Friday, August 8, 2025

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் - 6

 



தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஃபீனிக்ஸ் பகுதியில் காந்தி நினைவு இல்லம் உள்ளது. இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர். உள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது காந்தி அவர்கள் ஆரம்பித்த அச்சகத்தின் கட்டிடம்.
இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஓர் இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.
இந்த அச்சு கூடத்தில் மகாத்மா காந்தியின் தமிழ் கையெழுத்து உள்ளது. அவருக்குத் தமிழில் கையெழுத்தை எழுத கற்றுக் கொடுத்தவர் தமிழ்நாட்டிலிருந்து அங்கு நீதிமன்றத்தில் பணிபுரியச் சென்றிருந்த தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையான ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த தில்லையாடி வள்ளியம்மை அடக்குமுறைக்கு எதிராக ஏற்படுத்திய போராட்டம் மகாத்மா காந்திக்கு சுதந்திரம் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் பெருமளவில் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
2015ல் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினருடன் ஒரு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களைச் சந்திக்க டர்பன் சென்றிருந்த போது உள்ளூர் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் - 5

 



மொழிக்காகவும் வரலாற்றுக்காகவும் தமது வாழ்நாளை செலவிட்டு உழைக்கும் தமிழ் அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் மதித்துப் போற்ற வேண்டியது நம் கடமை. இத்தகைய செயல்கள் ஆய்வாளர்களுக்கு நிச்சயமாக ஊக்குவிப்பாக அமையும்.
2014 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சென்று அங்கு மானிடவியல் ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்து அவரோடு இரண்டு நாட்கள் செலவிட்டு வந்தோம்.
முதல் நாள் பாளையங்கோட்டை கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான ஒரு கருத்தரங்கம். இரண்டாம் நாள் அவருடைய நீண்ட நெடிய ஒரு பேட்டி ஒன்றை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவு செய்தோம். இது காணொளியாகவும் பின்னர் ஒரு நூலாகவும் நமது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டிலும் பாளையங்கோட்டை சென்ற போது அவரை நேரில் சென்று நலம் விசாரித்து பேசி விட்டு வந்தேன். அந்த சமயத்தில் தொ.பா அவர்கள் மிகவும் நலிந்து இருந்தார்கள்.
நன்றாகப் பேச முடியவில்லை. உடல் தளர்ந்து இருந்தது. ஆயினும் ஏராளமான செய்திகளை எனக்கு அந்த உரையாடலில் வழங்கினார். தேரிக்காடு பற்றியும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் பற்றியும் நிறைய தகவல்கள் கூறினார். சிவகளையில் நிச்சயமாக அகழாய்வுகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். அது ஒரு வாழ்விடப் பகுதி; ஆகவே அங்கு அகழாய்வு செய்வது நிறைய சான்றுகளை வழங்கும் என்று மிகுந்த ஆர்வத்தோடு அந்த பயணத்தின் போது தனது கருத்துக்களைக் கூறியது என்றும் மறக்க முடியாது.
அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சிவகளையில் அகழாய்வுகள் தொடங்கியது என்பது நாம் அறிந்தது தான்.
தொ.பா அவர்களது ஒவ்வொரு நூலும் தமிழ் சமூகத்தின் மீது நுணுக்கமான பார்வையைத் தருபவை.
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மக்களை அறிந்து கொள்ளவும் சமூகத்தை தனது ஆய்வுக்களமாகவும் கொண்டு நமக்கு நல்ல பல நூல்களை வழங்கிய அறிஞரை நாம் சிறப்பிக்காமல் இருக்கலாமா? இதனை கருத்தில் கொண்டு தான் 2014 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை அவருக்குச் சிறப்பு செய்து பாராட்டினோம்.
நமது பயணங்களில் இதுவும் ஒரு முக்கிய நிகழ்வு.

Thursday, August 7, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -4

 


பூர்வகுடி மக்களின் வாழ்க்கை பல எளிய சடங்குகளைக் கொண்டது. குழந்தை பிறப்பு, பெண்கள் பூப்படைதல், திருமணம், இறப்புச் சடங்கு, இடைக்கிடையே அவர்கள் கும்பிடுகின்ற சாமிக்கான வழிபாடு தொடர்பான சடங்குகள் அனைத்துமே எளிமையாக, அதேசமயம் வளமான சடங்குகளாகவே உள்ளன.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும்வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை பண்பாட்டை அறிந்து கொள்ளாமல் தமிழர் வரலாற்றை அறிந்து கொண்டதாக நாம் கூற முடியாது.
தமிழரின் வரலாறு.. தமிழ்நாட்டின் வரலாறு என்பது மன்னர்களை மட்டும் சார்ந்ததல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக அவ்வகையில்தான் நமது பொதுவான சிந்தனைப் போக்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
பாண்டியர்கள் பற்றியும், பல்லவர்கள் பற்றியும், சோழர்கள் பற்றியும், நாயக்க மன்னர்கள் பற்றியும் பேசினால் தான் வரலாற்றைப் பேசத் தகுதியானவர்கள் என்பது போன்ற ஒரு மாயக் கட்டமைப்பு போலித்தனமான நமது பொது புத்தியில் பரவிவிட்டது.
மக்கள் இல்லாமல் மன்னர்கள் எங்கிருந்து வந்தார்கள்? யோசிக்க வேண்டும் அல்லவா!
மக்களைப் பற்றி பேசுவதையும் அவர்களை ஒட்டி அமைந்திருக்கின்ற பண்பாட்டை ஆவணப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கின்றோம்.
இந்தப் புகைப்படத்தில் நாம் காண்பது திருவண்ணாமலையிலிருந்து அருகாமையில் உள்ள செங்கம் எனும் ஒரு பகுதி. இங்கு வாழ்கின்ற பூர்வ குடிமக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் ஒரு திட்டத்தை 2012 ஆம் ஆண்டு வாக்கில் செய்த போது என்னோடு தமிழ்நாட்டில் முன்னர் அரசுத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பின்னர் அமெரிக்கா சென்று விட்ட மதிப்பிற்குரிய சீதாலட்சுமி அம்மா அவர்களும் வந்திருந்தார்கள்.
இனிமையான பயணம் அது. மறைந்த தோழர் பிரகாஷ் ஏற்பாட்டில் இந்த பயணம் அமைந்தது.
இந்தப் புகைப்படத்தில் அவர்கள் ஒரு திருமண சடங்கின் போது அணிகின்ற உடைகளை அணிந்து வந்து நடனமாடி தங்கள் பண்பாட்டு செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள்.
-சுபா
7/8/2025

Wednesday, August 6, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -3

 


வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஓர் அறைக்குள் அமர்ந்து கொண்டு நூல்களை வாசித்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது.
வெளியே செல்ல வேண்டும்.
வரலாற்றைத் தேட வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்களை நேரில் காண வேண்டும்.
வரலாற்றுச் சின்னங்களின் அருகில் அமர்ந்து அவற்றைப் பார்த்து ரசித்து உள்வாங்க வேண்டும்.
என்னதான் நூல்கள் விவரமாக செய்திகளை வழங்கினாலும் கூட, நேரடியாக வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களுக்குச் சென்று பார்த்து நேரடி அனுபவத்தைப் பெறுவது தான் உண்மையான, தெளிவான வரலாற்றுப் புரிதலை ஒவ்வொருவருக்கும் வழங்கும்.
தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட நாள் முதல் வரலாற்றுப் பயணங்களை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டேன்.
தமிழ்நாட்டின் வரலாறு தூரத்திலிருந்து நூல்களின் வழி நான் அறிந்து கொண்டதை விட, 2000 ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் பயணம் செய்த போது நான் அறிந்து கொண்டது தான் அதிகம்.
போலித்தனமாகக் கட்டமைக்கப்பட்ட, புனித் தன்மை ஏற்றப்பட்ட, உண்மைக்குப் புறம்பான கதைகளைத் தள்ளி வைத்து உண்மையான வரலாற்றை நான் அறிந்து கொள்ள இந்தப் பயணங்கள் தான் எனக்கு உதவின. தமிழ் பண்பாட்டின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் இவையே எனக்கு அடிப்படையாக அமைந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்களை அழைத்துக் கொண்டு பொதுமக்களை அழைத்துக் கொண்டு வரலாற்று இடங்களுக்குச் சென்று வரலாற்றை நேரில் கற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மரபு பயணங்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகின்றோம்.
தமிழ்நாட்டின் கல்லும் மண்ணும் காடுகளும் சாலைகளும் தெருக்களும் கிராமங்களும் சிறு நகரங்களும் பெரு நகரங்களும் வரலாற்றுச் சின்னங்களை கொண்டிருக்கின்றன.
அவற்றை நேரில் காணாமல் நாம் எப்படி வரலாற்றை அறிந்து கொள்வது?
காட்சி: மகேந்திர வாடி குடைவரை கோயில் - தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து பொதுமக்களை அழைத்துச் சென்ற மரபு பயணம்.
-சுபா
6/8/2025

Tuesday, August 5, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -2

 


2001 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையை தொடங்கினோம்.
ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கின்ற அலுவலக விடுமுறைகள் பெரும்பாலானவற்றை தமிழ்நாட்டிற்கு வந்து ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி திரிந்து தமிழர் பண்பாட்டு வரைவுகளை அறிந்து கொள்ளவும் அவற்றை ஆவணப்படுத்தவும் எனது செயல்பாடுகள் அமைந்தன.
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் நண்பர்கள் அமைந்தார்கள். நான் செல்கின்ற இடங்களில் நண்பர்களின் இல்லங்களில் தங்கிக் கொள்வேன். மக்களோடு மக்களாக, இயல்பான வாழ்வியலை அறிந்து கொள்ளவும் அவற்றை ஆவணப்படுத்தவும் அது எனக்கு உதவியது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டிற்குள் இந்த மாதம் பயணிக்கவிருக்கின்றோம்.
கடந்து வந்த பாதையின் சில காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
காட்சி: மானாமதுரை மண்பாண்டம் செய்கின்ற கிராமத்தில் குழந்தைகளுடன். இது மானாமதுரை மண்பாண்ட குடிசைத் தொழில் பற்றிய ஆவணபப்திவு செய்த போது பதிவாக்கப்பட்டது. இத்துடன் வெளியிடப்பட்ட காணளி நமது https://tamilheritage.org/ வலைப்ப்க்கத்தில் காணலாம்.
~~~~~
In the year 2001, we started Tamil Heritage Foundation.
Every year, during my annual holidays , I would travel to Tamil Nadu, visiting one village after another to explore and document the cultural landscapes of the Tamil people.
In many villages across Tamil Nadu, I made friends. Wherever I traveled, I would stay in the homes of these friends. Living among the people in a natural setting helped me to understand their way of life and document it authentically.
This month, we are about to embark on our journey toward the Silver Jubilee year of the Tamil Heritage Foundation.
I am sharing with you a few glimpses from the path we have travelled.
Photo With children in a village near Manamadurai 9A village in Tamil Nadu near Madurai) where traditional clay pots are made. This photo was taken while documenting the traditional clay pot-making huts of Manamadurai.
The video released along with this can be viewed on our website: https://tamilheritage.org/
-சுபா
5.8.2025

வெள்ளி விழா Logo

 


*தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா சிறப்பு தகவல்கள்..!*
வெள்ளி விழா கருத்தரங்கம்:
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டு அரங்கம், சென்னை தமிழ்நாடு.
*தேதி: 24.8.2025 (ஞாயிறு)*
நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 வரை
*தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா அதிகாரப்பூர்வ இலட்சினை - தமிழில்.*

Saturday, August 2, 2025

2.8.1913 - தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள்

 



தமிழ் உலகிற்குத் தமிழின் முதல் அச்சு நூலை தேடிக் கொடுத்தவர் என்பது மட்டுமல்ல உலகின் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்ற தகவலை வெளிச்சப்படுத்தியவர் தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகள். தமிழ் உலகம் இவரைச் சரியாக கொண்டாடுகின்றதா என்பது நம் முன்னே இருக்கின்ற ஒரு கேள்வி.
எனது ஒரு இலங்கை பயணத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த ஊரான நெடுந்தீவு பகுதிக்குச் சென்று வந்தேன். மனதிற்கு நெகிழ்வான அனுபவத்தை கொடுத்தது அந்தப் பயணம்.
யாழ் நூலகத்தின் அருகில் தனிநாயகம் அடிகள் முற்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே இணைத்திருக்கிறேன்.
கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் தனிநாயகம் அடிகள். தான் பிறந்த இலங்கை தீவு மட்டுமன்றி உலகின் பல தீவுகளுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழரின் பண்டைய புலம்பெயர்வுகளைப் பற்றிய தகவல்களையும் ஆரம்பகால தமிழ் நூல் அச்சு வடிவம் பெற்றமையை உலகுக்கு கூறும் செய்திகளையும் சேகரித்து பல உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். இவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் தமிழர் புலம் பெயர்வு பற்றிய ஆய்வுகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக அமைகின்றன.
-சுபா







Friday, August 1, 2025

வெள்ளிவிழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை காட்சிகள் -1



தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு எனும் வரலாறு மற்றும் தமிழ் மொழி சார்ந்த ஆய்வுகளுக்கான தன்னார்வல நிறுவனத்தை 2001 ஆம் ஆண்டு தொடங்கி 24 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றோம்.
வரலாற்றை சரியாக சான்றுப் பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நா கண்ணன் அவர்களும் நானும் தொடங்கிய இந்த அமைப்பு தொய்வில்லாத தொடர்ச்சியாக செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவினரின் செயல்பாடுகளுடன் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்கின்ற வரலாற்று ஆர்வலர்களின் ஈடுபாட்டுடன் கடந்த 24 ஆண்டுகள் மேற்கொண்டு வந்த இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கு இது வெள்ளி விழா ஆண்டின் தொடக்கம்.
கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாடு மட்டுமன்றி இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பாவின் இங்கிலாந்து ஜெர்மனி நார்வே நெதர்லாந்து சுவிசர்லாந்து பிரான்ஸ், டென்மார்க் இத்தாலி மற்றும் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கிழக்காசிய நாடுகளில் என பல நாடுகளில் தமிழர் வரலாறு மொழி பண்பாடு போன்ற தளங்களில் ஆவணப்படுத்தல் முயற்சிகளை தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வந்தது. இந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
காணொளிகள்..
ஒளிப்பதிவு ஆவணங்கள்..
புகைப்பட ஆவணங்கள்
ஆய்வாளர்களின் பேட்டிகள்..
களப்பணி தொகுப்புகள்..
என பல்வேறு வடிவங்களில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆவணங்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி நமது வெள்ளி விழா கொண்டாட்டம் பற்றிய செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தளங்களில் நீங்கள் காணலாம்.
வெள்ளிவிழா தொடக்கத்தை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 24 ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் ஒரு நாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெற உள்ளது.
அமைச்சர் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் கலந்து கொள்ளவிருக்கின்ற இந்த நிகழ்வில் நீங்களும் பங்கெடுத்து கொள்ள தயாராகுங்கள். மேல் விபரங்கள் இனி தொடர்ந்து பகிரப்படும்.
தமிழால் இணைவோம்!
அன்புடன்
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு