வரலாற்றை சரியாக சான்றுப் பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நா கண்ணன் அவர்களும் நானும் தொடங்கிய இந்த அமைப்பு தொய்வில்லாத தொடர்ச்சியாக செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவினரின் செயல்பாடுகளுடன் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்கின்ற வரலாற்று ஆர்வலர்களின் ஈடுபாட்டுடன் கடந்த 24 ஆண்டுகள் மேற்கொண்டு வந்த இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கு இது வெள்ளி விழா ஆண்டின் தொடக்கம்.
கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாடு மட்டுமன்றி இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பாவின் இங்கிலாந்து ஜெர்மனி நார்வே நெதர்லாந்து சுவிசர்லாந்து பிரான்ஸ், டென்மார்க் இத்தாலி மற்றும் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கிழக்காசிய நாடுகளில் என பல நாடுகளில் தமிழர் வரலாறு மொழி பண்பாடு போன்ற தளங்களில் ஆவணப்படுத்தல் முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வந்தது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
காணொளிகள்..
ஒளிப்பதிவு ஆவணங்கள்..
புகைப்பட ஆவணங்கள்
ஆய்வாளர்களின் பேட்டிகள்..
களப்பணி தொகுப்புகள்..
என பல்வேறு வடிவங்களில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி நமது வெள்ளி விழா கொண்டாட்டம் பற்றிய செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தளங்களில் நீங்கள் காணலாம்.
வெள்ளிவிழா தொடக்கத்தை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 24 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெற உள்ளது.
அமைச்சர் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் கலந்து கொள்ளவிருக்கின்ற இந்த நிகழ்வில் நீங்களும் பங்கெடுத்து கொள்ள தயாராகுங்கள். மேல் விபரங்கள் இனி தொடர்ந்து பகிரப்படும்.
தமிழால் இணைவோம்!
அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
No comments:
Post a Comment