Wednesday, March 11, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 10

இளம்பெண்கள் பொட்டுக்கட்டுதல் ஒழிப்பு சட்டம் தொடர்பாக குடி அரசு இதழில் ஒரு தலையங்கத்தில் திரு.ஈ.வே.ரா அவர்கள் குறிப்பிடும் சில விஷயங்கள் அக்கால சூழலில் பொட்டுக் கட்டுதல் பற்றிய சில குறிப்புக்களை வழங்குவதாக இருக்கின்றது. தமிழக சூழலில் பெண்களைக் காமப்பொருளாக சமூக ரீதியாக அங்கீகரிக்கச் செய்யும் ஒரு நடைமுறை வழக்கமாக இவ்வழக்கம் இடம் பெற்றிருக்கின்றது. படிப்படியாக பல சமூக நல விரும்பிகளின் தீவிர முயற்சிகளினாலும் பொது மக்கள் மத்தியில் ஓரளவேனும் இந்த சமூக  அநிதியானது குறைக்கப்பட்டது என்ற போதிலும் இப்போதும் கூட அவ்வப்போது பொட்டுக்கட்டுதல் நிகழ்வதாக  செய்திகள் காண்கின்றோம். 

இந்தத் தலையங்கத்தில் திரு.ஈ.வே.ரா அவர்கள் எழுத்திலிருந்து...
ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்று சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் பொட்டுக்கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டுமாதலால்14 வயதிற்குள் தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அதாவது எந்தப் பென்ணையும் 14 வயதிற்கு மேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்பதில்லை.

ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்த பிறகு  16 வயதிற்குக் கீழ்பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப்பட்டால்  கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு  அந்த விதமாக அனேக கேஸ்கள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றிருக்கின்றார்கள்.

ஆகவே வைதீகர்களது அபிப்ராயப்படி பார்த்தாலும் கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோயில்களில் பொட்டுக்கட்ட மத அனுமதி இல்லையென்று தெரிகின்றது.  இந்தியன் பினல்கோடுபடி  ஒரு மைனர் பெண்ணை பொட்டுக் கட்டுவது குற்றமென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்தரவு பெற்று விடுகின்றார்கள்.  இது வியபசாரத்திற்கு அனுமது கொடுப்பதாகுமே அன்றி வேறில்லை. பொதுஜன அபிப்ராயம் இதனை சட்டமாக்க அனுகூலமாயேயிருக்கின்றது. பத்திரிக்கையில் இதனை ஆதரித்து எழுதியும் பொதுக்கூட்டங்களில்   ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள்  நிறைவேற்றியும்  இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும்  சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும்  இருக்கின்றனர். ...

இந்த நாள்பட்ட சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக்கின்றது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமுதாயமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்

குடி அரசு தலையங்கம் - 23.03.1930


பொட்டுக்கட்டுதல் என்ற சமூக அங்கீகரிப்பு வழங்கப்பட்ட விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, அதிலும் தன் வாழ்க்கை நிலை பற்றி அடிப்படை அறிவு கூட அற்ற நிலையில் இருக்கும் இளம் பெண்ணை தள்ளுவது எப்படிப்பட்ட ஒரு வருந்ததக்க ஒரு நிலை..? நினைக்கும் போதே மனம் அதிர்ச்சியடைகின்றது. அதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இத்தகைய கீழ்மையான நிலைக்குத் தள்ளி அவர்கள் வாழ்க்கையை குலைப்பதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்? தங்கள் குழந்தைகளின் முழு வாழ்க்கையையுமே அஸ்தமனமாக்கும் சிந்தனை எப்படி ஒரு பெற்றோருக்கு வர முடியும்? ஏழ்மை.. பணத்தேவை என்பது ஒரு மனிதரை அவ்வளவு கீழ் நிலைக்கு தள்ளி விடமுடியுமா? 

திரு.ஈ.வே.ரா போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பல தொடர்முயற்சிகள் இத்தகைய சமூகக் கேடுகள் குறைய உதவியிருக்கின்றன என்பதோடு சிந்தனை மாற்றத்தையும் அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கொண்டுவந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சுபா

No comments:

Post a Comment