Sunday, April 9, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 113

உ.வே.சா பதிப்பித்த சீவக சிந்தாமணிக்கு எழுந்த கண்டன அலை ஓயவில்லை. அது தொடர்ந்தது பெருகியது. இப்போது தாம் ஈடுபட்டிருக்கும் சீவக சிந்தாமணி பதிப்புக்காரியங்கள் தடைப்பட்டுப் போகுமே என நினைத்துக் கொண்டு, எழுந்த கண்டனங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு தனது ஆய்வுப்பணியிலேயே தொடர்ந்தார் உ.வே.சா. ஆனாலும் வந்து கொண்டிருந்த எதிர்ப்பு அலைகள் பெருகிக் கொண்டே இருந்தன. இவரது அமைதியைக் கண்டு எதிர்க்கும் முகமாக, "சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்" என்று ஒரு தனி கண்டன நூலையே பதிப்பித்தனர் எதிர்ப்பாளர்கள். இப்படி எதிர்ப்புப் பெருகியதும் மனம் குலைந்து போனார் உ.வே.சா. ஒருநாள் காலையில் எழுந்து இந்த எதிர் குரல்களுக்கு பதில் கடிதம் எழுத ஆரம்பித்தார் உ.வே.சா. அப்போது வாசலில் குடுகுடுப்பைக்காரர், "ஐயா உங்களுக்கு ஷேமம் உண்டாகும். கவலைப்பட வேண்டாம்" எனக் குறி சொல்லி விட்டுச் சென்றிருக்கின்றார். இந்தக் குடுகுடுப்பைக்காரரின் சொற்கள் உ.வே.சா விற்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் கொடுத்த மன பலத்தில் சமாதானக் கடிதத்தை ஒரு வழியாக எழுதி முடித்தார். 

காலையில் இந்தச் சமாதானக் கடிதத்தை எடுத்துக் கொண்டு கல்லூரியில் சாது ஷேஷையரிடம் சென்று காட்டி, இந்தக் கடிதத்தை பிரசுரிக்கலாமா, என கருத்துக் கேட்கச் சென்றார் உ.வே.சா. எப்போதுமே பிரச்சனையான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது ஒன்றுக்குப் பலவாக பலரிடம் ஆலோசனைக் கேட்டு பின் முடிவெடுப்பு உதவும். நாம் பார்த்திராத கோணங்களில் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் என்பதோடு பிறரது அனுபவங்களும் பல வேளைகளில் உதவும் அல்லவா?

கடிதத்தைப் பார்த்த சாது ஷேஷையர், அதனை வாசித்துப் பார்த்த உடனேயே ஏதும் சொல்லாமல் அதனைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டிருக்கின்றார். உ.வே.சாவிற்கு இது அதிர்ச்சியாகி விட்டது. தன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கலாம். ஏதும் சொல்லாமல் இப்படி திடீரென்று கிழித்துப் போட்டுவிட்டாரே என மனதில் சஞ்சலம் தோன்றியது. அதனைப் பார்த்து சாது ஷேஷையர், 
“நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திரிவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். 
உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறியதாக உ.வே.சா பதிகின்றார். 

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இன்று போற்றுபவர்கள் நாளைத் தூற்றலாம். இன்று கண்டனக் குரல் எழுப்புபவர்கள் நாளைத் தூக்கி வைத்துப் போற்றலாம். காலம் தான் இதனை நிர்ணயிக்கும். ஆக, ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டிருப்போர் நேர விரயத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளிலிருந்து விலகி நின்று செயல்படுவதே சிறப்பு. இன்றைக்குத் தூற்றுபவர்கள் கூடப் பின்னர் தமது குறைகளை உணர்ந்து தனது இயலாமையை நினைத்து வருந்தும் நிலை ஏற்படலாம். குறை சொல்பவர் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எந்தப் பணியில் தான் ஈடுபட முடியும்? இது எல்லோருக்கும் பொருந்தும் ஒரு நிலைதான். 

இந்த உரையாடலுக்குப் பிறகு தன் குறிப்பாக உ.வே.சா இப்படி எழுதுகின்றார். 
"இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் 
சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன்." 

கண்டனங்கள் வந்த அதே வேளை ஆதரவாகவும் பலர் இணைந்து கொண்டனர். ஆயினும் எந்த வகையிலும் தனது கவனத்தையும் நேரத்தையும் மறுப்பெழுத பயன்படுத்தக்கூடாது என்பதில் உ.வே.சா உறுதியுடன் இருந்தார். ஆயினும் இவரது ஆதரவாளர்களில் ஒருவரான குடவாயில் சண்முகம் என்பவர் எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கத் தொடங்கினார். இரு தரப்பினரும் மாற்றி மாற்றி எழுதிக்கொண்டிருந்தனர். தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வசைமொழிகள் வந்திருக்கின்றன. மன உலைச்சலை அதிகரித்த இந்த நிகழ்வினால் விளைந்த பயன் எதுவுமில்லை என்று உ.வே குறிப்பிடுகின்றார். தனக்குச் சார்பாக பேசிக்கொண்டிருந்த குடவாயில் சண்முகத்திடமிருந்தும் ஒதுங்கிக்கொண்டு தன் பத்துப்பாட்டு ஆய்வுப் பணியில் மட்டும் தன் கவனத்தை வைத்து அச்சுப்பணிக்காக பணியில் மூழ்கிப்போனார் உ.வே.சா. 

தொடரும்...
சுபா 


No comments:

Post a Comment