Sunday, March 15, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 79

நூல்களில் செய்திகளை வாசித்து அறிவது என்பது ஒரு அனுபவம். இது சிந்தனைக்கு அதிக உழைப்பைக் கொடுக்கும் ஒரு வேலை. உருவகங்கள் நிறைந்த செய்திகள் என்றால் நமது கற்பனை திறனும் அதில் கலந்து துணை புரிய வேண்டும். இல்லையேல் ஒரு குறிப்பிட்ட விசயம் பற்றிய தெளிவு என்பது நமக்கு கிட்டாது. எவ்வளவு கற்பனை திறனும் ஒப்பீட்டுத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்தாலும் கூட சில விஷயங்களை நேரடி அனுபவத்தின் வாயிலாகப் பெறுவது தான் அவ்விஷயத்தைப் பற்றிய நல்ல தெளிவினை வாசிப்போருக்குத் தர இயலும். இல்லையென்றால் ஒரு யானையை மூன்று வெவ்வேறு இடங்களில் தொட்டுப்பார்த்து யானை என்றால் இது தான் என முடிவினை எட்டும் கண்புலன் இல்லாதோர் நிலைக்கொப்பத்தான் நமது நிலையும் அமையும்.

பாண்டி நாட்டில் சங்கரநயினார் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும் அவர் தம் குழுவும் திருச்செந்தூர் நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்த போது ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூர்  அல்லது கருவை என்றழைக்கப்படும் ஊரில் தங்கியிருக்கின்றனர். இந்த ஊரில் இருக்கும் ஆலயத்தைப் பற்றி தாம் முன்னர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வாசித்து தெரிந்து கொண்ட  நூல்கள் பற்றியும் அப்போது செய்யுள் தமக்குப் புரிந்தாலும் காட்சி புரியாத நிலை இருந்ததனையும் இப்போது நேரில் ஆலய தரிசனம் செய்யும் போது கிட்டிய தெளிவான அனுபவத்தைப் பற்றியும் விவரிக்கின்றார்.

தமிழ்ப்புலவர் பாண்டிய மன்னர் வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி ஆகிய மூன்றையும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே.சாவும் ஏனைய மாணவர்களும் பாடம் கேட்டிருக்கின்றனர் என்ற செய்தியும் அக்காலகட்டத்தில் தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்கள் இந்த ஆலயத்தைப் பற்றி குறிப்பிடும் இந்த நூற்களை படித்திருப்பர், இந்த ஆலயத்தைப் பற்றி நன்கு தெரிந்திருப்பர் என்றும் உ.வே.சா அத்தியாயம் 76ல் குறிப்பிடுகின்றார். பாடல்களைப் படித்த போது தமக்குக் கிட்டிய அனுபவம் வேறு நேரில் ஆலயத்தைக் காணும் போது கிட்டிய அனுபவமே வேறு என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

" ....ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்."

இக்காலத்திலும் மாணர்களுக்குக் கல்வி என்பது புத்தகப் படிப்பு என்பது மட்டுமல்லாது அனுபவப் படிப்பாகவும் அமைய வேண்டியது முக்கியமான அம்சம். இதனைக் கருத்தில் கொண்டு வரலாற்று சுற்றுலாக்களைப் பள்ளியில் ஏற்பாடு செய்து மாணவர்களைப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டி வரவேண்டும். இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு தெளிவினை வழங்குவதோடு மேலும் தொடர்ந்து வாசித்து தெளிவில்லா விஷயங்களுக்குத் தெளிவினைக் காணும் முயற்சியில் நன்கு உதவும். 

பாண்டிய மன்னர் வரதுங்க ராம பாண்டியர் சிறந்த ஆட்சி செய்த மன்னர் என்றும் நல்ல இலக்கிய ஞானம் பெற்ற புலவர் என்ற தகவலும் இப்பகுதியை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.
 
இந்த ஊருக்கு வந்த சமயம் தன்னிடம் திருவாவடுதுறையில் பாடம் கேட்ட தம்பிரான் ஒருவரை வழியில் உ.வே.சா சந்திக்கின்றார். உ.வே.சாவிற்கு அவரை அடையாளம் காண முடியவில்லை. ஏனெனில் அவர் தோற்றம் அவரை அடையாளம் காண முடியாத நிலைக்கு ஆக்கியிருந்தது. முன்னர் தம்பிரானாக  நீண்ட சடாமுடியுடன் ருத்திராட்சத்துடன் இருந்தவர் இப்போது சாதாரண உடையில் குடும்பஸ்தர் தோற்றத்தில் உலவியது தான் இதற்கு காரணம். ஆனால் அந்த மனிதர் இவரை வணங்கி தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். கொக்கலிங்கத் தம்பிரான்  சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டமையைக் குறிப்பிடுகின்றார். ஊர் திரும்பியதும் குடும்ப வாழ்க்கையில் நாட்டம் ஏற்பட்டமையால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாகவும் அங்கே ஊரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பாடம் சொல்வதாகவும் ஊரார் தம்மை நன்கு ஆதரித்து வருவதாகவும் கூறுகின்றார்.

இந்தச் செய்தியை  சுப்பிரமணியத் தம்பிரானிடம் சென்று உ.வே.சாவும் ஏனையோரும் குறிப்பிடுகின்றனர். இதற்கு தம்பிரான் சொல்லும் பதில் சுவையானது. பொருள் பொதிந்தது.

"பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்."

காவி உடை தரித்து தன்னைத்  துறவி என வெளியே காட்டிக் கொண்டு ஆனால் மறைமுகமாக குடும்ப வாழ்க்கை நடத்தும் சிலரது நடவடிக்கைகளை இன்றும் கூட அவ்வப்போது கேள்விப்படுகின்றோம்.  இத்தகைய சிலரது போக்குகளால் உண்மையான துறவிகளின் நற்பெயர் கூட களங்கம் பெற்று விடுகின்றது. யார் தூய்மையானோர் யார் ஏமாற்று வாதி எனப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்யாத மக்கள் பலர் இருக்கும் இக்காலகட்டத்தில் சில ஏமாற்றுவாதிகளால் நல்லோர் நற்பெயரும் பாதிப்படைவது நடக்கின்றது.

பல ஏமாற்றுவாதிகளுக்கு காவி உடை தரித்தால் அதிகம் பணம் பார்க்கலாம் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது, இப்படி இருப்பதை விட காவி உடையைக் களைந்து விட்டு நேர்மையான வகையில் தன் பணியைச் செய்யலாம். பணம் சம்பாதிப்பது தான் தன் நோக்கம் என்றால் அதற்கு நேர்மையான பல வழிகள் உள்ளன. இதனை இந்த ஏமாற்று வாதிகள் சிந்திப்பார்களா என்பது தான் கேள்வி.

இன்னொரு செய்தியும் இதில் சிந்திக்கத்தக்கது. தம்பிரானாக   இருந்த போது விலகியிருந்த சாதிப் பெயர் தம்பிரான் கோலம் விட்டு நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பிய வேளை வந்து ஒட்டிக் கொண்டு விட்டது. சொக்கலிங்கத் தம்பிரான்,  சொக்கலிங்கம் பிள்ளையாக ஊரார் முன் வலம் வர வேண்டிய சமூகச் சூழல். 

சாதி அன்றைய காலகட்டத்தில் ஆழமாக வேர் ஊன்றி இருந்த நிலையினை இப்பகுதி படம் பிடித்துக் காட்டுவதனையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment