தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும்வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை பண்பாட்டை அறிந்து கொள்ளாமல் தமிழர் வரலாற்றை அறிந்து கொண்டதாக நாம் கூற முடியாது.
தமிழரின் வரலாறு.. தமிழ்நாட்டின் வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சார்ந்ததல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வகையில்தான் நமது பொதுவான சிந்தனைப் போக்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
பாண்டியர்கள் பற்றியும், பல்லவர்கள் பற்றியும், சோழர்கள் பற்றியும், நாயக்க மன்னர்கள் பற்றியும் பேசினால் தான் வரலாற்றைப் பேசத் தகுதியானவர்கள் என்பது போன்ற ஒரு மாயக் கட்டமைப்பு போலித்தனமான நமது பொது புத்தியில் பரவிவிட்டது.
மக்கள் இல்லாமல் மன்னர்கள் எங்கிருந்து வந்தார்கள்? யோசிக்க வேண்டும் அல்லவா!
மக்களைப் பற்றி பேசுவதையும் அவர்களை ஒட்டி அமைந்திருக்கின்ற பண்பாட்டை ஆவணப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கின்றோம்.
இந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது திருவண்ணாமலையிலிருந்து அருகாமையில் உள்ள செங்கம் எனும் ஒரு பகுதி. இங்கு வாழ்கின்ற பூர்வ குடிமக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் ஒரு திட்டத்தை 2012 ஆம் ஆண்டு வாக்கில் செய்த போது என்னோடு தமிழ்நாட்டில் முன்னர் அரசுத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பின்னர் அமெரிக்கா சென்று விட்ட மதிப்பிற்குரிய சீதாலட்சுமி அம்மா அவர்களும் வந்திருந்தார்கள்.
இனிமையான பயணம் அது. மறைந்த தோழர் பிரகாஷ் ஏற்பாட்டில் இந்த பயணம் அமைந்தது.
இந்தப் புகைப்படத்தில் அவர்கள் ஒரு திருமண சடங்கின் போது அணிகின்ற உடைகளை அணிந்து வந்து நடனமாடி தங்கள் பண்பாட்டு செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள்.
-சுபா
7/8/2025
No comments:
Post a Comment