Thursday, March 23, 2017

மநு தர்ம சாஸ்திரம் - ஏன் தமிழர்களுக்கான ஒரு நூலல்ல!! - 4

 பதிவு 4


தற்போதைய சூழலில், வைதீக சாத்திரங்களைத் தமிழ்ச் சமூகத்தில் புகுத்தி அதன் வழி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை   ஏற்படுத்திய மநு தர்ம சாஸ்திரம் ஏன் தமிழர்களுக்கான ஒரு நூல் அல்ல என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது.   அந்த வகையில் தமிழில் திருலோக சீதாராம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஆர்.கே.எல். பிரிண்டர்ஸ் அச்சகத்தின் பதிப்பாக வந்த தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சில வாசகங்களை இந்தப் பதிவில் தொடர்வோம்.


1.135 பத்தே வயதுடையவனாயினும் அந்தணன் தந்தைக்குச் சமமாகவும், நூறு வயதாகிய ஷத்திரியனைப் பிள்ளையாகவும் மதிக்க வேண்டும்.

இந்த சுலோகம் செய்து வைத்திருக்கும் அபத்தம் மிக அதிகம் தான். சிறியவர்களாகினும் கூட அந்தண சமூகத்தவர்களை சாமி என அழைக்கும் ஏனைய சமூகத்தினர் உருவாக இத்தகைய வாசகமே அடித்தளத்தை அமைத்திருக்கின்றது. இந்த நிலை மாற கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை? ஆனாலும் கூட இன்னும் பெருவாரியாக தமிழ்ச்சமூகத்துச் சிந்தனையில் இந்தக் கருத்து ஆழமாகப் புதைந்து தான் இருக்கின்றது.   குறிப்பாக கிராமப்புரங்களில்.

1.213 தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக்குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

1.214.  புலன்களை அடக்கியவாயினும், அறிவிலியாயினும், அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோத செய்வர் மாதர்.

1.215 தாய் தங்கை, மகள் ஆகியோராயினும்,  அவர்களுடன் தனித்து ஒன்றியமாகக் கூடாது. ஏனெனில் பொறி புலன்களின் கூட்டமானது தம் வழியே செயற்படுவதில் ஊக்கமுடையன. தெரிந்தவனையும் அவை தம்பால் அடிமைப்படுத்தி விடும்..

பெண்களை இவ்வளவு தரக்குறைவாகப் பேசும் இப்பகுதியை பிரச்சாரம் செய்து பெண்களை அறிவற்றவர்களாகக் காட்டவே மநு தர்மம் முயற்சிக்கின்றது. தாய் தந்தை மகள் கூட தனித்து இருத்தல் தவறு எனச் சொல்லும் மநு, பெண்ணை உயிருள்ள ஒரு மனிதராகப் பார்க்கத் தவறி ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் தர்மத்தை வலியுறுத்தி இருப்பதை இங்கு காண்கின்றேன். 

இத்தகைய தரக்குறைவான வாசகங்கள் இருந்தும் இந்த நூலை தர்ம சாத்திரம் என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர் எனும் போது அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக ஏதோ பேசுவதைத் தவிர்த்து, இவற்றை வாசித்து தெரிந்து கொண்டு, இந்த நூல் தமிழர் பண்பாட்டுக்கு உகந்ததல்ல எனச் சொல்லி இந்த நூலை புரிதலுடன்  ஒதுக்கி வைத்துப் போக வேண்டியது நம் கடமை.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment