Saturday, February 21, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 3

வாசிப்பின் பதிவு -3


ப்ளேட்டோவின் அரசியல் நூலில் சாக்ரடீஸ் தன் நண்பர்களுடன் உரையாடும்  பகுதியில் இரண்டாம் பகுதியிலிருந்து இன்றும் சில வாசகங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

முதல் பகுதி நீதி-அநீதி ஆகியன என்ன என்பதை அலசுகின்றன. இரண்டாம் பகுதி கடவுள் பற்றிய எவ்வகையான கதைகள் இளம் சிறார்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்? அறிவிற்குகந்த தூய சிந்தனை மட்டும் கொண்ட கடவுள் பார்வை எவ்விதமான நன்மை தரும்.. பொய்ஜாலம் நிறைந்த மாயவித்தை கலந்த கடவுளையே பொய் சொல்பவராக, தவறு இழைப்பவராக, தண்டனை பெறுபவராகக் காட்டும் கற்பனை கதைகள் எவ்வகையில் குழந்தைகளின் மனவளர்ச்சியில் கெட்ட தாக்கத்தை உருவாக்கும் என உரையாடும் பகுதி. இதில் சாக்ரடீஸ் மேலும் அடிமண்டீஸுடனும் ஏனையோருடனும் தனது கேள்விகளை முன் வைத்து சிந்தனையைத் தொடர்கின்றார்.

(மொழிபெயர்ப்பு: அறிஞர் சாமின்நாதசர்மா)

சாக்: கடவுள் நல்லவர்தானே?

அடீ: ஆம்.

சாக்: அப்படியானால் அவரை நல்லவரகத் தானே விவரிக்க வேண்டும்?
அடீ: வாஸ்தவம்

சாக்: நல்லவரான அவர் நல்லதைத்தானே செய்யமுடியும்” அவர் செல்வத்தைத்தானே கொடுப்பார்?
அடீ: ஆம்.

சாக்: அப்படியானால் பூலோகத்திலுள்ள நல்லவைகளுக்கெல்லாம் அவர் பொறுப்பாளி. தீமைகளுக்கெல்லாம் அல்ல.அப்படித்தானே?

அடீ.ஆமாம்

சாக்: தீமைகளுக்கெல்லாம் காரணமாக வேறு ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். கடவுள் நல்லவர், அவர் யாருக்கும் தீங்கு செய்யமாட்டார். அப்படி யாருக்கேனும் அவர் தண்டனை விதித்தால் அஃது அவர்களைத் திருத்துவதற்காகவே என்று இம்மாதிரியான நீதிகளைப் புகட்டக்கூடிய கதைகளையே நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கவில்லை. நல்லவற்றை மட்டுமே சிருஷ்டிக்கின்றார் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தில் பதியவைக்க வேண்டும்.

அடீ: நீ சொல்வதை நான் பரிபூணமாக ஏற்றுக் கொள்கிறேன்.

சாக்: கடவுள் ஒரு ஜாலவித்தைக்காரரல்ல. அவர் இஷ்டப்பட்டபோது இஷ்டமான உருவத்தை எடுத்துக் கொள்ளமாட்டார். அவர் மாற்றமில்லாத சரளமான சுபாவமுடையவர். இதை நீ நம்புகிறாயா?

அடீ: இதற்குத் திடீரென்று நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

சாக்: சரி. உண்மையான எதுவும், அல்லது பூரணத்துவம் வாய்ந்த எதுவும் சுற்றுச் சார்புகளினால் மாறுபடாதென்பதை ஒப்புக்கொள்கிறாயா?

அடீ: ஒப்புக் கொள்கிறேன்.

சாக்: கடவுளும் கடவுட் தன்மையும் பூரணத்துவம் வாய்ந்தவை தானே?

அடீ: ஆம்.

சாக்.எனவே கடவுள் சுற்றுச் சார்புகளினால் பாதிக்கப்பட மாட்டார் அல்லவா?

அடீ:ஆம்.

சாக்: அப்படி பாதிக்கப்பட்டால் அவர் கடவுளல்லவே? அதாவது கடவுட் தன்மையினின்று அவர் இறங்கிவிடுகின்றாரல்லவா?

அடீ: உண்மை

...
சாக்: அப்படியானால் கடவுள் இழினிலைக்கு வந்துவிட்டார் என்றுள்ள கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் பெரியவர்களாகிறபோது இழிவான மார்க்கத்தைக் கடைபிடிக்க ஏதுவாகின்றது. புராதன கதைகளின் உண்மையைப்பற்றி நமக்கு நிச்சயமாக ஒன்றும்  தெரியாது. அதனால் உண்மையல்லாதனவற்றை உண்மை போல எடுத்துச் சொல்வது பொய்தானே?

சாக்ரடீஸ் சொல்வதாக ப்ளேட்டோ எழுதியிருக்கும் இந்த கடைசி பகுதியில்  சிந்தனைக்கு விருந்தாகும் உண்மை அடங்கி இருக்கின்றது.

​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

No comments:

Post a Comment