Saturday, April 22, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 114

பல சிரமங்களுக்கிடையே பத்துப்பாட்டு பதிப்பு வேலைத் தொடங்கியிருந்தது. ஒரு நூலை அதிலும் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு வடிவில் கொண்டுவருவது என்றால் அது அசாதாரணக் காரியம் தான். ஒரு அமைப்பு, அல்லது அரசு செய்யும் போது மனித வளத்துடன் பொருள் உதவியும் அமையும். செய்ய நினைத்த காரியத்தைச் சுலபமாகச் செய்யலாம். ஆனால் ஒரு தனி நபர் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதில் ஏற்படும் தடங்கல்கள் என்பன ஏராளம் ஏராளம். 

சீவக சிந்தாமணியைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டேயிருந்தனர். ஏனெனில், உ.வே.சாவின் தமிழ் நூல்கள் பதிப்புப்பணியை முடக்க வேண்டும் என்பது அத்தகையோர் நோக்கம். அதனை அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் அசந்து விடக்கூடாது என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு உ.வே.சா தன் பத்துப்பாட்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் மனதில் மற்றொரு கவலையும் இருந்தது. இத்தனை பாடபேதங்கள் கொண்ட சுவடி நூற்கள் கிடைத்தாலும் மூல நூலை இன்னமும் பார்க்கவில்லையே என்ற எண்ணம் அவர் மனதில் முள்ளாய் வருத்திக் கொண்டேயிருந்தது. 

நல்ல சிந்தனையுடனும், உயரிய நோக்கத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது எண்ணியது கிட்டாமல் போகுமா? மூல நூலும் கிடைக்கத்தான் செய்தது! 

கல்லூரி விடுமுறை காலத்தில் சென்னைக்கு வந்து விட்டார் உ.வே.சா. அங்கு அவரது நண்பர் இராமசுவாமி முதலியாரின் இல்லத்தில் தங்கிக் கொண்டார்.அங்கிருந்தபடி பத்துப்பாட்டு அச்சுப்பணியைக் கவனித்து வந்தார். அச்சமயம் திருவண்ணாமலை சைவ மடத்தில் இருந்த யாழ்ப்பாணத்துத் துறவி ஒருவரைப் பற்றி கேள்விப்பட, அந்த முதிய துறவியைச் சென்று பார்த்து பத்துப்பாட்டு பற்றிக் கேட்கலாம் என்று தோன்றியது. சித்த மருத்துவத்திலும் கை தேர்ந்தவராம் அந்தத் துறவி. அவரிடம் சென்று தான் அறிந்த வகையில் திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை என்பவரிடம் நூற்கள் இருப்பதாகப் பிறர் தன்னிடம் குறிப்பிட்டதாகச் சொல்லி அவரிடம் இந்தத் தேடுதலில் உதவுமாறு கேட்டுக் கொண்டார். 

திருவம்பலத்தின்னமுதம்பிள்ளையின் ஏட்டுச் சுவடிகளெல்லாம் மந்தைவெளி பகுதியில் வசிக்கும் அண்ணாசாமி ஆசிரியர் வீட்டில் கொடுத்து விட்டார் என்றும், அங்குக் கேட்டால் கிடைக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. அண்ணாசாமி ஆசிரியரைத் தேடிக்கொண்டு மந்தைவெளி புறப்பட்டார் உ.வே.சா. அங்குச் சென்றதும் அண்ணாசாமி ஆசிரியர் இறந்து விட்டார் என்றும், ஆனால் அவர் சேகரிப்பில் இருந்த நூற்கள் தன்னிடம் உள்ளன என்றும் அவர் மகன் தெரிவிக்க, அவரிடமிருந்த நூற்களையெல்லாம் எடுத்துப் போட்டுத் தேடினர். 

மகிழ்ச்சி. ஆம். முற்றுப்பெறாத, ஆனால் ஒரு மூல நூல் பத்துப்பாட்டு கிடைத்தது. அதுமட்டுமன்று. திருமுருகாற்றுப்படை உரைப்பிரதி ஒன்றும் அதில் கிடைத்தது. அதோடு பதினெண்கீழ்க்கணக்கு முழுவதும் இருந்த, ஆனால் சிதிலமடைந்த பிரதி ஒன்றும் கிடைத்தது. அதில் தான் கைந்நிலை நூலும் இருந்தது. 

இப்படி தமிழ்ப்பொக்கிஷங்களாக அன்று உ.வே.சாவிற்கு கிடைத்தன. 

அதன் பின்னர் தபால் இலாகாவில் சூப்பரிண்டெண்டாக பதவி வகித்த வி.கனகசபைப் பிள்ளையிடமிருந்தும் ஒரு பத்துப்பாட்டு உரைப்பிரதியும் கிடைத்தது. 

தேடத் தேட தமிழ்க்களஞ்சியங்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்துக் கொண்டேயிருந்தன. 

உண்மை தானே. தேடத்தேடத்தான் தேடப்படும் பொருள் கிடைக்கும். தேடாமலேயே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கிடைக்கவில்லையே எனப் புலம்புவோருக்கு எது தான் கிடைக்கும்? 

சென்னைக்கு வருவதற்கு முன்னரே கும்பகோணத்தில் இருந்த போது பத்துப்பாட்டு நூல் அச்சுப்பணிக்காக நண்பர்களிடம் கையெழுத்து வாங்கி ஏறக்குறைய 200 ரூபாய் சேர்த்திருந்தார் உ.வே.சா. அவரது எதிர்ப்பாளர்களுக்கு இது தெரிய வர, இதனைப் பெரிதாக்கி உ.வே.சா பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியை மேலும் தொடங்கினர். இதுவரை பெற்றுக் கோண்ட தொகை போதும் என நினைத்து திருவாவடுதுறை மடத்திற்கு வந்து அங்குத் தேசிகரிடம் தனது அச்சுப்பனியைக் குறிப்பிட்டு பணக்குறைபாட்டையும் சொல்லி வைத்தார் உ.வே.சா. அம்பலவாண தேசிகர் 60 ரூபாய் ரொக்கமும் வழங்கி சென்னைக்கு அனுப்பும் காரியத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். 

நல்ல சிந்தனையோடு நாம் தமிழுக்காக உழைக்கும் போது நல்ல உள்ளம் படைத்தோர் யாவரும் நமக்குத் தேவையான ஏதாவது ஒரு வகையில் உதவத்தான் செய்வர் என்பதற்கு இதுவே சான்று. 

சென்னையில் பத்துப்பாட்டு அச்சுப்பணிக்காக உழைத்துக் கொண்டிருந்த போது, பூண்டி அரங்கநாத முதலியாருடன் உ.வே.சாவிற்கு நட்பு மேலும் நெருக்கமடைந்தது. அவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாகச் சொல்லி சம்மதமா, என உ.வே.சா வைக் கேட்டிருந்தார். உ,வே.சா விற்கு இதில் விருப்பம் இருந்தது. இதனை தன் தகப்பனாரிடம் கூற அவர், தனது முதுமைக் காலத்தில் காவேரி பாயும் கும்பகோணத்திலேயே இருப்பதையே தாம் விரும்புவதாகச் சொல்லிவிட, அந்த வாய்ப்பை உ.வே.சா தன் தந்தையின் நலனுக்காக மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் பூண்டி அரங்கநாத முதலியார் கச்சிக்கலபகம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தார் என்பதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

உ.வே.சாவுடன் பத்துப்பாட்டு அச்சுப்பதிப்புப் பணியில் உதவிக் கொண்டிருந்த இராஜகோபாலாச்சாரியார் அரும்பதங்களையும் அருந்தொடர்களையும் தொகுத்து ஒரு அகராதி தயாரிப்போம் எனச் சொல்லி அகராதி செய்யும் முறையை உ.வே.சாவிற்கு கற்பித்தார். இந்த முறையைக் கற்றுக் கொண்டு அகராதி செய்வது சுலபமாக இருந்ததாகவும் உ.வே.சா குறிப்பிடுவதை அறிய முடிகின்றது. 

நீண்ட உழைப்பின் பலனாய் 1889ம் ஆண்டு ஜூன் மாதம் பத்துப்பாட்டு அச்சு நூலாய் வெளிவந்தது. 

தமிழ் உலகில் உ.வே-சாவின் புகழ் நிலைபெற்றது!

No comments:

Post a Comment