Saturday, March 7, 2015

மகளிர் தினம் - 2015

உலகெங்கும் நாளைய தினம் மார்ச் 8  சர்வதேச மகளிர் தினம்  கொண்டாடப்பட உள்ளது. உலக நாகரிக வளர்ச்சியில் மிக விரிவாக பல பொருளாதார முன்னேற்றங்களை நாம் கண்டு அதனை நுகர்வோராக இருகின்ற அதே வேளையில் உலகின் எல்லா மூலைகளிலும் பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருவதை தொடர்ந்து அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் கேள்விப்படுகின்றோம்.

வளர்ச்சி அடைந்த நாடுகளாகட்டும், வளர்ச்சி குறைந்த நாடுகளாகட்டும், பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகளாகட்டும், ஏழை நாடுகளாகட்டும், போர் நிகழும் நாடுகளாகட்டும், சமாதானச் சூழல் கொண்ட நாடுகளாகட்டும்...எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் பெண்கள் தாக்கப்படுவதும், பெண்ணாக இருப்பதால் சகஜமாக கிடைக்க வேண்டிய பல சௌகரியங்கள் தடுக்கப்படுவதும், இரண்டாம் தர சமூகப் பார்வை இருப்பதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்த நிலையில் பெண்களுக்கு கல்வி என்பது பல வகைகளில் பெண்களின் வாழ்க்கை நலம் பெற அடிப்படையை அமைத்துக் கொடுக்கும் கொடையாக அமைந்திருக்கின்றது. பெண்களுக்கு கல்வியும் அது தரும் தன்னம்பிக்கையும், அதனால் ஏற்படும் மேம்பாடும் மிக உறுதியானவை. ஒரு பெண் நிலையாக நின்று போராட்டங்கள் நிறைந்த இந்த உலகில் தனது வாழ்க்கையையும், தனது குடும்பத்தையும் வழி நடத்திச் செல்ல  அடிப்படையை வகுத்துக் கொடுப்பது கல்வி தான்.

பெண்குழந்தைகளுக்கு கல்வி இன்றியமையாதது. எக்காரணத்தினாலும் பெண்குழந்தைகள், பெண்களின் கல்வி தடைபடுவது நிகழ்ந்தால் அதனை சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தடுப்போம். பெண்குழந்தைகள் நல்ல கல்வி பெற இந்த மகளிர் தினத்தில் ஏதாவது ஒரு வகையில் இச்சிந்தனையை பரப்புவோம்.



அன்புடன்
சுபா

1 comment:

  1. அருமையான சிந்தனை .....தோழி. கல்வியே வாழ்வின் திறவுக்கோள். என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete