Tuesday, June 6, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 120

சில்லு சில்லாகக் கிடைத்த சிலப்பதிகாரத்துணுக்குகளைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டார் உ.வே.சா. உடைந்து கிடந்த அந்தச் சுவடி நூல்களின்  ஏட்டுத் துணுக்குகள் போலவே அவரது மனமும் அப்போது இருந்தது.  இவ்வளவு அஜாக்கிரதையாக  வாய்க்காலிலும் ஆற்றிலும் ஓலைச்சுவடி நூல்களைப் போட்டிருக்கின்றார்களே; நெருப்பில் போட்டு  சடங்குகள் என்ற பெயரில் அழித்திருக்கின்றார்களே, என அவர் மனம் நினைத்து நினைத்து நொந்து போனது. 

அங்கிருந்து புறப்பட்டு  நாங்குநேரி வந்தார் உ,வே.சா. அங்கும் சிலர் வீடுகளுக்குச் சென்று பேசியதில் மனதில் வெறுப்பும் கோபமும் தான் அதிகரித்ததேயன்றி ஆறுதல் கிடைக்கவில்லை. சிலப்பதிகார சுவடிகளின் நல்ல பிரதிகளும் கிடைக்கவில்லை. 

அங்கிருந்து பின் களக்காடு வந்தார். அங்கே இருந்த சைவ மடத்தில் சென்று விசாரித்தபோது அங்கே நல்ல வரவேற்பு உ.வே.சாவிற்குக் கிட்டியது.  மடத்தின் தலைவராகிய சாமிநாததேசிகர் என்பவர் தாமே பெட்டியைக் கொண்டு வந்து சேர்ந்து அமர்ந்து சுவடி நூல்களை இருவருமாக  ஆராய்ந்தனர். அதில் பல பிரபந்தங்களும் புராணங்களும், வடமொழி நூல்களும் இருந்தன.  பத்துப்பாட்டு மூலம் முழுமையாக அங்கு இருந்தது. முன்னர் தாம் தேடியபோது கிடைக்கவில்லையே என மனம் வருந்தினாலும், இரண்டாம் பதிப்பிற்கு உதவும், எனக் கேட்டு அதனை வாங்கி  வைத்துக் கொண்டார் உ.வே.சா. மூன்று நாட்கள் அங்கேயே சைவமடத்தில் தங்கியிருந்து நூல்களை ஆராய்ச்சி செய்து பின் தான் பெற்றுக் கொண்ட சில நூற்களை எடுத்துக் கொண்டு கும்பகோணம் திரும்பினார் உ.வே.சா.

கும்பகோணம் திரும்பியவுடன், இனி சிலப்பதிகாரப் பதிப்புப் பணியைத் தள்ளிப்போடக்கூடாது என மனதில் எண்ணம் எழ, அந்தப் பணியைத் தொடக்கினார் உ.வே.சா. இதுவரை அவருக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளையெல்லாம் அலசத் தொடங்கினார்.  அடியார்க்கு நல்லார் உரை, அரும்பத உரை, சிலப்பதிகார மூல நூல்கள் என அனைத்தையும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்வது அவசியம் என அவருக்குத் தோன்றியது.  ஒரு நூலை பதிப்பிப்பது சுலபமான காரியம் அன்று. அதிலும் சிலப்பதிகாரம் போன்ற பல நூர்றாண்டுகள் பழமையான நூலை, சுவடியிலிருந்து பெயர்த்து அச்சுப்பதிப்பாக்க அந்த நூலைப்பற்றிய தெளிவு முதலில் ஏற்பட வேண்டியது அடிப்படை அல்லவா? நூல் இயற்றப்பட்ட காலத்தில் இருந்த சமய நெறிகள், அதிலும் குறிப்பாக சமண சமய நெறிகள் பற்றிய தெளிவு, வரலாற்றுப்  பின்புலம், சமகால நிகவுகள், அக்கால சமூகச் சூழல், அரசியல் என பல்வகைப்பட்ட பின்புலத்தோடு தான் சிலப்பதிகார நூலில் இடம்பெறும் சொற்களை ஆராயவேண்டும். ஆக இதனைச் செய்வதற்கு உரையாசிரியர்களின் உரை உதவுவது போன்று அரும்பத உரை ஆய்வும் உதவும் என அறிந்து கொண்டார் உ.,வே.சா. 

சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், சுத்தாநந்தப் பிரகாசம் ஆகிய நூல்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்க,  சிலப்பதிகாரத்திலும் இந்த மூன்று நூல்களிலும்  வரும் இசைக்கலை பற்றிய நுணுக்கமான விசயங்களை வாசித்து வியந்திருக்கின்றார். தனது நண்பர்களிடமும் இந்தப் பழம் தமிழ் நூல்களில் விவரிக்கப்படும் இசை பற்றிய இச்செய்திகளைக் கூறும் போது ”தமிழில் இவ்வளவு சங்கீத சாஸ்திரங்களா” என்று அவர்களும் வியந்தார்கள்,  என உ.,வே.சா குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம் என்ற ஒரு கட்டுக்குள்  மட்டுமல்லாது தமிழர் மரபின் பண்பாட்டுக் கூறுகளை பல பரிமாணங்களில்  விளக்கும் ஒரு சிறந்த நூல் என்ற சிந்தனை உ.வே.சாவின் மனதிற்குள் வேரூன்றியது.  இந்தச் சூழலில் உ.வே.சா தன் மன ஓட்டத்தை இப்படிப் பதிகின்றார்.

“இந்தக் கலைகளையும் இவற்றின் இலக்கணத்தைப் புலப்படுத்தும் நூல்களையும் தமிழ் நாட்டினர்  போற்றிப் பாதுகாவாமற் போனார்களே!” என்று இரங்குவேன். நான் இவ்வளவு முயன்றும் சிலப்பதிகார உரையில் வரும் செய்திகள் ஓரளவு விளங்கினவேயன்றி முற்றும் தெளிவாக விளங்கவில்லை. ”

இப்படியே சிலப்பதிகார ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்தது.

அந்த வேளையில் 1891ம் ஆண்டு பிரான்சிலிருந்து பேராசிரியர் ஜூலியன் வின்சன் என்ற பிரஞ்சுக்காரர் ஒருவரிடமிருந்து  உ.வே.சாவிற்குத் தமிழில் ஒரு கடிதம் வந்தது.  உ.வே.சாவின் சிந்தாமணி அச்சுப் பதிப்பை தாம் பார்க்க நேரிட்டதாகவும் அதன் சிறப்பில் லயித்ததாகவும்.  மேலும் சிலப்பதிகாரம் தொடங்கி ஏனைய மூன்று காப்பியங்களையும் அவர் அச்சுப்பதிப்பாகக் கொண்டு வர வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார் அவர். தனக்கு மறு கடிதம் எழுதுமாறும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பற்றி குறிப்பிடுகையில்,  கடல் கடந்த வேற்று நிலத்தில் வாழும்  வேற்று இனத்தவரானாலும்,  தமிழ் உணர்வால் நாங்கள் நண்பர்களானோம், எனக்குறிப்பிடுகின்ரார். உ.வே.சா.

பேராசிரியர் ஜூலியன் வின்சனுக்கு உ.வே.சா பதில் கடிதம் எழுதினார்.  அதில் அங்குச் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்குமா என்றும் கேட்டு எழுதினார்.  1891ம் தேதி மே மாதம் 7ம் தேதி  அப்பேராசிரியர் எழுதிய பதில் கடிதத்தில் பிரான்சிலுள்ள  Bibliothique Nationale என்ற பெயர்கொண்ட நூலகத்தில்  1000க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இருப்பதாகவும், ஆனால் இதுவரை கேட்டலோக் செய்யப்படாததால் என்னென்ன நூல்கள் அங்குள்ளன எனத் தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நூலகத்தில் இன்று தமிழ் நூல்களை காட்டலோக் செய்திருக்கின்றார்கள். ஆனால் அது இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை. அவற்றுள் சில நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. அரிய பல தமிழ் நூல்கள் இந்த நூலகத்தில் இன்றும் இருக்கின்றன.  அவற்றில் சிலவற்றை   காணும் வாய்ப்பு எனக்கும் கிட்டியதில் எனக்கு  மகிழ்ச்சியேற்பட்டது என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் .  இந்த நூலகத்தைப் பற்றி தனிநாயகம் அடிகள் அவர்களும் தமது நூலில் குறிப்பிடுகின்றார். அவர் நேரில் அங்கு சென்றிருந்தபோது அங்குள்ள தமிழ் நூல்களை தாம் பார்த்ததாகவும் தமிழகத்துக்கு வெளியே இத்தனை தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றவா எனத் தாம் வியந்ததாகவும் தனிநாயகம் அடிகள்  குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் ஜூலியன் வின்சன் தான் தேடிப்பார்த்து அங்கிருக்கும் சிலப்பதிகார   சுவடி நூலை காகிதத்தில் எழுதி அனுப்புவதாகவும் குறிப்பிட்டு பதில் போட்டார்.

இந்த நிகழ்வை உ.வே.சா. இப்படிக் குறிப்பிடுகின்றார்.

”தமிழ் நாட்டில் தங்கள் பரம்பரைச் செல்வமாகக் கருதற்குரிய ஏடுகளை நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கி விட்டவர்களைப் பார்த்து வருந்திய எனக்குப் பல்லாயிர மைல்களுக்கப்பால் ஓரிடத்தில் தமிழன்னையின்
ஆபரணங்கள் மிகவும் சிரத்தையோடு பாதுகாக்கப் பெறும் செய்தி மேலும் மேலும் வியப்பை உண்டாக்கி வந்தது. ஆயிரம் தமிழ்ச்சுவடிகள் பாரிஸ் நகரத்துப் புஸ்தகசாலையில் உள்ளனவென்பதைக் கண்டு, ‘இங்கே உள்ளவர்கள் எல்லாச் சுவடிகளையும் போக்கி விட்டாலும் அந்த ஆயிரம் சுவடிகளேனும் பாதுகாப்பில் இருக்கும்’ என்று எண்ணினேன். மணிமேகலையையும் நான் இடை யிடையே ஆராய்ந்து வந்தேனாதலால் அதன் பிரதி
பாரிஸிலிருப்பதறிந்து அந்நண்பருக்குச் சில பகுதிகளைப் பிரதி செய்து அனுப்பும்படி எழுதினேன். அவர் அவ்வாறே அனுப்பினார்.

தமிழகத்தில் பல தனி நபர்களின் அறியாமையினாலும் அரசின் அலட்சியப்போக்கினாலும் தமிழ் நூல்களும் சுவடிகளும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. ஏனைய உலக நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அங்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் அங்கு  தக்க முறையில் பாதுகாக்கப்படுகின்றன.  இப்படி அயல் நாடுகளில் தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் பலருக்குத் தமிழ் மொழி தெரியாது.  ஆனால் அவர்களுக்கு இது ஏதோ ஒரு மொழியில் அமைந்த அறிவுக்கருவூலம் என்பதனால் இதனைப்  பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கின்றது. அறிவுக்களஞ்சியம் எந்த மொழியில் இருந்தாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொது நலச் சிந்தனை இருக்கின்றது.  இந்த சிந்தனைக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும். அதே வேளை நமது கடமை இந்தத் தமிழ் நூல்களைப் பாதுகாப்பது என்று உணர்ந்து அதற்கேற்ற தக்க நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் வேண்டும்!

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment