Monday, March 20, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 110

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பு உருவாக்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது . உ.வே.சா தனது கல்லூரி வேலை நேரம்
தவிர்த்து ஏனைய நேரங்களை முழுமையாக தனக்கு இதுவரை கிடைத்த ஏட்டுச்சுவடி பாடபேதங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த ஆய்வில் அவரிடம் இதுவரை கிடைத்த நூற்கள் முழுமையானவை இல்லை என்ற எண்ணம் அவருக்கு உருவாகத்தொடங்கியது. கிடைத்தவரைக்கும் வைத்துப் பதிப்பித்து புகழ் தேடிக்கொள்வோம் என்றில்லாது, செய்வன திருந்தச் செய்வோம் என்ற சிந்தனையுடன் மேலும் வேறு இடங்களில் பத்துப்பாட்டு ஓலைச்சுவடி பிரதிகள் கிடைக்குமா என்ற தனது தேடல் முயற்சியை மீண்டும் தொடங்கினார்.

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்று அங்கேயும் ஒரு முறை சொல்லி வைத்து வர வேண்டும் எனச் சென்றிருந்தார். முன்னர் ஆதீனகர்த்தராக இருந்து தன்னை ஒரு தந்தையைப் போல அன்பு காட்டி ஆதரித்த சுப்பிரமணிய தேசிகர் இல்லாத போதிலும் ஆதீனத்தில் இவரை அன்புடன் அனைவரும் வரவேற்பதில் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

ஆதீனகர்த்தரைச் சந்தித்து தனது பத்துப்பாட்டு பதிப்பு முயற்சிகளைப் பற்றி விளக்கி முழுமையாகப் பாடல்கள் கிடைக்காத நிலையைச் சொல்லி வருந்தினார் உ.வே.சா. ஆதீனத்தைச் சார்ந்த ஏனைய மடங்களில் இந்தச் சுவடி நூல் கிடைக்க வாய்ப்பிருக்குமா எனக் கேட்டுக் கொண்டார். இவரது மன நலிவைக் கண்ட ஆதீனகர்த்தர், சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் படியும், எல்லோருக்கும் கடிதம் எழுதச் சொல்லி பத்துப்பாட்டு பிரதிகளை வருவித்துத் தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். சொன்னதோடு மட்டுமல்ல. உடனே செயலிலும் இறங்கினார். தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மடங்கள், அறிஞர்கள் எனப் பலருக்கும் கடிதம் திருவாவடுதுறை மடத்திலிருந்து சென்றது.

இன்றைய நிலையை யோசித்துப் பார்க்கின்றேன். ஒரு ஆராய்ச்சி மாணவரை ஊக்குவிக்கும் பண்போ அல்லது நல்ல முயற்சிகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவும் மனப்பாங்கோ மிக மிகக் குறைவாகத்தானே இருக்கின்றது. நூற்கள், ஆய்வுகள், அறிவுத்தேடல்கள் என்ற விசயங்களே சமூகத்தின் உயர்மட்ட அதிகாரத்தில் இருப்போருக்கு மிகத் தொலைவில் இருக்கின்ற ஒரு விசயமாகத்தான் அமைந்திருக்கின்றது. கல்வி, அறிவு நாட்டம் என்பதை விடப் பொருளாதார அனுகூலங்களை மட்டும் எண்ணிப்பார்க்கும் தலைமை பீடங்கள் நிறைந்த சூழல் தான் இன்று நிலவுகின்றது. இந்த நிலையை மனதில் கொண்டு உ.வே.சாவின் தேடுதல் பணிக்காக உதவத் தீவிர முயற்சி மேற்கொண்ட திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமையில் இருந்த தேசிகரை நாம் நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது தமிழ் மாணாக்கர்கள் நாம் எல்லோரது கடமையும் கூட. ஏனெனில் ஒரு உயரிய பணிக்கு உதவி செய்தோரை நன்றியுடன் எண்ணிப் பார்த்தலே மனிதப்பண்பு. இத்தகைய உதவிகள் கிட்டிராவிட்டால் பத்துப்பாட்டு நல்ல அச்சுப்பதிப்பு நமக்குக் கிடைத்திருக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி அல்லவா?

மீண்டும் திருவாவடுதுறை மடத்துக்கு உ.வே.சா சென்ற போது அங்கே நடந்த நிகழ்வுகளைத் தனது எழுத்துக்களால் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அடுத்த வாரமே நான் என்னவாயிற்றென்று விசாரிப்பதற்காகத் திருவாவடுதுறை சென்றேன். மடத்திற்குள் புகுந்து ஒடுக்கத்தின் வாயிலில் கால் வைக்கும்போதே ஆதீனத் தலைவர் என் காதில் படும்படி, “பொன்னுசாமி செட்டியார்! பத்துப் பாட்டைக் கொண்டுவந்து ஐயரவர்களிடம் கொடும்” என்று உத்தரவிட்டார். அந்த வார்த்தைகள் என் காதில் விழுந்த போது என் உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. மிக்க வேகமாக ஆதீனத் தலைவரை அணுகி உட்கார்ந்தேன். உடனே பொன்னுசாமி செட்டியார் ஏட்டுச் சுவடியைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்துப் பாட்டுக்களும் இருந்தன. மூலமும் உரையும் கலந்ததாகவே இருந்தது அப்பிரதி. பத்துப் பாட்டு முழுவதும் இருந்தமையால் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தேன். ஒவ்வொரு பாட்டாகத் திருப்புகையில் என் உள்ளம் குதூகலித்தது. அதில், தூத்துக்குடிக் கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமிப் பிள்ளையால், வீரபாண்டிய கவிராயர் பிரதியைப் பார்த்து எழுதப்பட்டதென்று எழுதியிருந்தது. " 

நாம் முழு கவனம் வைத்து ஆய்விற்காகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நமக்குக் கிடைக்கும் போது அது எழுப்பும் மன எழுச்சியே அலாதிதான்!

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment