Saturday, July 15, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 125

மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும் எனத் தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்போம். இப்படித் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஊக்கக்குறைவு திடீரென்று ஏற்பட்டு நாம் செய்யும் காரியங்களைச் செய்ய முடியாது நம்மை இயங்க விடாது செய்துவிடும். ஏதாவது காரணத்தைக் கற்பித்துக் கொண்டும். வலிய வேறு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டும் நமது நேரத்தைச் செலவு செய்து கொண்டிருப்போம். செய்து முடிக்க வேண்டிய பணி பாரமாக மனதில் அழுந்தும். உதாரணமாக, சிலர் பணி புரிந்து கொண்டே கல்லூரிகளில் பகுதி நேரமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள். நல்ல ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடனும் தொடங்கினாலும் பின்னால் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நம் கனவு கனவாகவே ஆகிப்போகும் நிலையை நாமே உருவாக்கியிருப்போம். இத்தகைய நிகழ்வுகள் இந்த வகை அனுபவம் உள்ளோருக்கு மனதில் தொடர்ந்து இருந்து ஒரு வகை குற்ற உணர்ச்சியை உருவாக்கி நம்மேல் நாமே வருத்தப்படும் அளவிற்கு நமது சிந்தனையை எடுத்துச் சென்று விடும். இது மனதிற்கு ஆரோக்கியமானதல்ல. 

இத்தகைய மனச்சோர்வு ஏற்படுவதிலிருந்து தடுப்பதற்கு ஏதும் மருந்துகள் தேவையில்லை. கடைகளில் இன்றைய சூழலில் நாம் பார்க்கும் போது உடலைப் பல வகையில் இயக்கும் வகையில் மருந்துகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.  உடல் உற்சாகம் பெற எனப் பெயரிட்டு மருந்துகளை விற்கின்றார்கள். ஆனால் இவ்வகையான மருந்துகள் ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அந்த நேரத்தில் தேர்வில் கவனம் வைக்கவும், உடல் சோர்வைப் போக்கவும் என சிலர் மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். இந்த ரசாயனங்கள் உடலில் ஏதாவது ஒரு வகையான விரும்பத்தகாத பின் விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக உடலிலும் மனதிலும் உற்சாகம் நிறைந்திருக்க வேண்டுமென்றால் அதனை நமது சிந்தனைகளை நாம் நிலைப்படுத்துவதன் வழி தான் சாதிக்க முடியும். 

நமது மனம் என்றும் உற்சாகமாக இருக்க வேண்டும் என நினைப்போர் முதலில் தமது சூழலில் இருப்போர் உற்சாகமாக இருக்கின்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் வருந்திக் கொண்டும், சோக கீதம் பாடிக் கொண்டும், சோம்பேறியாக இருப்பவர்கள் சூழலில் நாம் இருந்தால் அவர்களது நடவடிக்கைகள் நம்மைப் பாதித்து,  நமக்கு உள்ள உற்சாகத்தையும் இழந்து விடுவோம். ஆக, நேரான சிந்தனை கொண்ட, ஆக்ககரமான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட, உழைக்கத் தயங்காத, சுறுசுறுப்பான நபர்களின் சூழலில் இருப்பதும் நல்ல காரியங்களை, உலகில் சாதித்தோரை நமது உதாரணங்களாக எடுத்துக் கொண்டு செயல்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் ஊக்கம் இழக்கும் வேளையில் நம் சூழலில் இருக்கும் ஒருவரின் செயல் நமக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கலாம். நாம் எப்படி பிறரிடமிருந்து உற்சாகத்தைப் பெறுகின்றோமோ அதே மாதிரி நாமும் நமது செயல்பாடுகளினால் பிறருக்கு ஊக்கமளிக்கும் பண்பு கொண்டோராக இருப்பது நலம். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு வாழ்வது தானே மனிதக் குல மாண்பு! 

உ.வே.சா சிலப்பதிகாரப்பதிப்புப் பணிக்காகச் சென்னை வந்து அங்கே தங்கியிருந்து பதிப்பாக்கப் பணிகளைச் செய்து வந்தார். அந்த வேளையில் இராமசாமி முதலியார் காலமானார் என்ற செய்தி கிட்டியது. சிந்தாமணியை அறிமுகப்படுத்தி இப்படிப்பட்ட நூல்களைப் பாருங்கள், என வழிகாட்டியவர் அவர். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அச்சுப்பதிப்பாக வரவேண்டும். தன் கண்கள் குளிர அவற்றைக் காண வேண்டும் என்ற பெரும் ஆவலோடு இருந்தார். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த வருந்தத்தக்க நிகழ்வு நடந்து விட்டது. உ.வே.சா கலங்கிப் போனார். இராமசாமி முதலியாரை நினைத்து வாடினார். அவரை நினைத்து சில செய்யுட்பாக்களை எழுதினார். மனதை ஆற்றிக் கொண்டு தன் அச்சுப்பதிப்புப் பணியைத் தொடர்ந்தார். 

