Sunday, July 2, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 123

ஊற்றுமலையில் உ.வே.சாவிற்கு வித்தியாசமான அனுபவம் கிட்டியது. அப்படி ஒரு ராஜபோக அனுபவம் அவருக்கு வாழ்க்கையில் ஒருமுறைதான் கிட்டியது என்றாலும் தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை அந்த நினைவு அவர் மனதில் நிறைந்திருந்தது.

ஊற்றுமலை என்ற ஊரின் ஜமீந்தார் ஹிருதாலய மருதப்ப தேவர் உ.வே.சா தனது ஜமீன் மாளிகைக்கு வந்து சில காலம் தங்கியிருந்துச் செல்ல வேண்டுமென்று கடிதம் அனுப்பியிருந்தார். ஆக, அங்கே சென்ற போது ஜமீந்தார் மருதப்ப தேவரின் முதல் தோற்றமே அவரை இதுவரை தான் பார்த்த அனைவரிடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.  ஏனெனில், வேட்டைக்குப் போகும் உடையலங்கார கோலத்தில் அவரும் அவருடன் சிலரும் ஆயுதங்கள் ஏந்திய வகையில் வந்து கொண்டிருந்தனர். உ.வே.சாவைப் பார்த்ததும் அவரை வரவேற்று, அரண்மனைக்குச் செல்லச் சொல்லிவிட்டு தனது வேட்டைப்பணியை முடித்து விட்டு வர அவர் கிளம்பி விட்டார்.

உ.வே.சாவிற்கு மிகப் பிரம்மாண்டமான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை எட்டு மணி வாக்கில் இரவு உணவுக்குப் பின்னர் அவர்கள் ஒன்று கூடினர். ஜமீந்தார் சில புலவர்களுடன் அமர்ந்து திருவானைக்கா புராணம் வாசித்துக் கொண்டிருந்தார். புலவர்கள் ஒருவருக்கு ஒருவர் என கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்க இந்தத் தமிழ்ச்சோலையில் அற்புதம் நிகழ்வதாக என்ணி உ.வே.சா மகிழ்ந்தார். ஜமீந்தார் மிகப் பணிவுடன் உ.வே.சாவிடம் சிலச் செய்யுட்களுக்குப் பொருள் சொல்லக் கேட்டுக் கொண்டார். அவரது பணிவு இவரை மலைக்க வைத்தது. மிக உயரிய நிலையில் இருக்கும் ஒருவர் இவ்வளவு பணிவுடனும் மரியாதையுடனும் பேசுகின்றாரே என வியந்தார்.

வேளா வேளைக்கு நல்ல விருந்துபசாரம். நல்ல சுற்றுச்சூழல். ஜமீந்தாருடனும்  தமிழ்ப்புலவர்களுடன் மனதுக்கிசைந்த இனிய தமிழ் உரையாடல் என நாட்கள் கழிவது உ.வே.சாவிற்குத் தான் சுவர்க்கபுரிக்கு வந்து விட்டோமோ என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.

ஜமீந்தார் நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்துபவர் என்பதை உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

"விடியற்காலை நான்கு மணிக்கே அவர் எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு பால் சாப்பிட்டு விட்டு 6 மணிக்குப் புறத்தே உலாவுவதற்குப் பரிவாரங்களுடன் புறப்படுவார். யானைக்கூடம், குதிரைப்பந்தி, காளைகள் கட்டுமிடம் எல்லாவற்றையும் பார்வையிட்டுக் கொண்டே செல்வார். ஊரைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒவ்வொரு சாலை வழியாகச் சென்று உலாவி வருவார். அந்தச் சாலைகளெல்லாம் அவராலேயே அமைக்கப்பட்டவை; இருபுறமும் மரங்களைப் பயிராக்கிச் சாலைகளை ஒருங்காக வைத்திருந்தார். தோட்டங்கள் நல்ல முறையில் வளர்க்கப்பெற்று வந்தன. உலாவிவிட்டு வந்து எட்டு மணி முதல் பத்துமணி வரையில் தமிழ்ப் புலவர்களுடன் இருந்து தமிழ் நூல்களைப் படிப்பார். புதிய நூல்களைப் படிப்பதோடு பழைய நூல்களையும் பன்முறை படித்து இன்புறுவார். அவருடன் இருந்த வித்துவான்கள் நல்ல வித்துவப் பரம்பரையினர்; சில பிரபந்தங்களை இயற்றியிருக்கிறார்கள்; பல வருஷ காலமாக அவருடைய ஆஸ்தான வித்துவான்களாகவே இருந்தார்கள். பத்து மணிக்குமேல் கச்சேரிக் கட்டுக்குச் சென்று ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பார். பிறகு ஸ்நானம், ஆகாரம் முதலியவற்றை முடித்துக் கொண்டு மீட்டும் பிற்பகல் இரண்டு மணிக்குத் தமிழ் நூல் படிக்க உட்காருவார். நான்கு மணி வரையில் படித்துவிட்டு ஆறு மணி வரையில் ஸமஸ்தான சம்பந்தமான வேலைகளைப் பார்வையிடுவார். ஆறு மணிக்குமேல் தம்மைப் பார்க்க வந்தவர்களுக்குப் பேட்டி அளிப்பார். தம் குடிகளுடைய குறைகளை விசாரிப்பார். அவர்கள் அவற்றை ஓலையில் எழுதிய நீட்டுவார்கள். அவற்றையெல்லாம் பிறகு பார்த்து மறுநாள் தம் கருத்தைச் சொல்லுவார். வேற்றூரிலிருந்து வந்தவர்களுக்குச் சிறிதும் குறைவின்றி உபசாரம் நடைபெறும்." 

​வாழ்நாள் முழுதும் அங்கிருந்தாலும் சலிப்பு வராது எனத் தோன்றினாலும் உ.வே.சா தனது வேலைகளை விட்டு விட்டு அங்கேயே இருந்து விட முடியாதல்லவா? ஆக அங்கிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தார் உ.வே.சா. ​ஹிருதாலய மருதப்ப தேவர் உ.வே.சாவை வழியனுப்ப சிறிதும் மனமில்லாமல் முயன்றும் தனது தமிழ்ப்பணிகளைத் தொடர வேண்டிய அவசியத்தை ஜமீந்தாரிடம் விளக்கி விட்டு அந்த சுவர்க்கபுரியிலிருந்து புறப்பட்டார் உ,வே.சா. 

அங்கிருந்து புறப்பட்டு  சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர், புளியங்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்று அங்கு தமிழ்ப்புலவர்கள் சிலரைச் சந்தித்து சிலப்பதிகார உரையைத் தேடும் பணியைத் தொடர்ந்தார்.

இந்தப் பயணங்கள் பல புதிய அனுபவங்களைக் கொடுத்தன.

அங்கிருந்து தென்காசிக்கு வந்தார் உ.வே.சா. அங்கு சுப்பையா பிள்ளை என்பவரிடம் தமிழ்ச்சுவடிகள் உள்ள விசயம் அவருக்குக் கிடைத்தது. அங்கு உடனே சென்றார்.

ஆனால் அங்கோ ஏமாற்றமே மிஞ்சியது. சுவடி நூல்களை அவ்வீட்டார் முறையாகப் பாதுகாக்காமல் போனதால் ஒற்றை ஒற்றை ஏடுகளாகவே கிடைத்தன. சில ஒற்றை ஏடுகளை மட்டும் பெற்றுக் கொண்டார் உ.வே.சா.  அதில் சிற்றடகம் என்ற நூலின் செய்யுட்கள் இருந்தன. ஆனால் சிலப்பதிகார உரை கிட்டவில்லை.

சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையின் பொருளை அறிந்து கொள்ள வேறு உரை நூல்களைத் தேடி உ.வே.சா அலைந்த ஊர்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் மேல் இருக்கும். அன்றையகால சூழலில் தமிழ்ச்சுவடி நூல்களை அச்சுப்பதிப்பாக்க வேண்டும் என்று அவருக்கிருந்த அளப்பறிய ஆர்வம் கொடுத்த உந்துதலினால் தான்  இவ்வளவு பயணங்களையும் உ.வே.சா மேற்கொண்டார் எனத் தயங்காது சொல்லலாம். 




No comments:

Post a Comment