Sunday, May 7, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 116

சிலப்பதிகாரப் பதிப்புப் பணியை உ.வே.சா அவர்களால் தொடங்க முடியாமல் இருந்தமைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. 

முதலில் இக்காப்பியங்களின் இயல்பினைப் பற்றி யோசிக்கத்தான் வேண்டும். சங்க இலக்கியங்களையோ, செய்யுள் வடிவில் நமக்குக் கிடைக்கும் பண்டைய நூல்களையோ புரிந்து கொள்வது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல. ஆசிரியர் அதனை எப்பொருளை முன்னிறுத்தி எழுதியிருக்கின்றார் என்பது ஒரு புறமிருக்க, ஏட்டுச் சுவடியில் நாம் காணும் செய்யுட்கள் பாடபேதம் அற்றவையா என்பதும் ஒரு கேள்வி அல்லவா? சொற்களின் எழுத்துக்கள் மாற்றம் காணும் போது செய்யுளின் பொருளும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல. இச்செய்யுட்கள் எழுதிய காலகட்டத்தில் வழக்கில் இருந்த பண்பாட்டுச் சூழலை நாம் புறந்தள்ளி விட்டுப் பார்ப்பதும் செய்யுளை நாம் ஆசிரியர் என்ன நினைத்து எழுதினாரோ, அதே அந்தப் பொருளைச் சரியாக அடையாளம் காணமுடியாதவாறு செய்துவிடும். ஆக, மொழிப்புலமை என்பதோடு நீண்ட பாரம்பரியம் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இவ்வகை செய்யுட்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக அவசியமாகின்றது. 

இந்தப் புரிதலை எளிமையாக்கும் தன்மை கொண்டவை தாம் உரை நூல்கள். 

உரை நூல்கள் நமக்கு மூல நூல்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சில உரை நூல்கள் மேற்கொள்களையும் வழங்குகின்றன. அப்படி நமக்குக் கிடைக்கின்ற மேற்கோள்களின் அடிப்படையில் மேலும் சில நூற்களைத் தேடிச் சென்று அவை கூறும் செய்திகளையும் அறிந்து கொண்டு வந்து பின் நாம் வாசிக்கும் நூலோடு பொருத்திப் பார்க்கும் போது, வாசிப்பு எளிமையாகும் என்பது மட்டுமல்லாது சரியான புரிதலைக் கொண்டதாகவும் அமையும். 

இன்று நாம் வாசிக்கும் எல்லா நூல்களுமே உரைநடையாகவே அமைந்துள்ளன. கதைகளையும் கட்டுரைகளையும் எளிதில் வாசிக்கும் பொது மக்களால் செய்யுட்களை வாசித்தல் என்பது இயல்பாகவே முடியாத ஒரு காரியமாகி விட்டதால் செய்யுள் நடை என்பது தற்சமயம் அந்நியப்பட்டு வருகின்றது என்பது நிதர்சனம். கடினமான எழுத்து நடையை விட எளிதில் வாசிப்பினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்த எழுத்து நடையே பெரிதும் விரும்பப்படுகின்ற ஒரு எழுத்து நடையாக இன்றுள்ளது. இந்த வகையிலாவது நூல்களை மக்கள் வாசிக்கின்றார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். இன்றைக்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் என்ற வகையில் ஒப்பிடும் போது வாசிப்பு பொது மக்கள் மத்தியில் சற்று அதிகரித்துள்ளது என்பதை வருடா வருடம் தமிழகத்தின் பெரு நகரங்களில் நடக்கின்ற புத்தகக் கண்காட்சிகள் பறைசாற்றுகின்றன. 


சிலப்பதிகாரப் அச்சுப்பதிப்பில் உ.வே.சா விற்கு இருந்த முதல் பிரச்சனை இதுதான். 

அவருக்குக் கிடைத்த சிலப்பதிகாரம் தொடர்பான அனைத்துச் சுவடிகளையும் ஆராய்ந்து பார்த்தார். சிலப்பதிகாரத்திற்கான அடியார்க்கு நல்லார் உரை அடங்கிய சுவடியும் அவருக்குக் கிடைத்திருந்தது. அந்த உரையில் மிக விரிவாக அவர் விளக்கியிருந்ததோடு பல மேற்கோள்களையும் குறிப்பிட்டு அவை அடங்கிய நூல்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இது உ.வே.சா விற்குக் கடல் போன்ற பல புதிய செய்திகளைத் தருவதாக இருந்தது.பத்துப்பாட்டுக்கும் சிந்தாமணிக்கும் இவர் பயன்படுத்திய நச்சினார்க்கினியரின் உரையில் "என்றார் பிறரும்"  என்றே பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது யார் எந்த நூலில் குறிப்பிட்டார்கள் என வாசிப்போரால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு நடை. எந்த நூலில் எந்த ஆசிரியர் எதை குறிப்பிட்டிருக்கின்றார் எனக் குறிப்பிடுவது ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் பணியை வெகுவாகச் சுலபமாக்கும். இது நச்சினார்க்கினியரின் உரையில் இல்லை. ஆனால் அடியார்க்கு நல்லார் இந்த முறையைக் கடைப்பிடிக்கின்றார். ஆக, இந்த அடியார்க்கு நல்லார் உரையைக் கொண்டு உ.வே.சா சிலப்பதிகார அச்சுப்பணியைத் தொடக்கி விடலாம் தான். ஆயினும் சிலப்பதிகாரத்தின் 30 காதைகளில் கானல் வரிக்கும் (7வது காதை) வழக்குறை காதைக்கும்(20வது காதை) உரை கிடைக்கவில்லை. அத்தோடு சிலப்பதிகாரம் முழுமைக்குமான அரும்பதவுரை சுவடி ஒன்றும் உ.வே.சாவிடம் இருந்தது. ஆனால் அதுவும் பழுதாகி மோசமான நிலையில் ஏடுகள் இருந்தன. ஆக 2 காதைகளுக்கு உரையில்லாமல் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன் அந்த விடுபட்ட சுவடிகளைத் தேடி அது கிடைத்ததும் பணியைத் தொடக்குவது தான் சரியாக இருக்கும் என உ.வே.சா முடிவு செய்தார். 

உ.வே.சா விற்கு இருந்த இரண்டாவது பிரச்சனை பண்பாட்டுச் சூழல் பற்றியது.
ஏனெனில் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலசூழலில் சுவடியில் வருகின்ற இசை நாடகப் பாணியில் அமைந்த பகுதிகள் இன்று வழக்கில் இல்லாமல் இருந்தன. ஆக, இந்தப் பண்பாட்டு மாற்றத்தையும் புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இதனைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினால் அது வேறு பல ஆராய்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும். அது நெடுங்காலத்தையும் எடுக்கலாம். சிலப்பதிகார அச்சுப்பதிப்புப் பணியும் இதனால் தள்ளிப்போகும் என உ.வே.சா அஞ்சினார். 

எப்படிப் பார்த்தாலும் சிரமமாக இருக்கின்றதே எனத் தளர்ச்சி ஏற்பட்டது உ.வே.சா விற்கு. 

தளர்ச்சியடைந்து அமைதியானால் செய்ய நினைத்த காரியம் செய்யமுடியாமலேயே போகும். ஆக விடுபட்ட 2 காதைகளுக்கான உரைகளைத் தேடுவது என முடிவெடுத்துக் கொண்டார். தன் தேடுதலை மீண்டும் தொடக்கினார்.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment