Thursday, December 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 148

​சங்க இல​க்கியங்களின் அச்சுப்பதிப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக ஐங்குறுநூறு 1903ம் ஆண்டும், பதிற்றுப் பத்து 1904ம் ஆண்டும், பரிபாடல் 1918ம் ஆண்டிலும் உ.வே.சாவால் வெளியிடப்பட்டன. குறுந்தொகையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1937ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டார். இச்சங்க இலக்கிய நூல்கள் தமிழ் அச்சுப்பதிப்பு வெளியீட்டில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தன. தமிழின் செம்மை திறத்தையும், தமிழர் வரலாற்று வளத்தையும் மேன்மையையும் வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்களாக இவை திகழ்கின்றன என்பதோடு இன்றும் பலரால் பல கோணங்களில் ஆராயப்படும் நூல்களாக இவை உள்ளன.

சிதம்பரத்தில் சில ஆண்டுகள் உ.வே.சா அவர்கள் பணியாற்றியிருக்கின்றார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். அவர் சிதம்பரத்திற்குச் செல்வதற்கு பின்னணியில் இருந்தவர் அன்று மிகப் பிரபலமாக தமிழறிஞர்களால் அறியப்பட்ட ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தான்.

1924ம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலைச் செட்டியார் கல்விக்கூடங்களைக் கட்ட உத்தேசித்திருந்தார். முதலில் ஒரு தமிழ்க் கல்லூரியையும் வடமொழிக் கல்லூரியையும் தொடங்கினார். அத்தோடு ஒரு கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டது.  மீனாட்சி தமிழ்க்கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக்கல்லூரி ஆகிய மூன்றும் அப்போது தொடங்கப்பட்டவையே. இதில் தமிழ்க்கல்லூரிக்கு முதல்வராக உ.வே.சா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்களது விருப்பமாக இருந்தது. இதன் நிமித்தமாக அதே ஆண்டு ஜூலை மாதம் உ.வே.சா சிதம்பரத்திற்கு மாற்றலானார். இந்தப் பணியை ஏற்றுக் கொண்டபோது புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார் மீனாட்சி கலைக்கல்லூரியின் முதல்வராக பணியேற்றிருந்தார். இவரது சோழர்கள் பற்றிய ஆராய்ச்சியும் அவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் பல ஆராய்ச்சி மாணவர்களாலும் வரலாற்று ஆர்வலர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நூல்களாக இருப்பவை என்பதை நாம் அறிவோம்.

சிதம்பரத்தில் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் மதுரையில் 1925ம் ஆண்டு நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 24வது ஆண்டு விழாவில் உ.வே.சா பொற்கிழி கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டார். அவ்விழாவில் காஞ்சிகாமகோடி பீடத்தின் அதிபர் சங்கராச்சார்ய சுவாமிகள் உ.வே.சா அவர்களுக்கு இரட்டைச் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யக் கூறியிருந்தார். அத்தோடு இவ்விழாவில் "தாஷிணாத்ய கலாநிதி" என்ற பட்டத்தையும் சங்கரமடத்தின் சார்பில் வழங்கிச் சிறப்பித்தார்.

சிதம்பரத்தில் உ.வே.சா இருந்த காலகட்டத்தில், அவர் ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி சுவடி நூற்களை ஆராய்ந்து வந்தார். அதனைச் செம்மையான பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் உ.வே.சாவிற்கு இருந்தது.

தக்கயாகப்ரணி ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் இயற்றப்பட்ட நூல். கவிச்சக்கரவர்த்தி என்று சோழ மன்னன் வீரராசேந்திரனால் சிறப்பிக்கப்பட்டவர் என்பதோடு மூன்று சோழமன்னர்களின் அரசவையில் அவைப்புலவராகப் பதவி வகித்தவர் என்ற சிறப்பும் பெற்றவர் இவர். சோழ மன்னர்களின் போர் சிறப்பையும் வரலாற்றுச் செய்திகளையும் செய்யுள் நடையில் குறிப்பிடும் ஒரு நூல் தக்கயாகப்பரணி. ஒட்டக்கூத்தர் இயற்றிய 'விக்கிரமசோழன் உலா' மற்றும் விக்கிரம சோழனின் கலிங்கத்துப் போரை விவரித்துச் சொல்லும் 'கலிங்கத்துப்பரணி', 'நாலாயிரக்கோவை' ஆகிய நூல்களும் மிகச் சிறப்பாகப்பேசப்படும் நூல்கள். ஒட்டக்கூத்தர் வீரராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவையை அலங்கரித்த புலவர். 'அரும்பைத்தொள்ளாயிரம்' என்ற நூலையும் இவரே இயற்றியிருப்பார் என அறியப்படுகின்றது. 'விக்கிரமசோழனுலா', 'குலோத்துங்கசோழனுலா', 'இராசராசசோழனுலா' என்ற மூன்று உலா நூற்களிணைந்து 'மூவருலா' என்ற நூலினை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரிசியாற்றின் கரையிலுள்ள 'கூத்தனூர்' என்னும் சிற்றூர் ஒட்டக்கூத்தருக்குச் சோழமன்னர் அன்பளிப்பாக அளித்தார் என்ற தகவலையும், ஒட்டக்கூத்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது குடும்பப்பின்னனியையும், கவிஞராக வளர்ந்து புலவராக தன்னை உயர்த்திக் கொண்டு சோழ மன்னர்கள் அவையில் இருந்த செய்திகளையும், அவரோடு தொடர்பு படுத்திச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதைகள் பற்றிய தகவல்களையும் வரலாற்று நூல்  'சோழர்கள் 2ம்' பாகத்தில் 26வது அத்தியாயத்தில் விரிவாகத் தருகின்றார் வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார். தாராசுரத்தில் உள்ள தாராசுரம் கோயில் அதாவது, ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் சமாதி அமைந்துள்ளது. பட்டீச்சரம் சாலைக்கு மேற்கே வீரபத்திரர் கோயில் என்ற பெயரில் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் இங்கு எழுப்பப்பட்டுள்ளது.

தக்கயாகப்பரணி நூலை எழுதிய ஒட்டக்கூத்தர் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட கவின்மிகு சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற தாராசுரம் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக இக்கோயிலுக்கு நான் சென்றிருந்த போது, ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியை அறங்கேற்றிய மண்டபப் பகுதியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டியதும் என் வரலாற்றுத் தேடுதல் முயற்சியில் மறக்க இயலாத ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்.

சிதம்பரத்தில் நீண்டகாலம் உ.வே.சா பணியாற்றவில்லை. 1917ம் ஆண்டில் உ.வே.சா அவர்களின் மனைவி காலமானார். அதன் காரணமாக சிதம்பரத்திற்கு மீனாட்சி தமிழ்க்கல்லூரி முதல்வராக பணியேற்றுக் கொண்டு 1924ல்  வந்த போது  தனக்கு ஒரு சமையல்காரரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார். சரியான கவனிப்பாரற்று அவரது உடல் நிலை தளர்ச்சியடைந்து வந்தது தொடர்ச்சியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் தக்க அறிஞர் ஒருவரை தமது பணிக்கு ஏற்பாடு செய்துவிட்டு 11.3.1927ல் அவர் சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் தக்கயாகப்பரணி நூலுக்கான அச்சுப்பதிப்பாக்கப் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இடைக்கிடையே வேறு சில சுவடி நூல்களை ஆராயும் பணியையும் உ.வே.சா மேற்கொண்டிருந்தார். அதில் ஒன்று 'தமிழ்விடு தூது'. இந்த நூல் 1930ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளிவந்தது. அதே 1930ம் ஆண்டு, தக்கயாகப்பரணி நூல் அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

உ.வே.சாவின் தக்கயாகப்பரணி மிகச் சிறந்த படைப்பாக இன்றும் அறியப்படுவது. ஒட்டக்கூத்தர் எழுதிய செய்யுளுக்கு விரிவான உரை எழுதி இதில் சேர்த்துள்ளார். இந்த நூல் ஆராய்ச்சிக்காக சில வடமொழிப்புலவர்களுடனும் வரலாற்றாசிரியர்களுடனும் கலந்துரையாடி விளக்கம் பெற்று தனது உரையினை உ.வே.சா இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள்.


தொடரும்

சுபா

No comments:

Post a Comment