Wednesday, August 6, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -3

 


வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஓர் அறைக்குள் அமர்ந்து கொண்டு நூல்களை வாசித்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது.
வெளியே செல்ல வேண்டும்.
வரலாற்றைத் தேட வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்களை நேரில் காண வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்களின் அருகில் அமர்ந்து அவற்றைப் பார்த்து ரசித்து உள்வாங்க வேண்டும்.
என்னதான் நூல்கள் விவரமாக செய்திகளை வழங்கினாலும் கூட, நேரடியாக வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களுக்குச் சென்று பார்த்து நேரடி அனுபவத்தைப் பெறுவது தான் உண்மையான, தெளிவான வரலாற்றுப் புரிதலை ஒவ்வொருவருக்கும் வழங்கும்.
தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட நாள் முதல் வரலாற்றுப் பயணங்களை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டேன்.
தமிழ்நாட்டின் வரலாறு தூரத்திலிருந்து நூல்களின் வழி நான் அறிந்து கொண்டதை விட, 2000 ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் பயணம் செய்த போது நான் அறிந்து கொண்டது தான் அதிகம்.
போலித்தனமாகக் கட்டமைக்கப்பட்ட, புனித் தன்மை ஏற்றப்பட்ட, உண்மைக்குப் புறம்பான கதைகளைத் தள்ளி வைத்து உண்மையான வரலாற்றை நான் அறிந்து கொள்ள இந்தப் பயணங்கள் தான் எனக்கு உதவின. தமிழ் பண்பாட்டின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் இவையே எனக்கு அடிப்படையாக அமைந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்களை அழைத்துக் கொண்டு பொதுமக்களை அழைத்துக் கொண்டு வரலாற்று இடங்களுக்குச் சென்று வரலாற்றை நேரில் கற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மரபு பயணங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகின்றோம்.
தமிழ்நாட்டின் கல்லும் மண்ணும் காடுகளும் சாலைகளும் தெருக்களும் கிராமங்களும் சிறு நகரங்களும் பெரு நகரங்களும் வரலாற்றுச் சின்னங்களை கொண்டிருக்கின்றன.
அவற்றை நேரில் காணாமல் நாம் எப்படி வரலாற்றை அறிந்து கொள்வது?
காட்சி: மகேந்திர வாடி குடைவரை கோயில் - தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து பொதுமக்களை அழைத்துச் சென்ற மரபு பயணம்.
-சுபா
6/8/2025

No comments:

Post a Comment