Sunday, April 30, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 115

பல இடர்பாடுகளுக்கிடையே அச்சு நூலாக வெளிவந்தது பத்துப்பாட்டு நூல். தமிழறிஞர்கள் பலர் இந்த வெளியீட்டை போற்றிப் புகழ்ந்தனர். சிந்தாமணிக்கு இருந்த எதிர்ப்பு பத்துப்பாட்டு நூலின் வெளியீட்டில் இல்லை. பத்துப்பாட்டு அச்சேறியதால் தொடர்ச்சியான பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு அது வழிவகுக்கும் எனப் பலர் புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர். 

பத்துப்பாட்டு ஆராய்ச்சியின் போதும் சிந்தாமணி ஆராய்ச்சியின் போதும் நச்சினார்க்கினியருடைய உரை நயத்தைப் பார்த்து அதன் வழி பெற்ற விளக்கம் தனது புரிதலுக்கு மிக உதவியது என்பதை உ.வே.சா. என் சரிதம் நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய உரை விளக்கங்கள் இல்லையென்றால் அச்சுப்பதிப்பாக்கம் சாத்தியம் அடைந்திருக்காது. 

கடினமான செய்யுள் நடையில் அமைந்த நூல்களுக்கு அதன் கால நிலையறிந்து பொருள் புரிந்து கொள்வது என்பது உரைகள் இன்றி சிரமமே. பத்துப்பாட்டு அச்சு வெளியீட்டில் நச்சினார்க்கினியரின் வரலாற்றினைச் சேர்க்கவில்லை. அவரை வணங்கி அவருக்கான ஒரு துதி பாடல் ஒன்றினை மட்டும் இணைத்திருந்தார் உ.வே.சா. அத்துடன் நூலைப்பற்றிய தனது முகவுரை, நூலின் மூலம். நச்சினார்க்கினியருடைய உரைச்சிறப்பு, அரும்பத விளக்கம், அருந்தொடர் விளக்கம், பிழை திருத்தம் ஆகியனவற்றையும் இந்தப் பதிப்பில் இணைத்திருந்தார். 

இது வெளிவந்த சில நாட்களில் மேலும் இரண்டு நூல்களை உ.வே.சா அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டார். அவை ஆனந்த ருத்திரேசர் இயற்றிய வண்டு விடுதூது என்ற பிரபந்த நூலின் மூலமும் மற்றும் மாயூரம் ராமையர் என்பவர் இயற்றிய மயிலை அந்தாதி என்ற நூலின் மூலமுமாகும். 

பத்துப்பாட்டு முடிக்கும் தருவாயில் அவருக்கு மனதில் மற்றுமொரு மாபெரும் நூலினை அச்சுப்பதிப்பாக கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் சிலப்பதிகாரம். இந்த எண்ணத்திற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. இலங்கையின் கொழும்பு நகரில் வசித்து வந்த ஸ்ரீ.பொ.குமாரசுவாமி என்பவர் சிலப்பதிகாரத்தை உ.வெ.சா அச்சுப்பதிப்பாக வெளிக்கொணரப் பொருளுதவி செய்வதாக உறுதி கூறியிருந்தார். ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வே.சா அவர்களே இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த பொருட்செல்வருக்கு இருந்தது. உ.வே.சா மனதில் அந்த விருப்பம் ஆழமானதாக இருந்தாலும் அதுவரை தகுந்த நூல்கள் அவருக்குக் கிடைக்காமலேயே இருந்தன. 

தேடுதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார் உ.வே.சா. 

இடைக்கிடையே ஏனைய நூல்களுக்கானப் பணிகளும் ஏனைய வகைப்பட்ட தமிழ்ப்பணிகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. நல்ல உள்ளம் படைத்த நண்பர்களின் சூழல் உ.வே.சாவிற்கு பெருகிக்கொண்டிருந்தது. உ.வே.சா மேலும் பல பண்டைய தமிழ் நூல்களை அச்சு நூலாக வெளிக்கொணர வேண்டும் என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். 

இடையில் இலங்கையின் கொழும்பு நகரில் இலந்தை எனும் இடத்தில் தண்டபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து அக்கோயிலின் உற்சவ மூர்த்திகளுக்காகப் பிரத்தியேகமாக சில செய்யுட்களை இயற்றித் தரவேண்டும் என உ.வே.சாவிடம் கேட்டிருந்தார் தி.குமாரசாமி செட்டியார் என்ற ஒரு அன்பர். அவருக்கு மற்றுமொரு வேண்டுகோளும் உ.வே.சாவிடத்தில் இருந்தது. விநாயக புராணத்தை அச்சிட வேண்டும் என்பது தான் அது. திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரும் இதே விண்ணப்பத்தை உ.வே.சா விடம் வைத்திருந்தார். ஆக இந்த நூலையும் தண்டபாணிக்கடவுள் கோயிலுக்காகத் தான் இயற்றிய நூலையும் இந்தக் காலகட்டத்தில் உ.வெ.சா அச்சு நூலாகக் கொண்டு வந்தார். இது நிகழ்ந்தது 1891ம் ஆண்டு. 

நண்பர்களின் ஊக்குவிப்பு உ.வே.சாவிற்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சக மனிதர்களின் இனிய சொற்களும் பாராட்டுதல்களும் தானே கடும் உழைப்பாளிகளுக்கு மாமருந்தாகின்றன. இந்த ஊக்கம் தரும் ஆக்கத்தின் விளைவாக சமூகத்திற்குப் பற்பல நலன்களும் விளைகின்றன. 

இந்த வேளையில் உ.வே.சாவின் நண்பரும் முன்னர் உ.வே.சா வை சிந்தாமணி ஆராய்ச்சிக்குள் ஈடுபடுத்தியவருமான சேலம் இராமசாமி முதலியார் சில நூல்களை அனுப்பி வைத்தார். அதில் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் இருந்தது. இது போதாதா இப்பணியைத் தொடக்க? அதற்கடுத்து மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் கைப்பட எழுதிய சிலப்பதிகாரத்தின் மூலப்பிரதி ஒன்றும் கிடைத்தது. தியாகராச செட்டியார் வைத்திருந்த சிலப்பதிகாரப் பிரதி ஒன்றை ஏற்கனவே தன் சேகரத்திற்காக உ.,வே.சா. தன்னிடம் வைத்திருந்தார். இவ்வளவு நூல்கள் கைவசம் இருந்தும் உ.வே.சாவினால் சிலப்பதிகாரம் அச்சுப் பணியைத் தொடக்க முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. 

தொடரும்..

No comments:

Post a Comment