Sunday, May 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 119

சாதி ரீதியாக யார் வீட்டில் யார் சாப்பிடலாம் என்ற சமூகப்பிரிவினை மிகக் கண்டிக்கத்தக்கது. உயர்ந்த சாதி எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரில் பலர் தாழ்ந்த சாதி என அடையாளப்படுத்தப்படுவோர் இல்லங்களில் உணவருந்துவதில்லை. சிலர் இன்னமும் அதிகமாக அதனைப் பாவச் செயல் என்றும் சொல்லி சமூகத்தில் ஏற்றத்தாழ்வினையும் பிரிவினையையும் ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நாம் செய்தி ஊடகங்களின் வழியே கேள்விப்பட்ட அரசியல்வாதி திரு.எடியூரப்பா போன்றவர்கள் இன்றும் கூட வெளிப்படையாக இந்தப் பிரிவினைவாதப்போக்கினை நடைமுறையில் கையாள்கின்றனர் என்பது, "காலம் மாறிவிட்டதே, இப்போது எங்கே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு?" எனச் சொல்லிக் கொள்வோருக்கும் கூட அதிர்ச்சியைக் கொடுக்கின்றது அல்லவா? 

தமிழ்ச் சமூகத்தில் படிப்படியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் கூட சாதி பாகுபாடுகளும், மனிதரை மனிதரே தாழ்த்தியும் உயர்த்தியும் பேசிப்பழகும் நிலை இருக்கின்றதென்றால், இன்றைக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமூகப்பிரிவினையின் ஆளுமை என்பது இன்னமும் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.என் சரித்திரம் நூலில் சில உரையாடல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன. ஓலைச்சுவடி தேடுதல் நடவடிக்கை, பழந்தமிழ் நூல் அச்சாக்கம் என்ற விசயங்கள் ஒருபுறமிருக்க, அக்காலத்துச் சமூக நிலவரங்களையும் என் சரித்திரம் நூல் பதிந்துள்ளதால் அவற்றையும் கவனித்துச் செல்வது தேவை என்றே கருதுகின்றேன். 

உ.வே.சா சுவடி நூல்களைத் தேடிச் செல்லும் போது அவர் செல்லும் ஊர்களில் அவர் உணவு சாப்பிடுவதற்காக அவருக்கு ஏற்பாடு செய்யப்படும் வீடுகள் ஐயர் சமூகத்து வீடுகளாகத்தான் இருந்தன என்பதை நூலை வாசிக்கும் பொழுது பல இடங்களில் அவரது பதிவுகளின் வழியே அதனை அறிய முடிகின்றது. அவர் ஒரு செய்தியாக மட்டுமே இதனைப் பதிகின்றார் என்று தான் குறிப்பிட வேண்டும். உதாரணமாகச் சிலப்பதிகாரம் ஓலைச்சுவடியைத் தேடிக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று, அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்கின்றார். அங்கும் தனக்குத் தேவையான நூல்கள் கிடைக்காமல் தன் பயணத்தை மேலும் தொடர்ந்தார். "ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் கற்றவர்கள் இருக்கின்றார்கள், ஓலைச்சுவடி கிடைக்கும்", என சிலர் கூற, அங்குச் சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவரின் தொடர்பு கிடைக்கின்றது. சுந்தரமூர்த்தி பிள்ளை அங்குள்ள அக்கிரகாரம் ஒன்றில் உ.வே.சாவிற்குச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்தார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் சைவப்பிள்ளைமார் இல்லங்களில் ஐயர்மார் சாப்பிடுவது வழக்கமில்லை என்பதை அறிகின்றோம். ஆக, உணவு எனும் போது தமது சொந்த சாதிக்குழுமத்தில் மட்டுமே உணவு உண்ணும் பழக்கம் கடந்த நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்திருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது. இன்றைய தலைமுறையினருக்கு இது ஆச்சரியமளிக்கும் ஒரு தகவலாக அமையலாம் என்றாலும்கூட இச்செய்திகளையும் அறிந்திருப்பதும் அவசியம் என்றே கருதுகிறேன். 

உ.வே.சா சிலப்பதிகாரச் சுவடி நூல் தேடிச் சென்ற சிற்றூரான ஆறுமுகமங்கலம் என்ற ஊருக்கு நான் கடந்த 2016 டிசம்பரில் சென்றிருந்தேன். சாயர்புரத்திலிருந்து கொற்கைக்குச் செல்லும் வழியில் இந்த ஆறுமுக மங்கலம் என்ற ஊரைப்பார்த்து இச்சிற்றூரைத் தாண்டிப் பயணித்தேன். மங்கலம் என வரும் சொல் பிராமண சமூகத்தாருக்கு அரசர்களால் கொடையாக வழங்கப்பட்ட ஊர் என்பதை அறிவோம். இன்றைய நிலையில் இந்தச் சிற்றூரில் பிராமண சமூகத்தவர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உ.வே.சா குறிப்பிடும், அதாவது இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்குப் பிராமண சமூகத்தவர் அதிகமாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகின்றது. 

ஆறுமுகமங்கலம் அக்கிரகாரத்தில் தான் உ.,வே.சாவிற்கு உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரமூர்த்தி பிள்ளை. சுவடிகளை அவரது வீட்டில் வாசித்து விட்டு மதிய வேளையில் உணவருந்த உ.வே.சா அங்குச் சென்று விடுவாராம். அப்படி அங்குச் செல்லும் போது தனக்கு பெரிய விருந்து உபசாரத்தை அந்த வீட்டுக்காரர் நடத்தினார் என்று உ.வே.சா குறிப்பிடுகின்றார். அப்படி விருந்தை ரசித்து உண்ணும் போது தனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்ததையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

அதாவது, முன்னர் ஆண்டாள் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் இந்த ஆறுமுக மங்கலம் என்ற ஊருக்கு வந்ததாகவும், அப்போது அங்கே 1008 பிராமணர் குடித்தனங்கள் இருந்ததாகவும், ஆனால் ஒருவர் கூட அவர் பசிக்கு உணவளிக்கவில்லை என்றும் அதன் காரணத்தால் கோபம் கொண்டு அந்த ஊரையும் மக்களையும் நினைத்து ஒரு வசைக்கவி பாடியதாகவும், அந்த வசைக்கவியில்... "ஆறுமுகமங்கலத்துக்கு யார் போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்" என்று அந்தக் கவிதை இருக்கும் என்றும் அக்கவிதை நினைவில் வந்ததை உ.வே.சா குறிப்பிடுகின்றார். அந்தக் கவிதைக்கு நேர்மாறாக தனக்குக் கிடைக்கும் விருந்தை நினைத்து மகிழ்ந்த உ.வே.சா இதனை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்களோ "ஆமாம், அவர் சொல்லி விட்டுப்போன இழிவை சரிக்கட்டத்தான் நாங்கள் வருவோருக்கு விசேஷமாக விருந்து கொடுக்கின்றோம்" எனச் சொல்லியிருக்கின்றார்கள். 

இந்த ஊரில் உ.வே.சாவிற்கு நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும் சிலப்பதிகார முழு பிரதி கிடைக்கவில்லை. 

அங்கிருந்து திருச்செந்தூர் சென்றார் உ.வே.சா அங்கு செந்திலாண்டவரை வழிபட்டுவிட்டு ஆழ்வார் திருநகரி சென்றடைந்தார். கல்விமான்கள் பலர் இருந்த ஊர் அல்லவோ இவ்வூர். இங்கு நிச்சயம் கிடைக்கலாம் என அவர் மனம் நினைத்தது. 

அங்குச் சுப்பையா பிள்ளை என்பவருடைய வீட்டிற்குச் சென்றார். அவர் ஒரு வக்கீல். குடும்ப சொத்தாக பல சுவடிகள் அவரிடம் இருப்பதாக உ.வே.சாவிற்குத் தகவல் கிடைத்திருந்தது.தான் வந்த காரணத்தை. உ.வே.சா விளக்கினார். அதற்குச் சுப்பையா பிள்ளை, எல்லாச் சுவடிகளும் பழுதான நிலையில் இருந்தன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனப்படாமல் இருந்தன. அவற்றுள் என்ன எழுதியிருக்கின்றார்கள் என வாசிக்கும் திறனும் எனக்கில்லை.இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டு இருப்பதில் என்ன பயன்? ஆற்றிலே ஆடிப் பெருக்கின் போது போட்டுவிடலாமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா சுவடிக்கட்டுக்களையும் ஆற்றில் போட்டு விட்டேன். அதிலும் தேர்போல எல்லாச் சுவடிகளையும் கட்டி ஆற்றிலே விடுவது சிறப்பு எனச் சொன்னார்கள். நானும் அப்படியே செய்தேன். சம்பிராதயப்படி அப்படிச் செய்வது நல்லதாம், எனச் சொன்னார். 

இப்பகுதியை வாசிக்கும் போது நமக்கு மனம் எப்படி அதிர்ச்சியில் உரைகின்றதோ அப்படித்தானே உ.வே.சா உணர்ந்திருப்பார்? 

உ.வே.சா சொல்கிறார், தமிழின் பெருமையைப் பாடிய பெரியோர், தமிழ் நூல்கள் நெருப்பிலும் கருகாமல், நீரிலும் அடித்துச் செல்லாமல் இருந்தனவே என்று சொன்னார்களே. ஆனால், எனது அனுபவமோ வேறு மாதிரியல்லவோ உள்ளது. மக்கள் தமிழ் நூல்களை நெருப்பிலே போட்டு கொளுத்தியிருக்கின்றனர். ஆற்று நீரில் கட்டுக் கட்டாய் சம்பிரதாயம் என்ற பெயரில் வீசியிருக்கின்றனர். எதை நம்புவது? முன்னோர் சொன்ன கதையையா? நிதர்சனமாகத் தான் காணும் உண்மை நிகழ்வுகளையா?, எனத் திகைத்து நின்றார். 

"இப்படிச் சொல்கின்றீர்களே. இது நியாயமா?" என உ.வே.சா மனம் உடைந்து கேட்டார். 

அவருடன் கூட வந்திருந்த ராசப்ப கவிராயர், தான் வந்திருந்த முன்னொரு சமயத்தில் அந்த வீட்டுக்காரர்கள் வாய்க்காலில் சில சுவடிகளை வீசிக்கொண்டிருந்ததாகவும், அதைத் தான் தடுத்து அவற்றை வீட்டில் வைக்கச் சொல்லிச் சொன்னதாகவும், அந்த சுவடிக்கட்டுக்களையாவது கொண்டு வாருங்கள், எனக் கேட்டுக் கொண்டார். 

அந்தச் சுவடிக்கட்டை அவ்வீட்டு நபர்கள் கொண்டு வந்து கொடுத்தனர். அதில் சில பகுதிகள் எலி கடித்து முன்னரே தனது ஆராய்ச்சியை முடித்திருந்தது. மிஞ்சிய பகுதியில் பார்த்தபோது திருப்பூவண நாதருலா என்ற நூலும் சிலப்பதிகார துணுக்குகள் சிலவும் கிடைத்தன. உ.வே.சாவின் மனம் பதைபதைத்தது. தான் தேடி வந்ததோ சிலப்பதிகாரத்தை. இங்கோ சில்லு சில்லாக சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன என்றால் அந்த வீட்டில் கட்டாயம் சிலப்பதிகாரம் இருந்திருக்க வேண்டும். இந்த மக்களின் பொறுப்பற்ற தன்மையால் அது ஆற்றில் வீசப்பட்டு அழிந்திருக்க வேண்டும், என நினைத்த போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"அவற்றை பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டேன். எழுத்துக்கள் தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண அகப்படாமற்போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உனர்ந்து உள்ளழிந்தேன்."

இதைவிட தன் வேதனையை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

தமிழினத்திn தமிழிலக்கியங்களை அந்நிய நாட்டுப் படைகள் வந்து அழிக்கத் தேவையில்லை. தமிழ் மக்களே தாமே சம்பிரதாயம், சாத்திரம் என சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு நன்றாக அழித்து விட்டோம். இனி எஞ்சியவனவற்றையாவது தேடிச் சேர்க்க முயற்சிப்போம். இல்லையென்றால் தமிழ் நம்மை மன்னிக்காது!.

No comments:

Post a Comment