Saturday, February 28, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா ! - 78


சுப்பிரமணிய தேசிகர் மேற்கொண்ட பாண்டி நாட்டுப் பயணம் தேசிகரோடு உடன் சென்ற ஏனையோருக்கு எப்படி மகிழ்ச்சியைத் தந்ததோ அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியைத் தருவதாக உ.வே.சாவிற்கு அமைந்தது என்பதில் வியப்பில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தமது வாழ்க்கையை அதுவரை அனுபவித்திருந்த உ.வே.சாவிற்கு இந்தப் பயணம் தென் தமிழக்த்திலிருந்து மத்தியப் பகுதி வரை பல ஊர்களையும் சிற்றூர்களையும், கிராமங்களையும் அறிமுகப்படுத்துவதாக அமைந்தது.  இப்பயணத்தில் பல ஆலய தரிசனங்களும் இவருக்கு அமைந்தது. பல புலவர்களையும், செல்வந்தர்களையும், திருவாவடுதுறை மடத்தின் மீது பற்று கொண்டிருந்த வேறு பலரையும்  நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. புதிய நட்புக்களும் உருவாகின.

இந்தப் பயணத்தின் போது குற்றாலத்தில் சுப்பிரமணிய தேசிகர் சில நாட்கள் தங்கியிருந்தார். இப்பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான பல கிராமங்கள் அப்போது இருந்தன. இக்கால கட்டத்தில் இந்தக் கிராமங்கள் அனைத்தும் வேணுவன லிங்கத் தம்பிரான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இருந்து வந்தன.  இந்தக் கிராமங்களே திருவாவடுதுறை மடத்தின் ஜீவாதாரமாக இருந்தன என உ.வே.சா. தன் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். அங்கே கம்பனேரி புதுக்குடி என்ற பெயர் கொண்ட ஒரு கிராமத்தை இந்தப் பயணத்தின் போது தேசிகர் வாங்கியமை பற்றிய குறிப்பும் வருகின்றது. இச்செய்திகள் இன்றைக்கு ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை நன்கு செல்வச் செழிப்போடு இருந்த நிலையை விளக்குவதாக அமைகின்றது.

தாம் வாங்கிய அந்த கிராமத்திற்கு தமது குருவின் நினைவாக அதன் பெயரை மாற்றி அம்பலவாணதேசிகபுரமென்று புதிய பெயரிட்டிருக்கின்றார் தேசிகர். இதே பெயரில் தான் இன்னமும் இந்தக் கிராமம் விளங்குகின்றதா எனத் தெரியவில்லை.

திருப்பனந்தாள் காசிமடத்தின் ஆதீனகர்த்தராக அவ்வேளையில் இருந்து வந்த  ஸ்ரீராமலிங்கத் தம்பிரான் சுப்பிரமணிய தேசிகரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இவர் தேசிகர் பயணம் செய்கின்றாரா என அறிந்து தாமும் இப்பயணத்தில் வந்து இணைந்து கொண்டாராம். இதற்காக தனிப்புகைவண்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் பயணித்து வந்து  திருநெல்வேலி வழியாக வந்து செவ்வந்திபுரம் அடைந்து தேசிகரோடு சில நாட்கள் இருந்திருக்கின்றார். புதிதாக வாங்கிய அம்பலவாணதேசிகபுரத்திலேயே இவர்கள் தங்கியிருக்கின்றனர்.  உ.வே.சா தரும் விளக்கங்கள் இது ஒரு விசாலமான பெரிய கிராமமாக இருந்தது என்பதைக் காட்டுகின்றது. தேசிகரும் தம்பிரானும் மடங்களைச் சேர்ந்த ஏனையோரும் இருந்த காரணத்தால் இந்தக் கிராமம் திருவிழா கோலம் பூண்டு அலங்கார சகிதம் பெரிய நகரம் போன்ற தோற்றத்தை அவ்வேளையில் காண்போருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

பாண்டிய நாட்டில் சிறப்பு பெற்ற கோயில்களில் சங்கர நயினார் கோயிலும் ஒன்று. இங்கு நடைபெறும் ஆடித் தவசு உத்சவம் மிகப் பெரிய சிறப்பு பெற்ற ஒரு வைபவம். இவர்கள் இருந்த வேளையில் இந்தத் திருநாளும் கூடிவர அனைவரும் உத்சவத்திலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். சிவபெருமானும் பெருமாளும் பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியே இங்கு பிரதான தெய்வம். இங்கு உ.வே.சாவும் இறை தரிசனம் செய்து மகிழ்ந்திருக்கின்றார். அது மட்டுமல்லாது அந்த ஆலயத்தில் ஒரு விஷேஷம் ஒன்று இருந்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

அந்த ஆலயத்தில் உள்ள புற்று மண்ணை மருந்தாக சாப்பிட்டு தங்கள் உடல் நோயைக் தீர்த்துக் கொள்ள வந்த பல பக்தர்களை உ.வே.சா பார்த்திருக்கின்றார். இந்த வழக்கம் இன்னமும் பொது மக்கள் மத்தியில் வழக்கில் உள்ளதா எனத் தெரியவில்லை.இக்குறிப்புக்களை உ.வே.சா என் சரித்திரம் அத்தியாயம் 76ல் வழங்குகின்றார்.

பொதுவாக சைவ ஆதீனங்கள் அக்காலகட்டத்தில் மிகுந்த செல்வச் செழிப்புடனும் மிகுந்த பீடுடனும் விளங்கின என்பதையும் ஆதீனகர்த்தர்கள் வெறுமனே ஆதீனங்களை மட்டும் அலங்கரித்துக் கொண்டிராமல்  பல ஊர்களுக்குப் பயணம் செய்து வந்தமை பற்றியும், சைவ ஆதினங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விரிவாக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள சிறந்த ஆவணமாகவும் என் சரித்திரம் விளங்குகின்றது. தேசிகர் போன்ற ஆதீனத் தலைமைப்பீடத்தை அலங்கரித்தோர், தமிழ் அறிவு, சைவ சிந்தனை என்று மட்டும் தம் ஆளுமையின் வட்டத்தைக் குறுக்கிக் கொள்ளாமல் தம் ஆளுமைக்குட்பட்ட ஆதீனத்தின் சொத்துக்களைப் பரமாரித்து வளர்க்கும் நிர்வாகத் திறமையும் பெற்று விளங்கினர் என்பதையும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது.


தொடரும்..

No comments:

Post a Comment