Monday, March 13, 2017

மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!! - 2

பதிவு 2

தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் தொடர்வோம்.

2.31  நாமகரணத்தினால் பிராம்மணனுக்கு மங்களமும், ஷத்திரியனுக்குப் பலமும், வைஸ்யனுக்குத் தனமும், ஏனையோருக்கு அவர்தம் பணியையும்  குறிக்கும் பெயர்களை இட வேண்டியது.

2.32 பிராம்மனனுடைய பெயர் மேன்மையைக் குறிக்கும் சர்மன், ஷத்திரியனுக்குப் பலத்தைக் குறிக்கும் வர்மன், வைசியனுக்கு வளத்தைக் குறிக்கும் பூபதி, நாலாமவனுக்குப் பணிவிடையைக் குறிக்கும் தாசன் என்றிவ்வாறு அவரவர் பெயர்களுடன் பட்டங்கள் வழங்கி வர வேண்டியது.

2.44. பிராம்மணனுடைய பூணூல் பஞ்சினாலும், ஷத்திரியனுக்குச் சணப்பையினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டு ரோமத்தாலும் நூலிழைத்து மூவடமாகத் தோளில் அணிய வேண்டியது.

2.67. பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவனுக்குப் பணி புரிந்திருத்தலே அவர்களது குருகுலவாசமெனப்படும். இல்லத்தைக் காத்து நடத்துதலே அவர்களுக்கு சமிதா தானமாகும்.

பெயர் வைக்கும் போதே அதில் உயர்வு எது தாழ்வு எது என நிர்ணயிக்கின்றது மநு தர்மம். பிறக்கும் ஒரு குழந்தை பூமிக்கு வந்து விழும் போது அதன் உலகம் புதிது. அந்தப் புதிய உலகின் ஆரம்பமே சூத்திரர் எனும் வருணத்தாருக்கு அடிமை வாழ்வை சட்டமாக்கி அதனை உறுதி செய்கிறது மநு தர்மம். இதுதான் தர்மமா?

4ம் வருணத்தாருக்காவது வெளி உலகு என்ற ஒன்றினை விட்டு வைக்கும் மநு, பெண்களுக்கு நான்கு சுவர்களை மட்டுமே உலகமாக்குகின்றார். வெளி உலக வாசனை அற்ற அடிமைகளாகப் பெண்கள் இருத்தலை மநு தர்மம் சிறந்த தர்மமாகச் சொல்கின்றது. இதுதான் தர்மமா?

தொடரும்

சுபா

No comments:

Post a Comment