Saturday, March 11, 2017

மநுதர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!!

 தமிழ் நிலத்தில் தமிழ் மக்களின் பண்பாட்டில் வைதீக தருமம் அதன் விரிவாக்கத்தை அமைத்த பின்னர் மிகப்பல சமூகக் கேடுகள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாகச்   சாதி அமைப்பும் அதனைச் சார்ந்த கொள்கைகளும் "நீதி", "சமய ஒழுக்கம்" என்ற பெயரில் அக்கால அரசுகளின்  துணையோடு விரிவாக்கம் கண்டன. இதனால் தமிழ்ப்பெருங்குடி மக்களான பழங்குடி மக்கள், சமூகத்தின் கடைக்கோடி மனிதராக சமூதாய அளவுகோளில் வைக்கப்படும் நிலமை உருவானது. அது இன்றும் தொடர்கின்றது. 


இந்தச் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திய வைதீக  சாத்திரங்களாக அமைவனவற்றுள் மநுதர்ம சாத்திரம் முக்கிய இடம் வகிக்கின்றது. கல்வி அறிவு எட்டாக்கணியாக இருந்த சாமானிய மக்கள்  அரசும், சமய அமைப்பும் சொல்லும் நீதியையே எதிர் கேள்வி கேட்காமல் இருந்த காலகட்டத்தில், தமிழரிடையே பிரிவினை என்பது சமூக ரீதியாக கட்டமைக்க இந்த மநு தர்ம சாத்திரம் மிகப் பெரிய அளவில் உதவி இருக்கின்றது.  கடந்த சில காலங்களில் சமஸ்கிருதத்தில் இருந்த மநு தர்ம சாத்திரம்  ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டபோது, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியாக இந்த நூலையும் அது என்ன தான் சொல்கின்றது என்பதையும் அறிந்து கொள்ள பலருக்கும் வாய்ப்பு அமைந்தது.

அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்த இழையில் பகிர்ந்து  கொள்கிறேன்.

வாசித்து அறிந்து கொள்வோமே!!

1.87 உலக நியதி நின்று நிலைக்கும் பொருட்டாக நால் வருணத்தாருக்கும் உரிய கடமைகளைத் தனித் தனியே கடவுள் விதித்தார்.

1.88. அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடம் ஏற்றும் வாழத் தக்கவராயினர்.

1.89. பிரஜா பரபாலனம் செய்வது, ஈகை. வேள்விகள் புரிவது, வேத பாராயனம் செய்விப்பது, விஷய சுகங்களின் மனத்தை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும்.

1.90. வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளை பொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார்.

1.91. ஏவலரான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் படைத்தார்.

ஆக எந்தப் பொறாமையுமின்றி அந்தணர், சத்திரியர், வைசியருக்கு சேவகம் செய்வதே சூத்திரரின் கடமை என நிர்ணயிக்கின்றது மநு தர்மம்.  இது ஒரு தர்மமா? 

இக்காலத்தில் சமூகத்தின் எல்லா சமூகத்தோரும் கல்வி கற்று, எது நீதி எது நியாயம் எது அநியாம என உணர்ந்திருக்கின்றோம். அடிப்படை மனித  உரிமை அறிந்த உலக மக்கள், மநுதர்மம் கூறும் இந்த வாசகங்கள் இன்னும் நாகரிகம் அடையாத ஒரு சமூகத்தின் சிந்தனைகளின் பிரதிபலிப்பு எனத்தான் எண்ண முடியும்.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment