்பிடுகின்றார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த மதச் சார்பு கொண்ட ஒரு இலக்கியம். இதனை நாதகுத்தனார் என்ற தமிழ்ப்புலவர் இயற்றினார் என அறிகின்றோம். இன்று இதன் 19 செய்யுட்கள் மட்டும் அடங்கிய பகுதிகள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த நூல் முழுமையாகக் கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டமே. ஓலைச்சுவடிகளை முறையாகப் பாதுகாக்காது போனமையினால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு பல. இது ஈடுகட்டவே முடியாத இழப்பு.

குண்டலகேசியின் செய்யுட்கள் சிலவற்றை விளக்கக் குறிப்பு பகுதிகளில் மணிமேகலை பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார். இந்த முயற்சிகளினால் குண்டலகேசி என்று ஒரு தமிழ் பௌத்த காப்பியம் ஒன்று பௌத்த முனிவர்களால் இயற்றப்பட்டிருந்தது என்பதை இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வளையாபதியின் நிலையோ இன்றும் கேள்விக்குறிதான். ஏனெனில் உ.வே.சா அவர்கள் ஏடுதேட பல ஊர்களுக்குச் சென்று ஓலைக்கட்டுக்களை அலசிய காலகட்டங்களில் எங்கோ ஓரிடத்தில் தாம் வளையாபதியின் சில ஏடுகளைப் பார்க்க நேரிட்டதாகவும் பின்னர் அதனை மீண்டும் தேடத் துணிகையில் அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது என்றும் அறியமுடிகின்றது. இதனை உ.வே.சா அவர்களின் மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தனது என் ஆசிரியப்பிரான் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவின் பல நூலகங்களிலும் இலங்கையின் நூலகங்களிலும் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல நூலகங்களில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிப் பார்த்தால் வளையாபதியின் ஒரு பிரதி எங்காவது கிட்டுமோ என்ற ஆதங்கம் இவ்வேளையில் மனதில் எழத்தான் செய்கின்றது. இந்த முயற்சியைக் கைவிடாது தொடர வேண்டியது நம் கடமை.


"தமிழ்மகள் தன் மணிமேகலையை இழந்திருந்தாள். அதனைக் கண்டெடுக்கும் பேறு எனக்கு வாய்த்தது. ஆயினும், அதிற் பதித்திருக்கின்ற ரத்தினங்களின் தன்மை இன்னதென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனை ரங்காசாரியார் அறிவித்தார். மணிமேகலை மீட்டும் துலக்கப் பெற்றுத் தமிழ்மகளின் இடையை அலங்கரித்து நிற்கின்றது." என உ.வே.சா அவர்கள் கலைமகள் பத்திரிக்கையில் 'மணிமேகலையும் மும்மணியும்' என்ற தலைப்பில் எழுதி கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை அச்சு வெளியீட்டினால் உ.வே.சாவிற்கு வந்து குவிந்த புகழ்மாலைகளுக்கிடையே அவருக்கு 'பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியார்' என்ற பட்டமும் கிடைத்தது சுவாரசியமானதொரு கதை. ஆனந்தன் என்ற பெர் கொண்ட ஒருவர் விவேக திவாகரன் என்ற அன்றைய பத்திரிக்கையில் உ.வே.சா அவர்களை மணிமேகலையைப் பிரசுத்தமையைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பட்டத்தையும் வழங்குவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தச் செய்தியை வாசித்து தன் சக நண்பர்களுக்குக் கூறி மகிழ்ந்ததோடு இப்பட்டத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிப் போற்றி வந்ததாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

முன்னர் சிந்தாமணியைப் பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மனியார் உ.வே.சா அவர்களை ஒரு சமணத்தமிழ் அறிஞரோ எனப்பாராட்டி பவ்ய ஜீவன் என சிறப்புடன் அழைத்தார். மணிமேகலை அச்சுப்பதிப்புப் பணியை வியந்து ஒரு பௌத்த அன்பர் ஒரு சிறப்புப் பட்டம் வழங்கி மகிழ்ந்தார். மதங்களைக் கடந்ததுதான் தமிழ்ப்பணி. அதனை உ.வே.சா அவர்கள் அன்று செய்தார்கள். இன்று நிலையோ வேறாகத்தான் இருக்கின்றது!

ஒரு மதத்தை தீவிரமாகப் பின்பற்றுவோர் வேறு பிற சமயத்து இலக்கியங்களைப் பற்றி ஒரு சிறிதும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தான் சார்ந்துள்ள சமயமே எல்லா உண்மைகளையும் சொல்வதாகக் கருதிக் கொண்டு ஏனைய பிற மதங்களில் உள்ள நூல்களை குறைந்த ஞானம் கொண்ட நூலாக மதிப்பிடும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் பிற மதங்களில் உள்ள நூல்களை ஆராய்ந்து பார்க்கவும் துணியாதவர்களாக இருக்கின்றனர். தனக்குத் தெரிந்தவை மட்டுமே உண்மை என்றும் தாம் நம்பும் தத்துவங்களே சத்தியமென்றும் பிறமதங்கள் சார்ந்தவை எதைனையும் துச்சமென மதிப்பதும் இத்தகையோர் போக்காக உள்ளது.

மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவைதான் மதங்கள். அவற்றில் உள்ள குறைகளும் நிறைகளும் மனிதர்களையே சாரும். பல சமய தத்துவங்களையும் வாசித்து, மதம் என்னும் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட ஒரு சிறிய வட்டத்திலிருந்து வெளியேறுவதே சிந்தனை சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமையும். தத்துவக்கோட்பாட்டை அலசுவதற்குச் சுதந்திரத்தைக் கடைபிடிக்கும் போக்கு வளர வேண்டும் . அதற்கு பிற மதங்களை அறிந்து கொள்ள அச்சமில்லாத மன திடம் தான் அடிப்படையே!

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment