Friday, December 29, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 149

பழமையான நூல்களைத் தேடிச் செல்லுதல், அவற்றை வாசித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பனவே உ.வே.சா அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டன எனலாம். தொய்வில்லாத தொடர்பணிகள் அலுப்பும் சலிப்பும் ஏற்படாத வகையில் தமிழாராய்ச்சிப் பணியில் ஆழ்ந்த பற்றுடன் உ.வே.சா அவர்கள் செயல்பட்டமையினால்தான் செயற்கரிய பல காரியங்களை அவரால் அன்று செய்து முடிக்க முடிந்துள்ளது.

சங்கத்தமிழை நம் முன் கொண்டு வந்து கொடுத்த பெரும் பணியை இவர் மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
சங்கம் மருவிய காலத்து காப்பியங்களைக் காப்பாற்றி, இந்த நூற்றாண்டிலும் தமிழின் வளத்தையும் தமிழர் வரலாற்றையும் நாம் புரிந்து கொள்ள உதவியுள்ளார்

சைவ இலக்கியங்களும் வைணவ இலக்கியங்களும் மட்டுமே தமிழ் கற்ற சான்றோர்களால் பெரிதும் பேசப்பட்ட 19ம் நூற்றாண்டில், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், சீவக சிந்தாமணியையும் அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டு தமிழறிஞர் மத்தியில் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் மீண்டும் இலக்கிய நோக்கில் புத்துணர்ச்சியைக் கொடுத்ததிலும் உ.வே.சா அவர்களது பங்களிப்பினை நாம் மறுத்து விட முடியாது.

அவரது சுவடிப்பதிப்பு ஆய்வு முறை என்பது ஒரு சுவடியை எடுத்தோமா , அதனை வரிக்கு வரி அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தோமா என்றில்லாமல், ஒரு நூலின் பல பிரதிகளைத் தேடித் திரிந்து, வெவ்வேறு பிரதிகளின் பாட பேதங்களை ஆராய்ந்து, சொற்பொருளுக்கு விளக்கங்கள் அளித்து, உடைந்த பகுதிகளில் தனக்குத் தோன்றிய செய்திகளைப் போட்டு நிரப்பாது, விடுபட்ட பகுதிகளைக் குறிப்பாகச் சொல்லி மூலபாடங்களுடன் பதிப்பித்து அந்த நூலை வெளிக்கொணரும் வகையானது.

தனது அச்சுப்பதிப்பாக்கங்கள் ஒவ்வொன்றிலும் நூலின் முன்னுரையில் அந்த நூல் எதனை முதன்மைப் படுத்துகின்றதோ அவற்றைத் தெளிவுடன் விளக்குவது; நூலின் குறிப்புறைகளில் பதப்பொருள் அளித்து வாசிப்பில் ஏற்படும் சிரமம் வாசிப்போருக்கு எழாமல் இருக்க உதவுவது; நூலில் அருஞ்சொற்பதங்களுக்கென்றே ஒரு அகராதியை இணைத்து அதில் சொற்களுக்கான பொருள் விளக்கத்தை அளித்திருப்பது; தனது பரந்த விரிந்த வாசிப்புக்களின் பயனாக தேவைக்கேற்ற இடங்களில் ஏற்புடைய உதாரணங்களைக் கொடுத்திருப்பது; தேவைக்கேற்ற இடங்களில் ஒப்புவமைகளை எழுதி நூலை வாசகர் புரிந்து கொள்வதோடு அதனை ஆழமாக ஆராயும் வகையில் பல கோணங்களை முன்னிறுத்தியிருப்பது ஆகியவை அச்சுப்பதிப்புப் பணியில் தனி பாணியாகவே அமைந்து விட்டன.

தமிழகத்தில் சுவடி, ஆவணப்பாதுகாப்பு எனும்போது உ.வே.சாவிற்கு முன்னோடிகளாக விளங்குபவர்களில் மிக முக்கியமானவர்களாக நாம் ஒரு சிலரைக் குறிப்பிடலாம்.

அயர்லாந்தில் பிறந்து பின்னர் ஆங்கிலேய காலணித்துவ அரசில் ஆசிய நாடுகளுக்கு நில அளவையாளராக பணியாற்ற வந்த காலின் மெக்கின்ஸி அவர்கள் (Colonel Colin Mackenzie 1754 – 8 May 1821) அவர்கள் தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் தேடித்திரிந்து சேகரித்த ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் எண்ணற்றவை. இவை இன்று பிரித்தானிய நூலகத்திலும், சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலும், மேற்கு வங்கத்தின் தேசிய நூலகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ச்சுவடிகளை மொழி பெயர்ப்பு செய்து அவற்றை வெளியிட்ட ஐரோப்பியர்களான வீரமாமுனிவர் Constantine Joseph Beschi (8 November 1680 – 4 Feb 1742), Augustus Frederick Cammerer (1767- 1837), Francis Whyte Ellis (1777–1819) ஆகியோரையும் நாம் ஒதுக்கிச் செல்ல முடியாது. ஐரோப்பியர்களின் தென்னிந்திய வருகையே அச்சுப்பதிப்பு முயற்சிகளை இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதோடு, அதன் தொடர்ச்சியாக ஏராளமான நூல்கள் சுவடி வடிவத்திலிருந்து காகிதத்தில் அச்சிட்டுப் பல பிரதிகள் கிடைக்கச் செய்யும் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட முக்கிய காரணமாக அமைகின்றது.

தமிழகச்சூழலில் உ.வே.சாவிற்கு முன்னரே சுவடிகளை அச்சுப்பதிப்பாக்கம் செய்தவர்களில் 1812ம் ஆண்டில் திருக்குறளை அச்சிட்டு வெளியிட்ட திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், நன்னூல், அகப்பொருள் மூலம், வெண்பாமாலை ஆகிய நூற்களை அச்சிட்ட அ. முத்துசாமிப்பிள்ளை அவர்களையும் குறிப்பிடலாம். அ.முத்துசாமிப்பிள்ளை அவர்கள் எல்லிஸ் அவர்களால் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று சுவடிகளைத்தேடி வர பணிக்கப்பட்டவர். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி மிக்கவர். என்பதோடு வடமொழி, தெலுங்கு இவற்றுடன் ஆங்கிலம் இலத்தீன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்று, கிறித்தவ வேத விற்பன்னராகவும் திகழ்ந்தவர். புதுவை நயனப்ப முதலியார் (1779 – 1845) என்பவர் ஒருசொற் பலபொருட் தொகுதி உரைபாடம் (1835), தஞ்சைவாணன் கோவை (1836), நேமிநாதம் மூலபாடம் (1836), நாலடியார் மூலமும் உரையும் (1844), திவாகரநிகண்டு (9,10 ஆம் தொகுதி, சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதி வரை (1839) ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். தாண்டவராய முதலியார் வீரமாமுனிவரின் சதுர் அகராதி (1824), சேந்தன் திவாகரம் (1835), சூடாமணி நிகண்டு (1856) ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். வடலூர் இராமலிங்க அடிகள் (1823 – 1874) ஒழிவிலொடுக்கம் (1851), தொண்டைமண்டல சதகம் (1857), சின்மய தீபிகை (1857) ஆகிய நூல்களை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். அதே போல சோழ நாட்டின் தில்லையம்பூரில் பிறந்து சித்தூர் உயர் நிலைப் பள்ளியிலும், கும்பகோணம் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தவரான சந்திரசேகர கவிராச பண்டிதர் ( - 1883) தனிப்பாடல்கள் திரட்டு, பாலபோத இலக்கணம், நன்னூற் காண்டிகையுரை, ஐந்திலக்கண விடை, நன்னூல் விரித்தியுரை, யாப்பருங்காலக் காரிகையுரை, வெண்பாப் பாட்டியல் உரை செய்யுட் கோவை, பழமொழித் திரட்டு, பரதநூல், தண்டியலங்கார உரை போன்ற நூல்களை அச்சுப்பதிப்பாக வெளியிட்டிருக்கின்றனர்.

இலங்கையை எடுத்துக் கொண்டால் சைவ சமயத் தொண்டால் சிறப்புற்ற யாழ்ப்பாணம் நல்லூர் க.ஆறுமுக நாவலர் (1822 – 1879) அவர்கள் சூடாமணி நிகண்டு உரை, சௌந்தரியலகரி உரை (1849), நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தூர் நீரோட்டக யமக வந்தாதி, திருமுருகாற்றுப்படை (1851), ஞானக்கும்மி (1852), திருவாசகம், திருக்கோவையார் (1860), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்(1861), தருக்க சங்கிரகம், அன்னபட்டீயம் (1861), இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பிய சூத்திரவிருத்தி (1866), கோயிற்புராணம் (1867), சைவசமய நெறி (1868) ஆகிய நூற்களைப் பதிப்பித்திருக்கின்றார். மேலும், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை (1844 – 1907), யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர் (1843 – 1903), யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர் (1854 – 1922),திரிகோணமலை த.கனகசுந்தரம் பிள்ளை (1852 – 1901), யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை (1832 – 1901) ஆகியோரும் தமிழ் நூல்கள் அச்சுப்பதிப்பில் உ.வே.சா அவர்களுக்கு முன்னோடியாகவும் சமகாலத்தவராகவும் இத்தமிழ்ப்பணியில் ஈடுபட்டவர்களாவர்.


தொடரும்..
சுபா

No comments:

Post a Comment