Monday, May 15, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 117

நாம் மனதில் ஒன்றைச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைத்துத் தொடக்கிய காரியத்தைச் செய்து முடித்தால் தான் மனதில் எழுந்த அந்தச் சிந்தனைக்கும் பொருள் பிறக்கும். பத்து காரியங்களைச் செய்ய வேண்டும் என நினைப்போம். ஒன்றையும் செய்து முடிக்க அதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்ற செயல்பாடு இருந்தால் நாம் நமக்குள்ளே மாற்றத்தைக் காண இயலாது. மாறாக இருந்த இடத்திலேயே தான் இருப்போம். ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால் மனதில் அதன்மேல் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதனை எவ்வாறு செய்வது என்று அலசி ஆராய வேண்டும். அதனைச் செய்வதற்கான வழி முறைகளை நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும். மனதை அச்செயலில் ஈடுபடுத்த வேண்டும். கவனத்தைச் சிதற விடாது காரியத்திலேயே சிந்தனைக் குவிந்திருக்கும் வகையில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். செய்ய நினைத்த காரியத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாமே தான் சுயமாக மேற்கொள்ள வேண்டும். எல்லாம் தானாக நடக்கும் என்று கனவு கண்டு கொண்டிருப்போருக்கும், பிறர் வந்து உதவுவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போருக்கும் தோல்வி தான் மிஞ்சும். 

ஒரு சிலருக்கு விருப்பம் இருக்கும் அளவிற்கு அதனை அடைய வேண்டிய செயல்களில் தேவைப்படும் முயற்சி இருக்காது. அல்லது முயற்சி குறைவாக இருக்கும். ஓரிரு செயல்களை மட்டும் செய்து விட்டு அலுத்துப் போய் விடுவார்கள் இத்தகையோர். இது வேண்டாம். நம்மால் முடியாது எனத் தனது முயற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்கள். தனது மனம் போகும் போக்கினைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் தாம் இத்தகையோர். 

ஒரு விசயத்தை நாம் கவனித்திருப்போம். பிறரை இப்படி அப்படி, எனக் குறை சொல்லும் நமக்குப் பல வேளைகளில் நமது சொந்த கட்டொழுங்கினைக் கூட கவனித்துக் கொள்ள முடியாமல் மனம் கட்டொழுங்கை மீறிச் செயல்பட விட்டுவிடும் பலகீனம் இருப்பதை நம்மில் சிலர் உணர்ந்திருக்கலாம். மனம் பல விசயங்களில் நாட்டம் கொண்டு அலைபாயும். அதனைச் சீராக்கி செய்ய நினைத்த காரியத்தில் மனதை முழு கவனத்துடன் ஈடுபடுத்திச் செயல்படுத்தும் போது நினைத்த காரியத்தில் வெற்றி கிட்டும். சிலர் மனதைப் பயிற்சி செய்யத் தியானம் செய்வோம் என முயற்சிப்பார்கள். அப்படி தியானம் செய்து சும்மா மனதை வைத்திருக்கப் பழகினாலும் கூட, ஒரு நூலை எடுத்து வைத்து வாசிக்க ஆரம்பித்து கவனம் நிலைக்கவில்லையே என வருந்துவோரும் உண்டு. ஆக மனப்பயிற்சி என்பது எளிதான காரியம் அல்ல. 
ஆனால் அது இயலாத ஒன்றும் அல்ல. 
அது சாத்தியமே. 
எப்படி ? 

எதை அடைய வேண்டும் என நினைக்கின்றோமோ, எதைச் செய்யவேண்டும் என நினைக்கின்றோமோ, அந்தச் சிந்தனை நம்மை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் வகையில் மனதை வைத்திருக்க வேண்டும். அந்தச் சிந்தனைத் தற்காலிகமானதாக இல்லாமல் மனம் அதிலேயே ஒன்றிப்போய் கிடக்க வேண்டும். இந்த நிலையை எட்டும் போது நாம் விரும்பும் செயலைச் செய்து முடிக்க நாம் செய்ய வேண்டிய அனைத்துச் செயல்பாடுகளையும் நாம் செய்து கொண்டேயிருப்போம். அது நமது விருப்பம் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பெருக்கிக் கொண்டே இருக்கும். 

உ.வே.சா சிலப்பதிகாரத்திற்கான உரைகளைத் தேடும் முயற்சியைத் தீவிரமாகத் தொடங்கினார். கும்பகோணத்திலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார். அங்கு திருபட்டாபிராமப்பிள்ளை என்பாருடைய உதவியுடன் சில வித்துவான்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்தார். முதலில் தனது தேடுதலின் போது சுவடி நூல்களை மட்டும் கவனத்தில் கொண்டிருந்தார் உ.வே.சா. பின்னர் அச்சுப்பதிப்பாக வந்தவற்றையும் அலசி ஆராய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தனக்கு உபயோகப்படும் எனத் தான் நினைத்த அச்சு நூல்களையும் பெற்றுக் கொண்டார். சேலத்தில் அவர் தேடி வந்த நூல்கள் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் சலிக்கவில்லை. 

அங்கிருந்து திருச்சிராப்பள்ளியில் இருக்கும் வரகனேரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர்களில் ஒருவராகிய சவரிமுத்தாபிள்ளை என்பவரிடம் நூல்கள் கிடைக்கலாம் என்ற சிந்தனை உ.வே.சாவிற்கு இருந்தது. கிறித்துவ சமயத்தவர் என்றாலும் பல சைவ பிரபந்தங்களையும், புராண நூல்களையும், சாத்திர சுவடிகளையும், பிள்ளையவர்கள் எழுதிய நூல்களையும் அவர் நூலகச் சேகரத்தில் உ.வே.சா கண்டார். தனக்குப் பயன்படும் என நினைத்த சுவடிகளை உ.வே.சா அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் இருந்தன. பின்னர் உ.வே.சா பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அச்சுப்பதிப்பாக்கி வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கும் சிலப்பதிகாரம் தொடர்பான நூல்கள் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் சோர்வடையவில்லை. 

மீண்டும் சேலத்தில் சில நூல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சேலம் இராமசாமி முதலியாரிடமிருந்து தகவல் கிடைக்க சேலம் புறப்பட்டுப் போனார் உ.வே.சா. அங்குச் சபாபதி முதலியார் என்பவரது வீட்டில் பல பழமையான ஏட்டுச் சுவடிகள் இருந்தன. ஆனால் பெரும்பாலும் பழுதாகியும், சில நூல்களில் ஏடுகள் குறைந்தும், சில ஏடுகள் ஒடிந்தும், முறிந்தும் காணப்பட்டன. மிகவும் சிதலமுற்ற நிலையில் இச்சுவடிகள் இருந்தன. அங்கிருந்து ஆறுமுக பிள்ளை என்ற வைத்தியர் ஒருவரின் இல்லத்தில் சுவடிகள் இருப்பதாக அறிந்து அங்குச் சென்றார். அவர் வீட்டில் கணக்கில்லா சுவடிகள் இருந்தன. அவருக்கு வயது 94. ஆனால் பார்ப்பதற்கு 60 வயதுதானிருக்கும் தோற்றத்துடன் அந்தச் சித்த வைத்தியர் இருந்தார் என்பதை உ,வே.சா பதிகிறார். அவரிடம் அகத்தியர் எழுதிய பல வைத்திய நூல் சுவடிகளை பார்த்தார். ஆனால் சிலப்பதிகாரம் தொடர்பான நூல் ஏதும் கிடைக்கவில்லை. உ.வேசாவின் மனமும் ஆர்வத்தை இழக்கவில்லை. 

மேலும் தன் தேடுதல் பயணத்தைத் தொடர்ந்தார் உ.வே.சா.

No comments:

Post a Comment