Monday, May 22, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 118

நாம் உலக மாந்தர் பயன்பட வேண்டுமே என நினைத்து நமது  நேரத்தையும் உடல் சக்தியையும் முழுமையாகப் போட்டு அர்ப்பணிப்புடன் ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிலர்  அவற்றிற்குச் சேதத்தை ஏற்படுத்தினால் நம் மனம் எப்படி பாடு படும்? அப்படித்தான் உ.வே.சா வின் வாழ்விலும் ஒரு அனுபவம் ஏற்பட்டது.

தனது கல்லூரியில் விடுமுறை கிடைக்கும் நாளிலெல்லாம் ஊர் ஊராகத் திரிந்து சிலப்பதிகாரத்தின் சுவடி தேடிக்கொண்டிருந்தார் உ.வே.சா. எப்படியாவது நல்ல பிரதிகள் கிடைத்தால் தான் தனக்கு தூக்கமே வரும் என அவர் மனம் நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்தது. ஆக மீண்டும்  கிடைத்த சிறு இடைவேளையில் பாண்டி நாட்டின் கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்றார். முன்னர் ஏற்கனவே சுப்பிரமணிய தேசிகருடன் அங்கு சென்றிருந்த போது வரகுண பாண்டியன் காலத்து ஏட்டுச் சுவடிகள் ஆலயத்தில் இருப்பதாக  கேள்விப்பட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கோயிலுக்குச் சென்று தர்மகர்த்தாவைப் பார்த்து விசாரிக்கலாம் என்று சென்றார். அங்கு கோயிலில் தர்மகர்த்தா இல்லை. ஆலயத்தில் பொறுப்பில் இருந்த ஒருவரை அணுகி ஓலைச்சுவடிகள் பற்றி விசாரிக்கலானார் உ.வே.சா.

அந்த மனிதரோ தனக்கு யாதும் தெரியாதென்றும் எல்லாம்  கணக்கு வழக்குச் சுருள்கள் என்றும் நூல்களும் அதில்  இருந்தனவென்றும், அவை குப்பைக்கூளங்கள் போலக் கிடந்தன என்றும்  கூறினார். குப்பையாக இருந்தாலும் பரவாயில்லை. தான் அதில் தனக்குத் தேவையானதைத் தேடி எடுத்துக் கொள்ளமுடியும் என கேட்டுப் பார்த்தார் உ.வே.சா. மீண்டும் மீண்டும் கேட்டும் கதை அளந்து கொண்டு ஓலையைப் பற்றிய செய்தியை நேரடியாகத் தெரிவிக்காமல் சுற்றி வளைத்துப் பேசிக்கொண்டிருந்தார் அந்த மனிதர். உ.வே.சாவுக்குப் பொறுக்கவில்லை. அந்த மனிதரை சுவடிகள் இருக்கும் அறைக்கு செல்லலாம் என அவசரப்படுத்தினார் உ.வே.சா அப்போது நடந்த உரையாடலை உ.வே.சா இப்படிப் பதிகின்றார்.

"அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டேன்.

“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.” 

“ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.

“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர் வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!"

நினைக்கும் போதே மனம் பதறுகின்றதே. இப்படி எத்தனை எத்தனை மூடர்களால் என்ணற்ற தமிழ்ச் சுவடிகள் அழிக்கப்பட்டனவோ என நினைக்கும் போது சாத்திரம் சம்பிரதாயம் எனப் பேசி அறியாமையில் அவலம் செய்யும் இந்த மூடர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்ய வேண்டும் என்று தான் தோன்றுகின்றது. தமிழின் கருவூலங்கள் எத்தனையோ இப்படிப்பட்ட மூடர்களால் அழிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கும் போதே வருத்தத்தில் மனம் நடுக்கமடைகின்றது. உண்மையில்  இயற்கையாக அழிந்த சுவடிகளை விட இவ்வகை மூடர்களால் சாத்திரம் எனக் காரணம் காட்டிக் கொண்டு அழிக்கப்பட்ட சுவடி நூல்கள் தான் ஏராளம். 

ஆகமமும் சாத்திரமும் சொல்லியிருக்கும் செய்திகளைச் சரிவர புரிந்து கொண்டு அதன் படி செய்ய முயற்சிக்க வேண்டும். அல்லது சாத்திரங்கள் தவறான கருத்துக்களை முன் வைக்கும் போது அறிவுக்கு அக்கருத்து உகந்ததா என யோசித்துக் காலத்துக்கு ஒவ்வோதனவற்றை உதறித்தள்ளிவிட துணிய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்வதில்லை. நினைப்பதுமில்லை. கண்களை மூடிக்கொண்டு இது தான் சம்பிரதாயம், இதுதான் சாத்திரம். இதனை மீறினால் அது  பண்பாட்டுக்கும் தாம் சார்ந்திருக்கும் மதத்திற்கும் அவமதிப்பதாகும் என சாடிக் கொண்டிருப்பர். ஒரு சாமியார் சொன்னால் தன் பிள்ளையயே வெட்டிக்கொடுத்து சமைத்து சாமிக்குப் படையலிடத் துணியவேண்டும் எனச் சொல்கின்ற கருத்துக்களையும் கேள்வி கேட்காமல் புகழ்ந்து பேசும் மடமை இன்னமும் இருக்கத்தானே செய்கின்றது. கருணையே வடிவான இறையருள் இப்படி ஒரு கொடுமையை நாமே செய்யவேண்டுமென்று வந்து கேட்குமா? என்று கொஞ்சம் இருக்கின்ற புத்தியைப் பயன்படுத்தி யோசிப்பதற்குக் கூட பலருக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில்  மடமையும் மூடத்தனமும் கொண்டு மக்கல் இருப்பட்து, ஏமாற்றுவாதிகள் பலருக்குத் தாங்கள் ஜீவிக்க நல்ல வாய்ப்பாகிவிடுகின்றது. 

அந்தக் கோயிலை விட்டு வெளியேறி  வரும் முன்னர் இப்படிப்பட்ட அக்கிரமம் இனி நடக்கக்கூடாது இறைவா, என வேண்டிக் கொண்டே வந்தார் உ.வே.சா. 

நாமும் இப்படி வேண்டிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. இன்னமும் கூட சில கோயில்களில் குப்பை மூட்டைகளாய் ஓலைகளைக் கொட்டி வைத்திருக்கின்றார்கள். பாதுகாப்போம் என அணுகிக் கேட்டால் அதற்கும் சம்மதம் தெரிவிக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. தானும் பாதுகாக்க மாட்டர்கள் . பாதுகாப்போம் என முனைந்து  செல்வோரையும் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இத்தகைய மூடர்களால் தமிழ் சமூகத்துக்கே கேடுதான்!

தொடரும்.

சுபா

No comments:

Post a Comment