எழுத்துப்பணியில் சமாளிக்க முடிந்த அளவு இதற்கான பொருட்செலவை ஈடுகட்டுவது உ.வே.சா வுக்கு இயலாததாக இருந்தது. ஆக, தனது நண்பர்களுக்கும், திருவாவடுதுறை, குன்றக்குடி, திருப்பனந்தாள் சைவ மடங்களின் ஆதீனத்தலைவர்களுக்கும் கொழும்பு குமாரசாமி முதலியாருக்கும், கும்பகோணம் சாது சேஷையருக்கும் மேலும் பல பணக்காரர்களுக்கும், நூலுக்குப் பொருளுதவி கேட்டு கடிதங்கள் அனுப்பினார். தேவையான தொகை வந்து சேர்ந்தது. அச்சுப்பணி தொடர்ந்தது. 

இறுதிக்கட்ட வேலை முடிந்திருந்தது. அப்போது உ.வே.சா. நார்ட்டன் துரை என்னும் ஆங்கிலேயரின் குமாஸ்தா விசுவநாத சாஸ்திரி என்பவர் ஒருவருடைய இல்லத்தில் தங்கியிருந்து இப்பணிகளைச் செய்து கொண்டிருந்தார். எஞ்சி இருந்தது சிலப்பதிகார அரும்பதவுரைக்கான முகவுரை மட்டுமே. இதனை எழுதிவிட்டால் காலையில் கொடுத்து அதனையும் பதிப்பித்து விட்டால் வேலை முடிந்து விடும். காலையில் இதனைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாய நிலை. ஆனால் எழுத முடியாது அமர்ந்து விட்டார் உ.வே.சா. காலை நான்கு மணிக்கு எழுந்து எழுதி முடித்து கொடுத்து விடுவோமே எனப் படுத்தார். திடீரென்று விழிப்பு வந்தது. அப்போதாவது எழுதலாம் என நினைத்தார். மனம் நினைத்தாலும் எழுத உற்சாகம் பிறக்கவில்லை. இதனை முடித்தால் தானே நூலை முழுதாக்கி கண்ணால் பார்க்கலாம் என்ற வேதனை மட்டும் மனதை வாட்டியது. மனதைச் சமாதான படுத்திக் கொண்டு தூங்க முயற்சித்தார். தூக்கம் வரவில்லை. இது என்ன இரண்டும் கெட்டான் நிலை என தன்னையே குறை சொல்லிக் கொண்டவர் சுவரில் இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்தார். அந்தப் புகைப்படத்தில் இருந்தவரின் தோற்றமும் கம்பீரமும் உ.வே.சாவிற்கு திடீரென்ற உற்சாகத்தைக் கொடுத்தது. எழுந்து உட்கார்ந்தார். காகிதத்தை எடுத்து உடனே முகவுரையை எழுதத் தொடங்கினார். எழுதி முடிக்கவும் காலை விடியவும் சரியாக இருந்தது. காலையில் விசுவநாத சாஸ்திரியிடம் அது யாருடைய புகைப்படம் என வினவினார். அதுதான் நார்ட்டன் துரையின் புகைப்படம் என்று சேஷாத்திரி குறிப்பிட உ.வே.சாவின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. 

1892ம் வாக்கு.. ஜுன் மாதத்தில் உ.வே.சாவின் கடின உழைப்பின் பலனாகச் சிலப்பதிகார அச்சுப்பணி முழுமை பெற்றது. நூல் வெளிவந்தது. 

இன்று நமக்குக் கிடைக்கும் சிந்தாமணியின் பின் இருக்கும் உ.வே.சாவின் கடின உழைப்பை நம்மில் எத்தனைப் பேர் அறிந்திருக்கின்றோம்? வேறு யாரும் அறிந்திருக்கவில்லையென்றாலும் கூட தமிழாசிரியர்களும் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களும் அறிந்திருக்க வேண்டியது கடமையல்லவா?

No comments:

Post a Comment