Friday, August 8, 2025

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் - 5

 



மொழிக்காகவும் வரலாற்றுக்காகவும் தமது வாழ்நாளை செலவிட்டு உழைக்கும் தமிழ் அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் மதித்துப் போற்ற வேண்டியது நம் கடமை. இத்தகைய செயல்கள் ஆய்வாளர்களுக்கு நிச்சயமாக ஊக்குவிப்பாக அமையும்.
2014 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சென்று அங்கு மானிடவியல் ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்து அவரோடு இரண்டு நாட்கள் செலவிட்டு வந்தோம்.
முதல் நாள் பாளையங்கோட்டை கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஒரு கருத்தரங்கம். இரண்டாம் நாள் அவருடைய நீண்ட நெடிய ஒரு பேட்டி ஒன்றை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்தோம். இது காணொளியாகவும் பின்னர் ஒரு நூலாகவும் நமது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டிலும் பாளையங்கோட்டை சென்ற போது அவரை நேரில் சென்று நலம் விசாரித்து பேசி விட்டு வந்தேன். அந்த சமயத்தில் தொ.பா அவர்கள் மிகவும் நலிந்து இருந்தார்கள்.
நன்றாகப் பேச முடியவில்லை. உடல் தளர்ந்து இருந்தது. ஆயினும் ஏராளமான செய்திகளை எனக்கு அந்த உரையாடலில் வழங்கினார். தேரிக்காடு பற்றியும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் பற்றியும் நிறைய தகவல்கள் கூறினார். சிவகளையில் நிச்சயமாக அகழாய்வுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். அது ஒரு வாழ்விடப் பகுதி; ஆகவே அங்கு அகழாய்வு செய்வது நிறைய சான்றுகளை வழங்கும் என்று மிகுந்த ஆர்வத்தோடு அந்த பயணத்தின் போது தனது கருத்துக்களைக் கூறியது என்றும் மறக்க முடியாது.
அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சிவகளையில் அகழாய்வுகள் தொடங்கியது என்பது நாம் அறிந்தது தான்.
தொ.பா அவர்களது ஒவ்வொரு நூலும் தமிழ் சமூகத்தின் மீது நுணுக்கமான பார்வையைத் தருபவை.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மக்களை அறிந்து கொள்ளவும் சமூகத்தை தனது ஆய்வுக்களமாகவும் கொண்டு நமக்கு நல்ல பல நூல்களை வழங்கிய அறிஞரை நாம் சிறப்பிக்காமல் இருக்கலாமா? இதனை கருத்தில் கொண்டு தான் 2014 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை அவருக்குச் சிறப்பு செய்து பாராட்டினோம்.
நமது பயணங்களில் இதுவும் ஒரு முக்கிய நிகழ்வு.

No comments:

Post a Comment