Sunday, April 2, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 112

"மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்?"

இந்த மிக இயல்பான உண்மையை அறியாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத பலரால் ஏற்படும் பாதிப்புக்களும் துன்பங்களும் ஏராளம் ஏராளம். உலகம் புதுமையானது. தினம் தினம், நொடிக்கு நொடி புதுமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது உலகம். சிந்தனையை செயல்படுத்தத் தொடங்கினால் உலகம் நமக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் புதுமைகளை நம்மால் உணர்ந்து கொள்வது எல்லோருக்குமே சாத்தியம். தான் நினைத்த ஒரு செய்தி அல்லது தான் கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தம் என்பது முடிந்த முடிபு என நினைக்கும் மனிதர்கள் சிந்தனை வளர்ச்சிக்கு இடம் கொடுப்பது சாத்தியப்படாது. மாறாக, திறந்த உள்ளத்தோடு புதிதாக வருகின்ற படைப்புக்களையும் செய்யப்படுகின்ற மாற்று முயற்சிகளையும் எதிர்நோக்கப் பழகிக் கொள்வது மனிதக் குல வளர்ச்சிக்கு உதவும். 

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சூழல் தான் உ.வே.சா அவர்களது தமிழாராய்ச்சிகளும் ஓலைச்சுவடி தேடல்களும் நடந்த காலகட்டம். இன்று நமது படைப்பிலக்கியச் சூழலில் காண்கின்ற போராட்டம், பொறாமை, புதுமை முயற்சிகளுக்கு எதிர்ப்பு ஆகியன அன்றும் இருந்ததுதான். சீவக சிந்தாமணி என்ற சமண காப்பியத்தை உ.வே.சா அச்சு நூலாக வெளியிட்ட முயற்சி என்பது அக்கால நிகழ்வின் சூழலில் ஒரு சாதாரண முயற்சியல்ல. சமய வேற்றுமை என்பது ஒரு புறமிருக்க, துணை நூற்கள் இல்லாமை, தகுந்த தகவல்கள் இல்லாமை என்பதும் கூட அச்சுப்பதிப்பில் அவர் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் ஆழத்தை அதிகப்படுத்தின. 

பத்துப்பாட்டு அச்சுப்பணியில் இருக்கும் போது உ.வே.சாவிற்கு கண்டனங்கள் எழுந்தன. அவை சீவக சிந்தாமணி தொடர்பானதுதான். இதனைத் தனது என் சரித்திரம் நூலில் 107ம் அத்தியாயத்தில் உ.வே.சா இப்படிப் பதிகின்றார். 

"ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர். " 

நூற்பதிப்பு முயற்சியில் ஒரு பதிப்பில் விடுபட்ட செய்திகள், முதல் பதிப்பில் இணைக்கப்பட்ட தவறான செய்திகள் என்பன ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. அதிலும் காலத்தால் முந்திய இலக்கியங்களை ஆய்ந்து பதிப்பிக்கும் போது பாட பேத பிரச்சனைகள் பதிப்பித்தலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவது மிக மிக உண்மை. தவிர்க்க முடியாத ஒன்றே இது. இதனால் தான் பல நூற்கள், அதனைப் பதிப்பித்தோராலேயே திருத்திய பதிப்பாக அச்சு வடிவில் மீண்டும் கொண்டு வரப்பட்டன. இதனை அறிவுலகம் வரவேற்க வேண்டியது முக்கியம். அதைவிட்டு தவறாக நூல் வந்துள்ளது எனக் கண்டனக் குரல் எழுப்பி கடுமையாக உழைத்தோரைத் தாக்குவது எவ்வகையிலும் உதவாது ஆனால், எதிர்மாறாக அப்படி உழைப்போரை மன வலு இழக்கச் செய்யும் முயற்சியாகவே அமையும். 

உ.வே.சா தனது சிந்தாமணியின் முதல் பதிப்பில் சில தகவல்களைத் தாம் தவறாக வழங்கியுள்ளதைத் தான் உணர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். உதாரணமாக, திருத்தக்கதேவர் மதுரைக்கு வந்த போது சந்தித்தவர்கள் சங்க வித்துவான்கள் அல்ல என்றும் ஜைனப்பெரியவர்கள் என்று தாம் அறிந்ததைப் பற்றியும் அதனை அடுத்த பதிப்பில் தான் மாற்றியதையும் குறிப்பிடுகின்றார். மேலும் சில நூல் பெயர்கள் சில புலவர்களின் பெயர்கள் ஆகியவற்றிலும் பிழைகள் இருந்தமையை அவர் குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம் மற்றி தாம் அடுத்த பதிப்பினை கொண்டு வர அச்சமயத்தில் நினைத்திருந்தமையும் பதிகின்றார். 

இந்தக் கண்டனங்கள் வந்த சமயத்தில் பத்துப்பாட்டு அச்சுப் பணியில் அவர் ஈடுபட்டிருந்த நேரம். ஒரு நாள் புகழ்ந்தும் மறுநாள் கண்டனம் தெரிவித்தும் எனப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு அவருக்கு மன உலைச்சலைத் தந்துகொண்டிருந்தன. 

கண்டனம் செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு அதில் தான் மன திருப்தி ஏற்படும். ஆக அவர்கள் அதனை மட்டுமே காரியமாகச் செய்வர். அவர்களுடைய கண்டனங்களைக் கேட்டு அதற்காக உணர்ச்சி வசப்படுதலினால் ஆகப்போவது ஏதும் இல்லை. நாம் செய்ய வேண்டிய பணிகள் நம் முன்னே இருக்கும் போது கண்டனங்களைப் புறம் தள்ளி விட்டுச் செய்ய வேண்டிய தமிழ்ப்பணி தொடர்பான காரியத்தில் நாம் கவனம் செலுத்திச் செல்வதுதான் நமது நோக்கம் கலையாமல் நம்மை வழி நடத்தும்!

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment