Monday, March 27, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 111

பத்துப் பாட்டு நூல் ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து கொண்டிருந்தது. இடையில் குறிஞ்சியில் சில பூக்களின் பெயர்கள் விடுபட்ட நிலையில் இருந்தது. உ.வே.சாவிடம் இருந்த சுவடியில் இப்பகுதி விடுபட்டிருந்தமையால். முழுமையாக இல்லையே இந்தச் சுவடி என புதிய வருத்தம் அவருக்குத் தொற்றிக் கொண்டது.

வருந்திக் கொண்டிருப்பதால் ஆகப்போவது ஏதும் இல்லை. மீண்டும் முழுமையான சுவடிப்பிரதி வேறுயாரிடமாவது கிடைக்குமா எனத் தேட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. யோசித்ததில் திருவாவடுதுறை மடம் போலவே மற்றுமொரு சைவ மடமான தருமபுரம் மடத்திலும் ஏராளமான சுவடிகள் இருக்கின்றன என்பது உ.வே.சாவிற்குத் தெரியும் என்பதால் அங்குச் சென்று கேட்டுப்பார்க்கலாமா என்ற எண்ணம் அவருக்கு மனதில் எழுந்தது.

அந்தக் காலகட்டத்தில் திருவாவடுதுறை மடத்திற்கும் தருமபுரம் மடத்திற்கும் நல்ல சுமுகமான உறவு இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. எதனால் இந்தக் கசப்பு என உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிடவில்லை. ஆயினும் இரு சைவ மடங்களுக்குமிடையே மனஸ்தாபம் இருந்தது என்பதைக் குறிப்பிடுகின்றார்.

இந்தச் சூழலில் தேசிகரிடம் அனுமதி கேட்கலாமா, என முதலில் ஐயம் எழுந்தாலும் தனது தயக்கத்தை உதறிவிட்டு தனக்கு குறிஞ்சிப்பாட்டில் சில பகுதிகள் விடுபட்டுள்ள பிரதியே இருப்பதால், முழுமையான பிரதி தருமபுரம் மடத்தில் இருக்கலாம் என்றும், தான் அங்குச் செல்ல அனுமதி கிடைக்குமா என்றும் தேசிகரை அணுகிக் கேட்டார் உ.வே.சா. ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர், தயங்காது சென்று வரலாம் எனக்கூறியதோடு ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்து மடத்திலிருந்து பொன்னுசாமி செட்டியார் என்பவர் ஒருவரையும் துணைக்கு அனுப்பியும் வைத்தார்.

தருமபுரம் மடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு தேடியதில் முழுமையான பாடல்கள் நிறைந்த குறிஞ்சிப்பாட்டு நூல் கிடைத்தது. இது இடையில் வந்தத் தடையை இல்லாது போக்கியது.

இனி கிடைத்த பிரதிகளை வைத்து ஆராய்ச்சியைத் தொடர்ந்து அச்சுப்பதிப்புக்கானப் பணிகளைத் தொடங்குவதே சரியாக இருக்கும் என உ.வே.சாவிற்கு மனதில் தோன்றியது. அச்சமயத்தில் கனகசுந்தரம் பிள்ளை என்பவர் உ.வே.சாவிற்கு கடிதம் எழுதி தானும் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பிற்காக உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி உ.வே.சாவும் அதே காரியத்தைச் செய்தால் குழப்பம் வருமே எனக் குறிப்பிட்டு எழுதினார். பணியைத் தொடங்கியபிறகு இப்படி வருகின்ற செய்திகளை எண்ணி வருந்திக் கொண்டிருக்க இயலாது. என் அச்சுப்பதிப்புப் பணியை நான் செய்கின்றேன். உங்களது பனியை நீங்கள் செய்யுங்கள். இரண்டையும் வாங்கிப் படிக்க மக்கள் இருக்கின்றார்கள், எனப் பதில் கடிதம் அனுப்பி விட்டு உ.வே.சா பத்துப்பாட்டு பதிப்புப் பணிகளை தொடக்கிவிட்டார்.

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment