Thursday, December 28, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 148

​சங்க இல​க்கியங்களின் அச்சுப்பதிப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக ஐங்குறுநூறு 1903ம் ஆண்டும், பதிற்றுப் பத்து 1904ம் ஆண்டும், பரிபாடல் 1918ம் ஆண்டிலும் உ.வே.சாவால் வெளியிடப்பட்டன. குறுந்தொகையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1937ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டார். இச்சங்க இலக்கிய நூல்கள் தமிழ் அச்சுப்பதிப்பு வெளியீட்டில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தன. தமிழின் செம்மை திறத்தையும், தமிழர் வரலாற்று வளத்தையும் மேன்மையையும் வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்களாக இவை திகழ்கின்றன என்பதோடு இன்றும் பலரால் பல கோணங்களில் ஆராயப்படும் நூல்களாக இவை உள்ளன.

சிதம்பரத்தில் சில ஆண்டுகள் உ.வே.சா அவர்கள் பணியாற்றியிருக்கின்றார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். அவர் சிதம்பரத்திற்குச் செல்வதற்கு பின்னணியில் இருந்தவர் அன்று மிகப் பிரபலமாக தமிழறிஞர்களால் அறியப்பட்ட ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தான்.

1924ம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலைச் செட்டியார் கல்விக்கூடங்களைக் கட்ட உத்தேசித்திருந்தார். முதலில் ஒரு தமிழ்க் கல்லூரியையும் வடமொழிக் கல்லூரியையும் தொடங்கினார். அத்தோடு ஒரு கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டது.  மீனாட்சி தமிழ்க்கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக்கல்லூரி ஆகிய மூன்றும் அப்போது தொடங்கப்பட்டவையே. இதில் தமிழ்க்கல்லூரிக்கு முதல்வராக உ.வே.சா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பது ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்களது விருப்பமாக இருந்தது. இதன் நிமித்தமாக அதே ஆண்டு ஜூலை மாதம் உ.வே.சா சிதம்பரத்திற்கு மாற்றலானார். இந்தப் பணியை ஏற்றுக் கொண்டபோது புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார் மீனாட்சி கலைக்கல்லூரியின் முதல்வராக பணியேற்றிருந்தார். இவரது சோழர்கள் பற்றிய ஆராய்ச்சியும் அவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் பல ஆராய்ச்சி மாணவர்களாலும் வரலாற்று ஆர்வலர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நூல்களாக இருப்பவை என்பதை நாம் அறிவோம்.

சிதம்பரத்தில் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் மதுரையில் 1925ம் ஆண்டு நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 24வது ஆண்டு விழாவில் உ.வே.சா பொற்கிழி கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டார். அவ்விழாவில் காஞ்சிகாமகோடி பீடத்தின் அதிபர் சங்கராச்சார்ய சுவாமிகள் உ.வே.சா அவர்களுக்கு இரட்டைச் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யக் கூறியிருந்தார். அத்தோடு இவ்விழாவில் "தாஷிணாத்ய கலாநிதி" என்ற பட்டத்தையும் சங்கரமடத்தின் சார்பில் வழங்கிச் சிறப்பித்தார்.

சிதம்பரத்தில் உ.வே.சா இருந்த காலகட்டத்தில், அவர் ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி சுவடி நூற்களை ஆராய்ந்து வந்தார். அதனைச் செம்மையான பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் உ.வே.சாவிற்கு இருந்தது.

தக்கயாகப்ரணி ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் இயற்றப்பட்ட நூல். கவிச்சக்கரவர்த்தி என்று சோழ மன்னன் வீரராசேந்திரனால் சிறப்பிக்கப்பட்டவர் என்பதோடு மூன்று சோழமன்னர்களின் அரசவையில் அவைப்புலவராகப் பதவி வகித்தவர் என்ற சிறப்பும் பெற்றவர் இவர். சோழ மன்னர்களின் போர் சிறப்பையும் வரலாற்றுச் செய்திகளையும் செய்யுள் நடையில் குறிப்பிடும் ஒரு நூல் தக்கயாகப்பரணி. ஒட்டக்கூத்தர் இயற்றிய 'விக்கிரமசோழன் உலா' மற்றும் விக்கிரம சோழனின் கலிங்கத்துப் போரை விவரித்துச் சொல்லும் 'கலிங்கத்துப்பரணி', 'நாலாயிரக்கோவை' ஆகிய நூல்களும் மிகச் சிறப்பாகப்பேசப்படும் நூல்கள். ஒட்டக்கூத்தர் வீரராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவையை அலங்கரித்த புலவர். 'அரும்பைத்தொள்ளாயிரம்' என்ற நூலையும் இவரே இயற்றியிருப்பார் என அறியப்படுகின்றது. 'விக்கிரமசோழனுலா', 'குலோத்துங்கசோழனுலா', 'இராசராசசோழனுலா' என்ற மூன்று உலா நூற்களிணைந்து 'மூவருலா' என்ற நூலினை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரிசியாற்றின் கரையிலுள்ள 'கூத்தனூர்' என்னும் சிற்றூர் ஒட்டக்கூத்தருக்குச் சோழமன்னர் அன்பளிப்பாக அளித்தார் என்ற தகவலையும், ஒட்டக்கூத்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது குடும்பப்பின்னனியையும், கவிஞராக வளர்ந்து புலவராக தன்னை உயர்த்திக் கொண்டு சோழ மன்னர்கள் அவையில் இருந்த செய்திகளையும், அவரோடு தொடர்பு படுத்திச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதைகள் பற்றிய தகவல்களையும் வரலாற்று நூல்  'சோழர்கள் 2ம்' பாகத்தில் 26வது அத்தியாயத்தில் விரிவாகத் தருகின்றார் வரலாற்றாசிரியர் திரு.நீலகண்டசாஸ்திரியார். தாராசுரத்தில் உள்ள தாராசுரம் கோயில் அதாவது, ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் சமாதி அமைந்துள்ளது. பட்டீச்சரம் சாலைக்கு மேற்கே வீரபத்திரர் கோயில் என்ற பெயரில் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் இங்கு எழுப்பப்பட்டுள்ளது.

தக்கயாகப்பரணி நூலை எழுதிய ஒட்டக்கூத்தர் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட கவின்மிகு சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற தாராசுரம் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக இக்கோயிலுக்கு நான் சென்றிருந்த போது, ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியை அறங்கேற்றிய மண்டபப் பகுதியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டியதும் என் வரலாற்றுத் தேடுதல் முயற்சியில் மறக்க இயலாத ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்.

சிதம்பரத்தில் நீண்டகாலம் உ.வே.சா பணியாற்றவில்லை. 1917ம் ஆண்டில் உ.வே.சா அவர்களின் மனைவி காலமானார். அதன் காரணமாக சிதம்பரத்திற்கு மீனாட்சி தமிழ்க்கல்லூரி முதல்வராக பணியேற்றுக் கொண்டு 1924ல்  வந்த போது  தனக்கு ஒரு சமையல்காரரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார். சரியான கவனிப்பாரற்று அவரது உடல் நிலை தளர்ச்சியடைந்து வந்தது தொடர்ச்சியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் தக்க அறிஞர் ஒருவரை தமது பணிக்கு ஏற்பாடு செய்துவிட்டு 11.3.1927ல் அவர் சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் தக்கயாகப்பரணி நூலுக்கான அச்சுப்பதிப்பாக்கப் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இடைக்கிடையே வேறு சில சுவடி நூல்களை ஆராயும் பணியையும் உ.வே.சா மேற்கொண்டிருந்தார். அதில் ஒன்று 'தமிழ்விடு தூது'. இந்த நூல் 1930ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளிவந்தது. அதே 1930ம் ஆண்டு, தக்கயாகப்பரணி நூல் அச்சுப்பதிப்பாக வெளிவந்தது.

உ.வே.சாவின் தக்கயாகப்பரணி மிகச் சிறந்த படைப்பாக இன்றும் அறியப்படுவது. ஒட்டக்கூத்தர் எழுதிய செய்யுளுக்கு விரிவான உரை எழுதி இதில் சேர்த்துள்ளார். இந்த நூல் ஆராய்ச்சிக்காக சில வடமொழிப்புலவர்களுடனும் வரலாற்றாசிரியர்களுடனும் கலந்துரையாடி விளக்கம் பெற்று தனது உரையினை உ.வே.சா இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள்.


தொடரும்

சுபா

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 147

தமிழக சூழலில் உ.வே.சா வாழ்ந்த காலத்தில்  சாதி நிலைப்பாடு தொடர்பான அவரது சிந்தனையைப் பற்றி, அதாவது  நாடார் சமூகத்தவர் கோயில் நுழைவு தொடர்பான வழக்கில் பாஸ்கர சேதுபதிக்கு ஆதரவாக நின்று, நாடார் சமூகத்தவர் கமுதியில் கோயில் நுழைவில் ஈடுபட்டது தமிழர் மரபு ரீதியாக தவறு என மன்னருக்குச் சார்ந்து பேசியமையைச் சுட்டிக் காட்டியிருந்தேன். உயர்ந்த கல்வி கற்றிருந்தாலும் கூட., வாழ்க்கையையே தமிழ்ப்பணிக்கு என அர்ப்பணித்திருந்தாலும் கூட, இறைவனுக்கு சாதி பேதமில்லை என்ற எளிய உண்மையை உணராத அவரது பேதமையை நாம் கண்டிக்காது ஒதுக்கிச் சென்று விட முடியாது.

தமிழகச் சூழலில் கல்விக்கூடங்களில் எல்லா குழந்தைகளும் படிக்கும் சூழல் ஒரு வழியாக இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது.  இருப்பினும் கூட, சாதி அமைப்பின் பெயருடன் கூடிய  உயர் கல்வி நிலையங்களை உருவாக்கும் முயற்சி்கள் இருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இதற்குச் சான்றாக பல கல்விச்சாலைகள் சாதி அடையாளப் பெயர்களைத் தாங்கியே இன்று செயல்படுகின்றன.    கல்வி நிலையங்களுக்குள் சாதி கூடாது எனும் கருததை முன்னெடுத்தால் இட ஒதுக்கீடு என்பதே சாதியின் அடிப்படையில் தானே அமைகின்றது என, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை அறியாதோர் விவாதத்துக்கு வருவதும் வழக்கமாகி விட்டது. எதனால் தமிழகச் சூழலில் சமூகங்களிடையே இட ஒதுக்கீடு தேவை என்ற புரிதல் இன்று வரை தெளிவாக பொதுமக்களிடத்தில் இல்லாமையே இதற்குக் காரணம் என்பதை வலியுறுத்தவேண்டியுள்ளது.

இதே சாதி அமைப்பு தொடர்பில் உ.வே.சா வாழ்க்கையில் நிகழ்ந்த மேலும் ஒரு நிகழ்வை அவரது மாணாக்கராகிய கி.வா.ஜ தனது ’என் ஆசிரியப்பிரான்’ எனும் நூலின் 38வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

அதில் உள்ளபடி,  ஒரு முறை திருவாவடுதுறைக்குச் சென்று விட்டு தனது ஊர் உத்தமதானபுரத்திற்கு உ.வே.சா சென்றிருக்கின்றார். அந்தச் சமயத்தில் ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்று அந்த ஊர் அக்கிரகாரத்தில் நடைபெற்று வந்தது.  அந்தப் பள்ளிக்கூடத்தில் ”ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சிறுவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்” என்ற குரல் எழும்பியிருக்கின்றது. யார் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர் என்ற விபரத்தை கி.வா.ஜ அவர்கள் தன் நூலில் குறிப்பிடவில்லை.  ஆயினும், அத்தகைய குரல் எழுந்தது, என்ற செய்தியைப் பதிகின்றார். அனேகமாக இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பகால நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.

’அக்கிரகாரத்தில் வசிக்கும்  பிள்ளைகள், அதாவது பிராமணர் சமூகத்துக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள்  வந்து படிப்பது சரியல்ல’  என்று அங்கிருந்தவர்கள் என்ணினார்கள் என்றும், எனவே ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படிப்பதற்கு அக்கிரகாரத்திற்குத் தூரத்தில் வேறு  ஒரு இடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் கி.வா.ஜ. தன் நூலில் குறிப்பிடுகின்றார்.  அப்போது உத்தமதானபுரம் சென்றிருந்த உ.வே.சா விடம் இந்தச் செய்தியை கிராம முன்சீப் அண்ணாசாமி ஐயர் தெரிவித்திருக்கின்றார்.

அக்கிரகாரத்திற்கு வெளியே ஒரு புன்செய் நிலம் ஒன்று உ.வே.சாவின்   பெயரில் இருந்ததாகவும், அது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் அந்த இடத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டினால், ஒடுக்கப்பட்ட  சமூகத்துக் குழந்தைகள் வந்து படிக்க அது வசதியாக அமையும் என்றும் கூறி, அந்த தனது நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட உ.வே.சா அவர்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் இனாமாகக் கொடுத்ததாக கி.வா.ஜ அவர்கள் குறிப்பிடுகின்றார். உ.வே.சா அவர்களின் சிற்றப்பா சின்னசாமி பெயரில் 'சின்னசாமி நிலையம்'  என்ற  பெயரிடப்பட்டு அந்த நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது.   உத்தமதானபுரம் குளக்கரையில் அந்த சின்னசாமி நிலையம் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வந்துள்ளது என்பதையும் இச்செய்திகளின் வழி அறியக்கூடியதாக இருக்கின்றது.

உ.வே.சாவின் என் சரித்திரம் நூலை நாம் வாசிக்கும் போதும், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தை வாசிக்கும் போதும்,  தமிழ்ச்சாதிகளுக்கிடையே கல்விச்சமன்மை இல்லாத நிலை இருந்ததை உணர முடிகின்றது. தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்கள், சைவ பிள்ளைமார்கள், ரெட்டியார்கள்,  செட்டியார்கள், முதலியார்கள்  உள்ளிட்ட பிற இடைநிலைச்சாடியினரின் பெயர்களும்   சில ஜமீந்தார்களின் பெயர்களுமே இந்த நூல்களில் கானப்படுகின்றன. ஓரிரு ஐரோப்பிய தமிழறிஞர்களும் இந்த நூல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றார்கள். 

உ.வே.சா போன்ற அறிஞர்கள் பேசிப்பழகி, தமிழ்கற்று உலாவந்த சூழல் என்பது  ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த, தனித்த வகையிலான ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். அல்லது. 17, 18, 19ம் நூற்றாண்டு காலத்தில், மேற்குறிப்பிட்ட ஒரு சில சாதிக்குழுவினரைத் தவிர, ஏனையோருக்குக் கல்விக்கு  இடமளிக்காத சூழல் என்ற ஒன்று மிகத்தீவிரமாக இருந்திருக்க வேண்டும்.  எப்படியாகினும், தமிழகத்தின் மிகப் பெரும்பாலான, பெருவாரியான சதவிகித தமிழ் மக்கள் அக்காலத்தில் கல்விக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில் இருந்தார்கள் என்பது இந்த நூல்களின் வழி மட்டுமன்றி நமக்குக் கிடைக்கின்ற, தமிழகம் வந்து வாழ்ந்த ஐரோப்பியர்களின் ஆவணக் குறிப்புக்களின் வழியாகவும்  நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கல்வியும் வாசிப்பும், இலக்கியச் செழுமையும், ஏட்டுச் சுவடிகளும் முற்றும் முழுதுமாகக் குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர்  கைகளில் மட்டும் தான் இருந்தனவா என்றால், இதற்கு மாறான கருத்தினைத் தரும்  தகவல்களையும்  நமக்குக் கிடைக்கின்ற  சில ஆவணங்களின் வழி  அறியமுடிகின்றது . உதாரணமாக, பறையர் சமூகத்தவராக அறியப்படுகின்ற அயோத்திதாசப் பண்டிதரின் தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளை, எல்லிஸ் அவர்கள் காணும் வாய்ப்பு அமைந்ததும், அதில் குறிப்பாக திருக்குறளை வாசிக்க நேர்ந்து அதன் அறிவுச் செறிவில் ஆழ்ந்து வியந்து எல்லிஸ் அவர்கள் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்தார் என்பதையும் நாம் அறிகின்றோம்.  இப்படி  சமூகத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினரிடையேயும் தமிழ் நூல்கள கற்கும் வழக்கம் இருந்தமையையும் கேள்விப்படுகின்றோம். ஆனால் அது பொது வெளியில் அறியப்படாது  பேசப்படாமலேயே போய் விட்டமையையும்  காணமுடிகின்றது.

18,19, 20ம் நூற்றாண்டுகளில், பொதுவாகக் கல்வி கற்றோர் என அறியப்படுவோர் ஒடுக்கப்பட்ட சாதி அடையாளம் தரப்பட்ட மக்களிடமிருந்து மதத்தின் அடிப்படையில் ஒதுங்கி  இருந்தார்கள் என்பதும், இந்த ஒதுங்கி இருந்தலை சைவ மற்றும் வைணவ  சமய மடங்களும்  சாத்திரம் சார்ந்த ஒழுக்கமாக எண்ணி கடைபிடித்தன என்பதையும், அது பெருமளவு இன்றும் தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்கப்படுவதையும் காண்கின்றோம். பல நூற்றாண்டு காலமாக ஒரு சில சமூகங்களுக்குக் கல்விக் கேள்வி மறுக்கப்பட்ட இந்த நிகழ்வை ஒரு சமூக அநீதியாகக்  குறிப்பிட வேண்டியது அவசியம்.   இன்று நாம் அறியக்கூடிய 18ம் 19ம் நூற்றாண்டு தமிழறிஞர்களில் மிகப்பெரும்பாலானோர் இந்த பார்வையை சிறிதும் அற்றவர்களாகத்தான்  இருந்திருக்கின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் அவலம். அநீதி.

கல்வி வாய்ப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சில சாதியினருக்கே என  குறுக்கிய சமூக அநீதியால் தமிழகம் இழந்தது அதிகம் என்பது என் கணிப்பு. கல்வியும் அறிவும் தனிப்பட்ட  சில குலங்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய வாய்ப்பல்ல. மாறாக அது மனித குலம் அனைத்திற்கும் உள்ள தார்மீக உரிமை. இதனை மறுத்து கல்வி வாய்ப்பை சிறிய வட்டத்திற்குள் மட்டுமே வைத்துக் கொண்டமையே தமிழகம் இன்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணாத பல கிராமங்களைக் கொண்டிருக்கும் சூழ்நிலை அமைந்திருப்பதற்குக்  காரணமாகின்றது எனக் கருதுகிறேன்.

இன்று  தமிழகத்தில் எல்லோருக்குமான கல்வி வாய்ப்பு என்பது பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை நோக்கிய முன்னெடுப்புக்களைச் சாத்தியப்படுத்த நிகழ்ந்த சமூகச்  சீர்திருத்த போராட்டங்கள் ஏராளம் ஏராளம். படிப்படியாக தமிழகத்தில் தமிழ்ச்சான்றோர் பலர் முன்னெடுத்த முயற்சிகளும், ஐரோப்பிய பாதிரிமார்களும், ஆங்கிலேய காலணித்துவ அரசும் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளே சமூகத்தில் அனைவரும் கல்வி கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி கல்விக்கான கதவை அனைவருக்கும் திறந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. சாதி வேறுபாடுகளின்றி, ஆண் பெண் பேதமின்றி, இன்று கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியிருக்கின்றது. முயற்சியும், ஆர்வமும், தீவிர நாட்டமும் இருந்தால் ஒருவர் எத்தகைய உயரிய நிலைக்கும் செல்லலாம் என்பதை நம் கண் முன்னெ இன்று காண்கின்றோம். ஆயினும் இன்று நம் மாணவச் செல்வங்களிடத்திலும்,  ஆய்வு மாணவர்கள் மத்தியிலும் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வதற்கானச் சிந்தனை ஏற்பட்டுள்ளதா என்பது கேள்வியே.

பொதுவாகவே, தமிழ் மக்களிடையே நூல் வாசிப்பு என்பது மிகக் குறைந்து கொண்டே வருகின்றது. பள்ளியில் தேர்வுக்காகவும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெருவதற்காகவும் என்று வாசிக்கும் போக்கை தான் பெருவாரியாகக் காண முடிகின்றது. இன்னும் சிலரோ பிறருக்குப் பணமும், சலுகைகளும், பரிசுகளும் கொடுத்து ஆராய்ச்சி பட்டங்களைப் பெறுவதற்கான தரம் தாழ்ந்த முயற்சிகளையும் கூட மேற்கொள்ளும் அவல நிலையும் இருக்கின்றது. இது சமூகத்தில் தோன்றியிருக்கும் ஒரு வகையான நோய். இந்த நோய் பரவவிடாமல் தவிர்க்கப்படவேண்டுமென்றால்  தமிழறிஞர்கள் வாழ்க்கை சரித்திரங்களையும் சமூகப் போராளிகளின் வாழ்க்கைச் சரிதங்களையும்,  அவர்கள் கடந்து வந்த பாதை, தமிழ்க்கல்வியைப் பெற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், அவர்களது ஆக்கப்பணிகள், அந்த ஆக்கப்பணிகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய  செய்திகளையும்  அறிவுறுத்த் வேண்டியது   அவசியமாகின்றது.

தொடர்க...
சுபா

Tuesday, December 26, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 146

சாதி வலியது. கொடியது!

நூல்களை வாசிப்பதனால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. அதிலும் இன்று வாசிக்கும்போது, இன்றைய காலகட்டங்களிலிருந்து பின்னோக்கிய செய்திகளைச் சொல்லும் நூல்கள் நமக்கு முக்கிய வரலாற்று ஆவணங்களாகவே திகழ்கின்றன. 

'என் ஆசிரியப்பிரான்' என்ற தனது நூலில் கி.வா.ஜ அவர்கள் தன் ஆசிரியரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய செய்திகளை அவர் மறைவுக்குப் பின்னர் எழுதி வெளியிட்டுள்ளார். 1983ல் இந்த நூல் மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே.. சாமிநாதயர் நூல் நிலயத்தின் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது. என் சரித்திரம் நூலின் தொடர்ச்சி எனப் பார்க்கப்படும் நூல் இது எனலாம்.

​இதில் ஆறாம் அத்தியாயத்தில் 'பழைய மரபு' என்ற தலைப்பில் உ.வே.சாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு செய்தியைப் பகிர்கின்றார். இது சாதிப்பிரிவினைத் தொடர்பானது. இச்செய்தியை​ ஒதுக்கித் தள்ளி செல்ல முடியாத ஒரு பகுதியாக நான் கருதுவதால்  இந்த நிகழ்வைப் பற்றியும் அதில் உ.வே.சா கொண்டிருந்த சார்பு நிலையைப் பற்றியும் இத்தொடரில் குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

​கி.வா.ஜா,   ​"அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும் நாடார் என்ற சாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது."  என்று குறிப்பிடுகின்றார்.​

சமூகத்தில் மக்களைச் சாதியால் பிரித்து, இவர்கள் உயர்ந்தவர்கள், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற ​கருத்தினை வலியத் திணித்து தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு கருத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ளச்செய்த முயற்சிகள் காலம் காலமாகத் தொடர்ந்தாலும், 18ம், 19ம் நூற்றாண்டுகளில் இது மிக அதிகமாகவும் தீவிரமாகவும் இருந்ததோ என நான் ஐயமுறுகின்றேன். சாதிப் பிரிவினையைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சில முயற்சிகள் நடந்தன என்பதனையும் அவ்வகையான சில நடவடிக்கைகளில் உ.வே.சாமிநாதையர் தானும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றார் என்பதுவும் வேதனைத் தரும் உண்மையே.

கி.வா.ஜா அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், இராமநாதபுரம் ஜமீனைச் சார்ந்த கமுதி என்ற கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் அச்சமயம் நாடார் சமூகத்தைச் சார்ந்தோர் அக்கோயிலில் நுழைந்தார்கள் என்றும் அதனைப் பலர் தடுத்ததாகவும், இதனால் ஒரு கலகம் ஏற்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார் போன்றோரின் சீர்திருத்தக் கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதால் ஏற்பட்ட மக்கள் விழிப்புணர்ச்சியின் பலனாகத் தொடங்கிய முயற்சிகளாக இருக்கலாம்.

இராமநாதபுரம் மன்னர் பழைய மரபுகளை மாற்றக்கூடாது என்ற எண்ணம் கொண்டவராம். ஆக, நாடார் சமூகத்தார் கோயிலுக்குள் நுழைந்தமையை எதிர்த்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் அப்போது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றார். பல காலமாக இருந்து வரும் பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரும் என நினைத்து அவர் அப்படிச் செய்திருக்கலாம் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அவருக்கும் பல நாடார் சமூகத்து நண்பர்கள் இருந்ததாகவும் ஆனாலும் கூட மரபை மீறக்கூடாது என்ற கொள்கையுடன் செய்தார் என கி.வா.ஜ குறிப்பிடுகின்றார்.

​மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்திருக்கின்றது. மன்னருக்குச் சார்பாக வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களில் உ.வே.சாமிநாதயர் அவர்களும் ஒருவர் என்று கி.வா.ஜ குறிப்பிடுகின்றார். அதில் "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார்" என்று குறிப்பிடுகின்றார்.

தீர்ப்புக் கூறிய நீதிபதி டி.வரதராவ் என்பவர், உ.வே.சே சிறந்த தமிழறிஞர், தமிழுக்குத் தொண்டு செய்தவர், பல அறிய நூல்களை வெளியிட்டு தமிழன்னையின் அன்பைப் பெற்றவர் என்று புகழ்ந்து, ஆகவே அவர் சொல்வது தகுதியாக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டி தீர்ப்பளித்திருக்கின்றார்.

கொடுமை!

இன்னார் இன்னார்தான் கோயிலுக்குள் செல்லலாம்; இந்தச் சாதியினர்தான் சிவாலயங்களுக்குள் செல்ல பிறப்பால் தகுதி படைத்தவர்கள் என்ற சிந்தனை இவ்வளவு தீவிரமாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்தது என்பதை இந்தச் செய்தி நமக்குக் காட்டுகின்றது. மிக அதிகமாக நூல்களை வாசித்தவர், மிகப் பெரும் தமிழ்ப்பணியை ஆற்றியவர், மத வேறுபாடுகள் களைந்து சமண பௌத்த நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்களையெல்லாம் பெற்றிருந்தாலும் கூட சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கவனித்து மனிதருக்குள் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தேவையற்றது எனக் கூறாமல் சாதியால் மக்களைப் பிரித்து வைத்த சமூகத்தில் தானும் ஒருவராகவே உ.வே.சாமிநாதையர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றார். அவரது காலத்தில் தான் தமிழகத்தின் பல இடங்களில் சாதிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மக்கள் எழுச்சி மிகத் தீவிரமாக ஏற்பட்டு வளர்ந்த காலகட்டமது. அந்தக் குரல்கள் அவர் செவிகளுக்கும் மனதிற்கும் எட்டவில்லை போலும்.  தனது ஆதரவை சாதிப் பிரிவுகளைத் தக்க வைக்கப் போராடிய ஆதிக்கவர்க்கத்துடன் இணைந்திருக்கும் வகையிலான சார்பு நிலையையே உ.வே.சா கொண்டிருந்தார் என்பது, நாம் விரும்பாவிட்டாலும் உண்மை என்பது புலப்படுகின்றது.

தொடரும்..

சுபா

Monday, December 25, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 145

சமய நிறுவனங்களில் நிர்வாகத்தில் பூசல்கள் நடப்பது என்பது புதிதல்ல. வாட்டிக்கன் ஆகட்டும், தமிழகத்தின் மதுரை ஆதீனமாகட்டும், காஞ்சி சங்கரமடமாகட்டும். ஒரு நிறுவனம் என்றாலே அதற்குள் ஏதாவது ஒரு உட்பூசல்கள் எழுவதைத் தடுக்க முடியாது. சமய நிறுவனங்களுக்கும் அது பொருந்தும் என்பதை செய்தி ஊடகங்களின் வழி கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன .

உ.வே.சா அவர்களின் வாழ்க்கை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் அறிமுகத்திற்குப் பின்னர், திருவாவடுதுறை சைவத்திருமடத்தோடு முற்றும் முழுதுமாக பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்பதை மறுக்கமுடியாது. அத்திருமடத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளில் உ.வே.சாவின் ஈடுபாடு இருந்தமையும்,  அத்திருமடம் உ.வே.சாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல நல்ல மாற்றங்களுக்கும் உயர்வுக்கும் அடிப்படையை அமைத்துக் கொடுத்தமையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன். உ.வே.சா தன் சரிதத்தில் பதியாமல் விடுபட்ட ஒரு குறிப்பு, ஆனால் அவரது மாணவர் கி.வா.ஜ அவர்கள் என் ஆசிரியப்பிரான் நூலில் குறிப்பிடும் ஒன்று இத்திருமடத்தில் நிகழ்ந்தது.

1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அப்பொழுது மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் மடத்தின் தம்பிரான்களில் ஒருவரான காறுபாறு வைத்தியநாதத் தம்பிரான் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த தலைமைப் பொறுப்பு ஏற்கும் விழாவில் உ.வே.சா அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்டார். மடத்தின் வழக்கப்படி அம்பலவாண தேசிகர் என்ற பட்டப்பெயருக்குப் பின் பதவி ஏற்போர் ஏற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் என்ற திருப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்த காலகட்டத்தில் திருமடத்தின் தலைமைப்பீடம் தனக்கே வேண்டும் என்று அதே மடத்தைச் சார்ந்த தம்பிரான் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அந்தச் சமயத்தில் சில கலவரங்கள் திருவாவடுதுறை ஆதீனத்தில்  நிகழ்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்தச் சூழலில் புதிதாகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தில்  தனக்குத் துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்று விரும்பி உ.வே.சா அவர்களை உடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக அறியமுடிகின்றது. ஆக, ஏப்ரல் 1920 முதல் உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் தொடர்ந்து சில மாதங்கள் தங்கியிருக்கின்றார். அந்தச் சமயத்தில் மடத்தின் சரசுவதி மகாலில் இருந்த ஓலைச்சுவடிகளை மீண்டும் கண்டு ஆராயும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. அச்சமயத்தில் உ.வே.சா தான் மட்டும் என்றில்லாமல் தனது மாணாக்கர்கள் சிலரையும் அங்கு வரச் செய்து உடன் இருக்கும் படி ஏற்பாடுகள் செய்து அங்கே தமிழ்ப்பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார். உ.வே.சா மடத்திலேயே இருந்ததால் தலைமைப் பீடத்திற்கு ஆசைப்பட்டோர் மடத்தில் கலவரங்களை நிகழ்த்தாமல் அமைதியாகிச் சென்றுவிட்டனர். திருவாவடுதுறை மடத்திலேயே அவரது தமிழ்ப்பணி இக்காலகட்டத்தில் வாசிப்பு, சுவடி ஆராய்ச்சி, பாடம் போதித்தல் இறைவழிபாடு என்று கழிந்து கொண்டிருந்தது.

அதே ஆண்டு நவராத்திரியின் போது உ.வே.சா ஆதீனத்தின் சார்பில் அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அப்போது அதற்குச் 'சுப்பிரமணிய தேசிகர் கலாசாலை' என்ற பெயர் வழங்கப்பட்டது. அங்குத் தமிழ்ப்பாடசாலையும் தேவாரப் பாடசாலையும் தொடங்கி நடத்தப்பட்டன. மடத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் திருமடமே உடையும் உணவும் வழங்கி ஊக்குவித்தது.

இதற்கு அடுத்த ஆண்டு, 1921ல் மாசி மாதத்தில் நிகழ்ந்த கும்பகோண மகாமகப் பெருவிழாவில் ஆதீனகர்த்தரும் உ.வே.சாவும் கலந்து கொண்டனர். அங்கு நடத்த இலக்கிய நிகழ்வுகளை உ.வே.சா முன்னின்று நடத்தும் வகையில் ஆதீனகர்த்தர் ஏற்பாடுகளைச் செய்து தந்திருந்தார்.

அதே கால கட்டத்தில் சென்னையில் உ.வே.சாவின் சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் இரண்டாம் பதிப்பு அச்சாகி வெளிவந்தன. நீண்ட இடைவெளியில் முன்னர் பதிப்பித்தபோது விடுபட்ட செய்திகளையும் தகவல்களையும் விளக்கங்களையும் இந்த இரண்டாம் பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார்.

இதற்கு அடுத்த ஆண்டு, 1922 ஜனவரி மாதத்தில் அப்போதைய காலணித்துவ இந்தியாவை ஆட்சி செய்த  ஆங்கிலேய அரசு,  புலவர்களைச் சிறப்பிக்கும் ஒரு நிகழ்வினை 13ம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் இளவரசர் எட்வர்ட் இந்தியா வந்திருந்தார். தமிழ்ப் புலவர்களும் வடமொழிப் புலவர்களும் அந்த நிகழ்வில் பரிசளித்துச் சிறப்புச் செய்யப்பட்டனர். அப்படிச் சிறப்பு செய்யப்பட்டவர்களில் உவே.சா அவர்களும் ஒருவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புப் பெறுவதற்காக மெட்ராஸ் புறப்பட்டார் உ.வே.சா. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு அணியவேண்டிய பிரத்தியேக தலைப்பாகை, அங்கி ஆகியவற்றை அணிந்து கொண்டு தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பினைப் பெற்றுக் கொண்டார்.  மெட்ராசில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்தபோது அதிர்ச்சி தரும் செய்தி அவருக்குத் திருவாவடுதுறை மடத்திலிருந்து கிட்டியது. ஈராண்டுகளுக்கு முன்னர் பதவி ஏற்றுக் கொண்ட ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் காலமானார் என்பது தான் அந்தத் துயரச் செய்தி. ஆதீனகர்த்தர் எழுதி உ.வே,சாவும் சாட்சிக் கையெழுத்து இட்டு வைத்துச் சென்ற உயிலின் படி ஆதீனத்தில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் அடுத்த ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கோண்டார்.

திருமடத்தில் முன்னர் ஏற்பட்ட குழப்பங்கள் மீண்டும் தலைதூக்கின. புதிதாக 1922ம் ஆண்டு மடத்தின் தலைமைப்பீடத்தை ஏற்றுக் கொண்ட  ஆதீனகர்த்தர் காலத்தில் இந்தக் குழப்பங்கள் மேலும் பெருகவே, தம்மோடு வந்து மடத்தில் தங்கியிருந்து உதவுமாறு ஆதீனகர்த்தர் கேட்டுக் கொள்ளவே உ.வே.சாவும் மீண்டும் மெட்ராசிலிருந்து புறப்பட்டு திருவாவடுதுறை சென்று அங்கு மடத்தில் தங்கியிருந்தார் என்பது தெரிகிறது. அங்கே நிகழ்ந்த பூசல்களும் பிரச்சனைகளும் குறைவதாக இல்லை. உ.வே.சா அவர்களின் சீரிய தமிழ்ப்பணி தொடர முடியாத நிலைக்கு உள்ளானது.    இதே வகையில் தொடர்வது தமது பதிப்புப் பணியைப் பாதிக்கும் என முடிவெடுத்து உ.வே.சா ஆதீனகர்த்தரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மெட்ராசுக்குத் திரும்பினார். தன் பதிப்புப் பணிகளில் மீண்டும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். அப்போது சீவக சிந்தாமணியின் 3ம் பதிப்பு பணிகள் தொடங்கி அதே ஆண்டு 3ம் பதிப்பும் வெளிவந்தது.

ஆரம்பமும் முடிவும் இல்லாத கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை நூலின் சுவடிப்பிரதி ஒன்று உ.வே.சாவிற்கு முன்னர் ஏடு தேடச் சென்ற சமயத்தில் கிடைத்திருந்தது. அதனை ஆராய்ந்து பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். இதனைப் பதிப்பிப்பதற்காக உ.வே.சா பெரும் உழைப்பைப் போடவேண்டியதாக இருந்தது. தயாரித்த ஒரு பிரதியை ராவ்பகதூர் கனகசபைப்பிள்ளையின் ஒரு சொற்பொழிவுக்காக வழங்கினார்.  ஆனால் அப்பெரியவர் எதிர்பாராதவிதமாக இறந்து போனமையால் அப்பிரதி இவர் கைக்கு வராமலேயே போனது. குறிப்பெழுதி தயாரித்த ஏட்டுச்சுவடியின் படி காணாது போனது உ.வே.சாவிற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பல இடங்களில் தேடியும் வேறு படிகள் இந்த நூலுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சுவடியை மீண்டும் ஆய்ந்து குறிப்பெழுதி முகவுரையும் சேர்த்து 1924ம் ஆண்டில் அது வெளியீடு கண்டது. இந்த நூலைத் தனது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு உரிமையாகிக்கியிருந்தார். 18.2.1924ம் தேதி இந்த நூல் வெளியீடு கண்டது.


தொடரும்

சுபா

Sunday, December 24, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 144

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் 19ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞராக விளங்கியவர். இன்று அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் எத்துணை பேருக்கு அவரைத் தெரியுமோ, என்பது பெரிய கேள்விக்குறியே.

உ.வே.சாவின் வாழ்வில், தன் இளம் வயதில் அவர் கல்வி கற்க ஆரம்பித்த நாட்களில் மகாவித்வானைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்ற பேராவலுடன் பெருங்கனவினை மனதில் வளர்த்து வந்தார். அவரது கனவு மெய்ப்பட்டு வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்க்கல்வி பாடம் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆறு வருடங்கள் தான் அவருக்கு இவர் மாணவராக இருந்தார் என்றாலும் உ.வே.சாவின் சிந்தனையை முழுமையாக ஆர்ப்பரித்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஏனெனில், தன் சுயசரிதத்தை எழுதுவதற்கு முன்னர், மகாவித்துவானின் வரலாற்றை இரண்டு பகுதிகளாக எழுதி முடித்தார் உ.வே.சா.  அதோ தன் சரிதத்திலும் ஏறக்குறை பெரும்பகுதிகளில் மகாவித்துவான் பற்றிய தகவல்களை வழங்கியிருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா பதிப்பித்த சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, மணிமேகலை போன்ற நூல்களைத் தமிழறிஞர்கள் பலர் பாராட்டி சொல்லும் போது, எப்போதும் உ.வே.சா தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களைப் போற்றிப்புழ்வார், என உ.வே.சா அவர்களின் மகன் கலியான சுந்தரம் அவர்கள் என் சரித்திரம் நூலுக்கு வழங்கிய முகவுரையில் குறிப்பிடுகிறார். தமிழ்க்கல்வியினால் தமக்கு ஏற்பட்டுவரும் பெருமைக்கெல்லாம் அவரே காரணம் என்று தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கின்றார் உ.வே.சா.

இத்தகைய புகழுரைகளைக் கேட்ட பலரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலாக வெளிவந்தால் அது பலருக்கும் பயன்தரும் எனப் பல முறை சொல்லிக் கொண்டிருக்க, அந்த எண்ணம் உ.வே.சா அவர்களுக்கு மனதில் வலுப்பெற்று வந்தது.

1930ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் சென்னையில் தனது தியாகராச விலாசம் வீட்டின் மாடியிலிருந்து படிகளில் நடந்து வரும் பொழுது கால் தடுக்கி கீழே விழுந்து விட்டார் உ.வே.சா. காலில் அடி நன்றாகப் பட்டுவிட படுத்தப் படுக்கையாகி விட்டார். சில நாட்கள் ஆகியும் குணமாகாத நிலையில் அவரது இல்லத்திலேயே அவருக்கு சத்திரசிகிச்சை நடந்தது. அதன் பின்னர் அவர் அதிகமாகப் படிக்கக்கூடாது, ஓய்வுதான் தேவை என மருத்துவர்கள் சொன்னாலும் அவரால் இந்தக் கட்டளைகளை ஏற்க முடியவில்லை. படுக்கையில் இருந்த போது அவருக்கு ஆசிரியரின் நினைவு மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை முடிக்காமல் தனது சரித்திரம் முடிந்து விடுமோ என்ற அச்சம் வந்திருக்குமோ எனத் தனது நூலான என் ஆசிரியப்பிரானில் குறிப்பிடுகின்றார் உ.வே.சாவிடம் தமிழ்க்கல்வி பயின்ற கி.வ.ஜகந்நாதன் அவர்கள். தான் மகாவித்துவான் பற்றி எழுதிவைத்திருந்த குறிப்புக்கட்டை எடுத்துவரும்படி தமக்கு கட்டளையிட்டு  தான்   உடல் நலிவுற்றுக்கிடந்த அவ்வேளையில் அவரது சரிதத்தை எழுதும் பணியைத் தொடங்கியதைக் குறிப்பிடுகின்றார். உ.வே.சா சொல்லச் சொல்ல, அந்த நூல்களை எழுதியவர் கி.வ.ஜகந்நாதன் தான். இப்படித்தான் அந்த இரு நூல்களும் பிறந்தன.

முதல்பாகம் 1933ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 1934ம் ஆண்டும் என வரிசையாக ஓராண்டு இடைவெளியில் இந்த நூல்கள் பிறந்தன. தமிழ் நூல்கள் அச்சுப்பணியாக்கம் போல இந்த இரு வாழ்க்கை வரலாற்று நூல்களும் உ.வே.சா அவர்களின் சிறந்த படைப்புக்களாகத் திகழ்கின்றன.

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் சரிதத்தை எழுதத் தொடங்கிய பின்னர் 1931ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சென்னை மயிலாப்பூரிலுள்ள 'லா ஜர்னல்' பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய உறவினர் இராமச்சந்திர ஐயருடன் உ.வே.சா அவர்களைப் பார்க்க வந்திருக்கின்றார். 1932 ஜனவரி தொடங்கி 'கலைமகள் ' என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டு அதில் உ.வே.சாவின் கட்டுரைகள் இடம்பெறவேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டுக் கொண்டதாக கி.வ.ஜா அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகின்றார். 'கலைமகள் ' என்ற பெயரிலேயே அதற்கு முதல் கட்டுரையை உ.வே.சா அவர்கள் எழுதித்தந்திருக்கின்றார். இதன் தொடர்ச்சியாக கலைமகள் பத்திரிக்கையில் கி.வா.ஜா அவர்கள் முதலில் துணை ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் மூன்று ஆண்டுகளில் கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். பத்திரிக்கையாக மட்டுமன்றி கலைமகள் பிரசுரத்தின் வழியாகத் தமிழ் நூல்களை வெளியிட வேண்டும் என்ற உ.வே.சா அவர்களின் ஆலோசனையின் படி சில தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டமையை கி.வா.ஜா வின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.

உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்றின் முதல் 43 ஆண்டுகளின் நிகழ்வினை படம்பிடித்துக் காட்டுவது போல விவரிப்பது 'என் சரித்திரம்'. அவரது மறைவுக்குப் பின்னர் உ.வே.சாவின் வரலாற்றில் விடுபட்ட செய்திகளைத் தொகுத்து 'என் ஆசிரியப்பிரான்' என்ற பெயரிட்டு நூலாக வெளியிட்டவர் கி.வா.ஜா என்பது குறிப்பிடத்தக்கது.

உ.வே.சா அவர்கள் தனது சரிதத்தில் குறிப்பிடாவிட்டாலும் கூட அவரது பணிகளில் சிறந்த படைப்புக்களுள் ஒன்றாகத் திகழ்வது அவரது குறுந்தொகை அச்சுப்பதிப்பாக்கமாகும். குறுந்தொகை எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாக இடம்பெறுவது.

உ,வே.சா வெளியிடுவதற்கு முன்னரே திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனார் என்ற தமிழறிஞர் குறுந்தொகையை 1915ம் ஆண்டு அச்சுப்பதிப்பாக வெளியிட்டிருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாமல் ஏதோ ஒருவகையில் உரையெழுதி அச்சிடப்பட்ட பதிப்பு அது. அச்சில் குறுந்தொகை வந்துவிட்டதால், தான் அதே பணியை செய்ய வேண்டாம் என உ.வே.சா அவர்கள் நினைத்திருந்தார். ஆனாலும் அந்தப் பதிப்பில் பல செய்திகள் விடுபட்டிருந்தமையைக் கருத்தில் கொண்டு தானே குறுந்தொகைக்கு உரையெழுதிப் பதிப்பிக்க வேண்டும் என பணிகளைத் தொடங்கி விட்டார். குறிப்புக்களை எழுதி விரிவான உரையைத் தயாரித்தார். நச்சினார்க்கினியரும், பேராசிரியரும் ஏற்கனவே எழுதிய உரைகளை எங்குத் தேடியும் உ.வே.சாவிற்கு அவை கிட்டவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் எதையோ இழந்து விட்டது போன்ற நிலையில் உ.வே.சா இருந்ததாக கி.வா.ஜா குறிப்பிடுகின்றார். பொக்கிஷம் போன்ற இலக்கியங்களைப் போற்றத்தெரியாத மூடர்களை எண்ணி அவர் மனம் வருந்தியிருக்கும் போல..!

முதுமையினாலும் உடல் தளர்ச்சியினாலும் அவரால் வேகத்துடன் பல காரியங்களைச் செயல்படுத்த இயலவில்லை. ஆயினும் இந்த அச்சுப்பதிப்பின் எழுத்துப் பணிகளில் அவருக்குத் துணையிருந்து பெரிதும் உதவியவர் கி.வா.ஜா. இதனைக் குறுந்தொகை நூலின் முகவுரையில் உ.வே.சா பதிகின்றார். சென்னை பல்கலைகழத்தின் பொருளுதவியுடன், கேணி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு உ.வே.சாவின் உரையுடன் கூடிய குறுந்தொகை, 1937ம் ஆண்டு வெளிவந்தது.



தொடரும்..
சுபா

Saturday, December 23, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 143

இன்று இப்பதிவினை எழுதும் போது என் மனம் கனக்கின்றது.

என் சரித்திரம் நூலில், தனது வாழ்க்கையில் தான் செய்த தமிழ்ப்பணியில் மிக முக்கியமானதொன்றாக உ.வே.சா அவர்கள் கருதும் மணிமேகலை பதிப்பைப் பற்றியும், அதன் தொடர்ச்சியாக அதன் வெளியீட்டையும், அதன் பின்னர் மணிமேகலைக்குத் தமிழறிஞர்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த வரவேற்பினையும் விவரிக்கும் அத்தியாயம் 122. இந்த அத்தியாயத்தை அவர் எழுதி அனுப்பிய பின்னர் இத்தொடர் தொடரப்படவில்லை. உ.வே.சா அவர்கள் 28.4.1942 அன்று மறைந்தார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக முடிந்த வரை வாரம் ஒன்று என்றும் பல வேளைகளில் எனது அலுவலகப் பணிகளாலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளாலும் ஏற்படும் நீண்ட இடைவெளிக்குப் பிறகும் உ.வே.சா அவர்கள் எழுதிய என் சரித்திரம் நூலை வாசித்து, அவர் இந்த நூலில் தந்துள்ள செய்திகளைச் சிந்தித்து அவற்றுடன் நான் உலா செல்லும் போது என் மனதில் தோன்றும் கருத்துக்களை இத்தொடரின் வழி பதிந்து வந்துள்ளேன்.

இந்த என் சரித்திரம் எனும் நூல் தனிச்சிறப்பு கொண்டது. ஏனெனில் உ.வே.சா அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானவையாக மனதில் கருதி, தமிழ் உலகுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்த பகுதிகள் அனைத்துமே தமிழ்க்கல்வி தொடர்பானவையே. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நிகழ்வுகளின் வரலாற்றுக் குறிப்பு போலத் தனது சொந்த குடும்பத்தின் செய்திகளைக் குறிப்பிடுகின்றார். இவற்றை நீக்கினால் நூல் முழுக்க மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், திருவாவடுதுறை சைவமடமும், ஓலைச்சுவடிகளும், தமிழ் ஆய்வுகளுமே இந்தச் சரிதத்தை நிறைத்திருக்கின்றன.

2014ம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய கால விடுமுறைக்காக கனேரிய தீவுக்கூட்டத்தில் உள்ள தீவு ஒன்றிற்கு விடுமுறை சென்றிருந்தபோது வாசிக்க வேண்டும் என என் சரித்திரம் நூலைக் கையில் எடுத்துச் சென்று அந்த விடுமுறையில் முழுமையாக இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். சில நேரங்களில் வாசிக்கும் போது நான் அவரது ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் இடைவெளி விடாது இணைந்து நடப்பது போல உணர்ந்திருக்கின்றேன். சில பகுதிகளை வாசித்தபோது என் சுய கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் நீர் வழிந்தோடுவதை உணர்ந்திருக்கின்றேன் தடுக்க மனமில்லாமல்!

நான் வாசித்தது மட்டும் போதாது! இன்றைய ஆய்வுலகமும், இளைய தலைமுறையும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இதனை வாசித்து முடித்தபோது எனக்குள் எழுந்ததன் விளைவாகத்தான் இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. மே மாதம் 14ம் தேதி 2014ம் ஆண்டு இத்தொடரின் முதல் பதிவினை நான் எழுதி தமிழ் மரபு அறக்கட்டளையின் இணைய ஊடகமான மின்தமிழில் பகிர்ந்து கொண்டேன். அதில் உள்ள சில பத்திகளை, இவை வாசகர்களுக்கு உதவும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவில் மீள்பார்வைக்காக மீண்டும் பதிகிறேன்.

என் சரித்திரம் என்னும் இந்நூல் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

என் சரித்திரம் உருவான விதத்தையும் தெரிந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும் அல்லவா?

1935ம் ஆண்டு மார்ச்சு 6ம் தேதி உ.வே.சா அவர்களின் 80ம் ஆண்டு பூர்த்தி சதாபிஷேகத்தின் போது கலந்து கொண்ட சில நண்பர்களின் எண்ணத்தில் உ.வே.சா அவர்கள் தனது சுயசரிதத்தை எழுத வேண்டும் என்ற கருத்து உதித்திருக்கின்றது. உ.வே.சா அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சுயசரிதத்தை எழுதி வெளியிட்டிருந்தார்கள். பிள்ளையவர்களின் சரித்திரமே இவ்வளவு அருமையாக வந்திருக்கின்றதே. அவரது சுய சரித்திரத்தையும் உ.வே.சா அவர்கள் எழுத வேண்டும் என்ற நண்பர்களின் நோக்கத்தை உ.வே.சா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நண்பர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் குறுந்தொகை பதிப்பிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தியதால் இந்த முயற்சி தொடங்கப்படாமலேயே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் பலர் இவருக்கு ஞாபகம் ஊட்டத் தவறவில்லை.

ஒரு நூலாக அமைத்து வெளியிட நீண்ட காலமாகும் என்பதால் ஒரு பத்திரிக்கையில் வாராவாரம் வரும் வகையில் பதியலாமே என்ற எண்ணம் நண்பர்களுக்கும் இவருக்கும் தோன்றியிருக்கின்றது. அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கை பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள் ஸ்ரீ எஸ்.எஸ்.வாசன் அவர்களுடன் வந்து உ.வே.சா அவர்களுடன் பேசி வாரந்தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் 1940 ஜனவரி முதல் சுயசரிதை எழுதும் பணி இவரது 85ஆவது அகவையில் தொடங்கியது. முதல் அத்தியாயம் 6.1.1940 அன்று ஆனந்த விகடனில் வெளிவந்தது.

இந்தத் தொடர் வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என்ற வகையில் 1942ம் ஆண்டு மே மாதம் வரையில் சுயசரிதம் என்ற தலைப்பில் வெளிவந்தது. 28.4.1942 அன்று உ.வே.சா அவர்கள் மறைந்தார்கள். உ.வே.சா அவர்கள் முன்னரே குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராதலால் அவரது எழுத்தில் இறுதியாக வந்த அத்தியாயம் மே மாதத்துடன் முற்றுப்பெறாமலேயே நிறைவடைந்தது. ஆக 122 அத்தியாயங்களுடன் என் சரித்திரம் முற்றுப் பெறாத சரித்திரமாகவே நம் கையில் தவழ்கின்றது. 1942க்குப் பின்னர் பல தடங்கல்களைத் தாண்டி 1950ம் ஆண்டு உ.வே.சா அவர்களின் திருக்குமாரன் திரு.சா.கலியாணசுந்தர ஐயர் அவர்களால் நூலாக வெளியிடப்பட்டது.

தொடரும்..

சுபா

Thursday, December 21, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 142

தனது முந்தைய அச்சுப் பதிப்பு நூல் வெளியீடு போலன்றி நூலுக்கு உரையையும் எழுதி வெளியிட்ட புதிய முயற்சியாய் மணிமேகலை அச்சுப்பதிப்பாக்கம் இருந்தது. எளிய உரை நடையில் விளக்கம் என அமைத்திருந்தமையினால் மணிமேகலை அக்காலத்து தமிழறிஞர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. நூலின் அமைப்பு முறை வாசிப்போருக்குப் பொருளை மிக எளிமையானதாக ஆக்கியிருந்தது. பல கூடுதல் தகவல்களையும் விரிவாக உ.வே.சா நூலில் இணைத்திருந்தார். இவையெல்லாமே இந்த நூலை வாசகர்கள் மத்தியில் ஈர்ப்பனவாக அமைந்திருந்தது.

இந்த நூலில் புறத்திரட்டு நூல்களை ஆராய்ந்தபோது அதில் கிட்டிய குண்டலகேசி காப்பியத்தின் செய்யுட்களையும் தாம் இந்த நூலில் சேர்த்தமையைப் பற்றி உ.வே.சா குறிப்பிடுகின்றார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இது பௌத்த மதச் சார்பு கொண்ட ஒரு இலக்கியம். இதனை நாதகுத்தனார் என்ற தமிழ்ப்புலவர் இயற்றினார் என அறிகின்றோம். இன்று இதன் 19 செய்யுட்கள் மட்டும் அடங்கிய பகுதிகள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த நூல் முழுமையாகக் கிடைக்காமல் போனது நமது துரதிர்ஷ்டமே. ஓலைச்சுவடிகளை முறையாகப் பாதுகாக்காது போனமையினால் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு பல. இது ஈடுகட்டவே முடியாத இழப்பு.

குண்டலகேசியின் செய்யுட்கள் சிலவற்றை விளக்கக் குறிப்பு பகுதிகளில் மணிமேகலை பதிப்பில் உ.வே.சா இணைத்திருந்தார். இந்த முயற்சிகளினால் குண்டலகேசி என்று ஒரு தமிழ் பௌத்த காப்பியம் ஒன்று பௌத்த முனிவர்களால் இயற்றப்பட்டிருந்தது என்பதை இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வளையாபதியின் நிலையோ இன்றும் கேள்விக்குறிதான். ஏனெனில் உ.வே.சா அவர்கள் ஏடுதேட பல ஊர்களுக்குச் சென்று ஓலைக்கட்டுக்களை அலசிய காலகட்டங்களில் எங்கோ ஓரிடத்தில் தாம் வளையாபதியின் சில ஏடுகளைப் பார்க்க நேரிட்டதாகவும் பின்னர் அதனை மீண்டும் தேடத் துணிகையில் அது அவருக்குக் கிடைக்காமலேயே போய்விட்டது என்றும் அறியமுடிகின்றது. இதனை உ.வே.சா அவர்களின் மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தனது என் ஆசிரியப்பிரான் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவின் பல நூலகங்களிலும் இலங்கையின் நூலகங்களிலும் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல நூலகங்களில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிப் பார்த்தால் வளையாபதியின் ஒரு பிரதி எங்காவது கிட்டுமோ என்ற ஆதங்கம் இவ்வேளையில் மனதில் எழத்தான் செய்கின்றது. இந்த முயற்சியைக் கைவிடாது தொடர வேண்டியது நம் கடமை.


"தமிழ்மகள் தன் மணிமேகலையை இழந்திருந்தாள். அதனைக் கண்டெடுக்கும் பேறு எனக்கு வாய்த்தது. ஆயினும், அதிற் பதித்திருக்கின்ற ரத்தினங்களின் தன்மை இன்னதென்று முதலில் எனக்குத் தெரியவில்லை. அதனை ரங்காசாரியார் அறிவித்தார். மணிமேகலை மீட்டும் துலக்கப் பெற்றுத் தமிழ்மகளின் இடையை அலங்கரித்து நிற்கின்றது." என உ.வே.சா அவர்கள் கலைமகள் பத்திரிக்கையில் 'மணிமேகலையும் மும்மணியும்' என்ற தலைப்பில் எழுதி கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை அச்சு வெளியீட்டினால் உ.வே.சாவிற்கு வந்து குவிந்த புகழ்மாலைகளுக்கிடையே அவருக்கு 'பௌத்த சமயப் பிரபந்த பிரவர்த்தனாசாரியார்' என்ற பட்டமும் கிடைத்தது சுவாரசியமானதொரு கதை. ஆனந்தன் என்ற பெர் கொண்ட ஒருவர் விவேக திவாகரன் என்ற அன்றைய பத்திரிக்கையில் உ.வே.சா அவர்களை மணிமேகலையைப் பிரசுத்தமையைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பட்டத்தையும் வழங்குவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தச் செய்தியை வாசித்து தன் சக நண்பர்களுக்குக் கூறி மகிழ்ந்ததோடு இப்பட்டத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிப் போற்றி வந்ததாக உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

முன்னர் சிந்தாமணியைப் பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மனியார் உ.வே.சா அவர்களை ஒரு சமணத்தமிழ் அறிஞரோ எனப்பாராட்டி பவ்ய ஜீவன் என சிறப்புடன் அழைத்தார். மணிமேகலை அச்சுப்பதிப்புப் பணியை வியந்து ஒரு பௌத்த அன்பர் ஒரு சிறப்புப் பட்டம் வழங்கி மகிழ்ந்தார். மதங்களைக் கடந்ததுதான் தமிழ்ப்பணி. அதனை உ.வே.சா அவர்கள் அன்று செய்தார்கள். இன்று நிலையோ வேறாகத்தான் இருக்கின்றது!

ஒரு மதத்தை தீவிரமாகப் பின்பற்றுவோர் வேறு பிற சமயத்து இலக்கியங்களைப் பற்றி ஒரு சிறிதும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தான் சார்ந்துள்ள சமயமே எல்லா உண்மைகளையும் சொல்வதாகக் கருதிக் கொண்டு ஏனைய பிற மதங்களில் உள்ள நூல்களை குறைந்த ஞானம் கொண்ட நூலாக மதிப்பிடும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் பிற மதங்களில் உள்ள நூல்களை ஆராய்ந்து பார்க்கவும் துணியாதவர்களாக இருக்கின்றனர். தனக்குத் தெரிந்தவை மட்டுமே உண்மை என்றும் தாம் நம்பும் தத்துவங்களே சத்தியமென்றும் பிறமதங்கள் சார்ந்தவை எதைனையும் துச்சமென மதிப்பதும் இத்தகையோர் போக்காக உள்ளது.

மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டவைதான் மதங்கள். அவற்றில் உள்ள குறைகளும் நிறைகளும் மனிதர்களையே சாரும். பல சமய தத்துவங்களையும் வாசித்து, மதம் என்னும் வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட ஒரு சிறிய வட்டத்திலிருந்து வெளியேறுவதே சிந்தனை சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமையும். தத்துவக்கோட்பாட்டை அலசுவதற்குச் சுதந்திரத்தைக் கடைபிடிக்கும் போக்கு வளர வேண்டும் . அதற்கு பிற மதங்களை அறிந்து கொள்ள அச்சமில்லாத மன திடம் தான் அடிப்படையே!

தொடரும்..

சுபா