Sunday, March 23, 2025

சித்தார்த்தா - கால்வ்



 சித்தார்த்தா நாவலுக்காக நோபல் பரிசு பெற்றவர் இலக்கியவாதி ஹெர்மான் ஹெஸ்ஸ. இவர் ஒரு ஜெர்மானியர். 55 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது சித்தார்த்தா நாவல்.

தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இன்று தற்செயலாக அவர் பிறந்த ஊரான கால்வ் நகருக்குச் சென்றிருந்தோம்.
அங்கு எதிர்பாராத விதமாக ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களது வழித்தோன்றல் உறவினர்கள் நாங்கள் அவரது சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தேடிக் கொண்டு வந்து பேசினார்கள்.
சித்தார்த்தா நாவலைப் பற்றி உரையாடினோம். ஹெர்மான் அவர்களது தாத்தா கூண்டர் ஒரு இலக்கியவாதி. சுதந்திரமான இலக்கியம் படைக்க வேண்டும் என முயற்சித்தவர்.
கூண்டர் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் 25 ஆண்டுகள் இருந்தவர். மலையாள மொழியின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுகின்றேன்.
அதில் அவரது உறவினர்கள் அண்மையில் வெளியிட்ட இரண்டு நூல்களை எங்களுக்கு பரிசளித்தார்கள். கூண்டர், ஹெர்மன் ஹெஸ்ஸ இருவர் பற்றியும் எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழி நூல்கள் அவை.
எதிர்பாராத ஆனால் ஆச்சரியமான மகிழ்ச்சி நிறைந்த ஒரு அனுபவமாக அமைந்தது.
-சுபா
23.3.2025














Wednesday, March 19, 2025

சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள்

 


இன்று சர் ஜான் மார்ஷல் அவர்களது பிறந்தநாள். சிந்துவெளி நாகரிகத்தின் தனிச்சிறப்பை உலகுக்கு வெளியிட்டவர் சர் ஜான் மார்ஷல்.

Illustrated London News ஆய்விதழில் சர் ஜோன் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924.
20 செப்டம்பர் 2024 அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் மரபு அறக்கட்டளை ஓர் இலச்சினை வெளியிட்டு சிறப்பு செய்தோம். ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றையும் பச்சையப்பா கல்லூரியில் ஏற்பாடு செய்து சிந்துவெளி ஹரப்பா நாகரிகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம்.
சர் ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பும் ஆய்வுகளும் நம் பெருமை!
19.3.2025



Tuesday, March 18, 2025

டார்வின்

 


லண்டன் பயணத்தில் ஆறு புதிய நூல்களை வாங்கி வந்தேன். அனைத்தும் வரலாறு மற்றும் அறிவியல் தொடர்பானவை தான்.

நண்பர்கள் சந்திப்பின் போது சில நூல்கள் பரிசளித்திருக்கின்றார்கள். இப்படி நூல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று இரவு டார்வின் பற்றிய, குறிப்பாக அவரது உலக ஆய்வுப் பயணம் பற்றிய நூல் ஒன்று படிக்க தொடங்கினேன்.
கடலில் நீண்ட உலகப் பயணம்... மிகத் தீவிரமாக ஆய்விலேயே கவனம் வைத்து உலகுக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார் டார்வின்.
முன் தயாரிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஆவணப்படுத்தல் முயற்சி, அவணப்படுத்திய ஆவணங்களை ஆய்வு செய்தல், அவற்றை முறையாக வெளியிடுதல் என பல்வேறு வகையில் டார்வின் மேற்கொண்ட முயற்சிகள் தான் இன்று நமக்கு வழிகாட்டியாக அமைகின்றன.
கிருத்துவ கத்தோலிக்க மத நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் evolution, natural selection கருத்தாக்கங்களை அவர் வெளியிட்ட போது அவருக்கு எவ்வகையான எதிர்ப்புகள் இருந்திருக்கும் என்பது நம்மால் ஊகிக்க முடியும். அறிவியல் எப்போதும் மத நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கும் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும்; உலகம் பற்றிய புது தெளிவை மக்களுக்கு வழங்கும்.
டார்வினை பற்றி பேசுவதும் அவரது கண்டுபிடிப்புகளை அவரது ஆய்வுகளைப் பற்றி பேசுவதும் இப்போதும் நமக்கு மிக மிக அவசியம் என்று நினைக்கின்றேன்.
லண்டன் நகரில் உள்ள natural history museum டார்வின் ஆய்வுப்பகுதி ஒன்றைக் கொண்டிருக்கின்றது. அவர் சேகரித்து வந்த பலரும் பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அறிவியலை சிந்திப்போம்
அறிவியலை வாசிப்போம்
அறிவியலை பேசுவோம்.
-சுபா

Saturday, March 15, 2025

லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு




 லண்டனில் தமிழ் மக்கள் சந்திப்பு. இலக்கிய ஆளுமைகள் பேராசிரியர் நித்தியானந்தன், பத்மநாப ஐயர், நவஜோதி, மீனா, ஓவியர் ராஜா என பலரும் வந்திருந்து இன்று அருமையான ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு லண்டன் தமிழ் மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.









அம்பேத்கரை புரிந்து கொள்ளல் - கௌதம சன்னா

 லண்டன் நகரில் உள்ளவர்கள் கலந்து கொள்க. சனிக்கிழமை காலை 10:30 க்கு.



https://www.facebook.com/share/v/1XPHx3b7Zq/


Thursday, March 13, 2025

பேருந்தில் வாசித்தல்

 வாசிக்கும் சமூகம்



லண்டன் நகரில் ஓடுகின்ற பேருந்துகள் ஒவ்வொன்றிலும் நுழைந்த உடன் ஒரு பெட்டி இருக்கிறது. அதில் அன்றைய மெட்ரோ பத்திரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. Please recycle என்ற சொற்கள் பெட்டி மேல் எழுதப்பட்டிருக்கின்றன. நாம் வாசித்து விட்டு அதே பேருந்தில் அல்லது அடுத்த பேருந்தில் கூட மற்றவர்கள் வாசிக்க வைத்து விட்டு செல்லலாம்.
பத்திரிகைகளை வாசிக்க வேண்டும், நடப்பு செய்திகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், தகவல் அறிந்த சமூகமாக மக்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படையாகத் தெரிகின்றது.
இப்படி தமிழ்நாட்டு பேருந்துகளும் முயற்சியைத் தொடங்கினால் பத்திரிகை வாசிப்பு பெருகும். பாடல்களைக் கேட்டுக் கொண்டும் செல்போனைத் தோண்டி அகழாய்வு செய்து கொண்டிருக்கும் போக்கு மாறி பத்திரிக்கை வாசிக்கும் பண்பு மீண்டும் உயிர் பெறும்.
-சுபா

Wednesday, March 12, 2025

பினாங்கிலிருந்து வெளிவந்த தமிழ் வார மாத நாளிதழ்கள்

 பிரித்தானிய நூலகத்தில் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் மலாயாவின் பினாங்கிலிருந்து வெளிவந்த தமிழ் வார மாத நாளிதழ்கள் அப்போதைய பல நிகழ்வுகளுக்கு ஆதாரங்களாக அமைகின்றன. அவற்றில் சத்தியவான், பினாங்கு விஜய கேதனன் ஆகிய இதழ்களை இன்று ஆய்வு செய்யும் வாய்ப்பு கிட்டியது.






Tuesday, March 11, 2025

பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள்

 பிரித்தானிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்கள் வழங்கப்பட்டன. இங்கு நூலகத்திற்கு வருவோர் இந்த சிறந்த ஆய்வு நூல்களை வாசித்து பயன்பெறலாம். பிரித்தானிய நூலகம் சார்பாக ஆசியவியல் துறையில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பேற்று இருக்கும் திருமதி ஆரணி இந்த நூல்களைப் பெற்றுக் கொண்டார்.




வேள்விக்குடி செப்பேடுகள் - பிரத்தானிய நூலகத்தில்

 


வேள்விக்குடி செப்பேடுகள்
இன்று நேரில் பார்வையிட்டேன்.
10 செப்பேடுகள் 27.5 x 8 அளவிலான மெல்லிய செப்பு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளன. வளையத்தின் மேல் எந்த முத்திரையும் இல்லை.
செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. வரிகள் 1- 30 வரை மற்றும் 142 -150 வரை கிரந்த எழுத்துருவிலும். வரிகள் 31 லிருந்து 141 வரை 151ல் இருந்து 155 வரை வட்டெடுத்து தமிழ் எழுத்துருவிலும் அமைந்துள்ளன. தமிழ் பகுதிகளில் வருகின்ற சமஸ்கிருத எழுத்துக்கள் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடுகள் ஒவ்வொன்றும் கிரந்த எழுத்துகளால் வரிசை எண் போடப்பட்டுள்ளன.
சமஸ்கிருத பகுதி சிவபெருமானை புகழ்ந்து பாண்டியர்கள் பரம்பரையை புகழ்ந்து கூறும் புராண கதையிலிருந்து தொடங்குகிறது.
தமிழ் பகுதி இந்த செப்பேடு குறிப்பிடும் நன்கொடையைக் குறிப்பிடுகிறது.
பாண்டிய மன்னன் பல்யாகக்குடுமி பெருவழுதி வேள்விக்குடி என்ற கிராமத்தை நற்கூரன் அதாவது கொற்கை கிராமத்தின் தலைவன் வேத வேள்விகள் செய்வித்தமைக்காக வழங்கிய நிலக் கொடையைப் பற்றி கூறுகிறது.
இந்தச் செப்பேடு மேலும் எவ்வாறு அவனது பாண்டியன் எதிரிகள் இந்த நிலப் பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை கூறுகிறது. பல போர்களுக்குப் பிறகு பாண்டியர்கள் வம்சத்தில் பிறந்த பராந்தக நெடுஞ்செழியன் கைப்பற்றி இப்பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினான், அமைதியைக் கொண்டு வந்தான் என்றும் குறிப்பிடுகின்றது.
மேலும் தகவல்கள் பின்னர்..
-சுபா
11.3.2025

https://www.facebook.com/share/v/1YefxTbCQG/

Monday, March 10, 2025

மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள்.

 மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள்.

இக்காணொளியைப் பார்த்து மகிழுங்கள்.
https://www.facebook.com/share/v/1935RiEUge/

மைசூர் புலி திப்பு

 


மைசூர் புலி திப்பு சுல்தானின் வாள் மோதிரம் மற்றும் வாசனை திரவியம் வைக்கப்படும் குடுவை - இன்று இவை இருப்பது இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில்.

திப்பு சுல்தானின் வாளை நேரில் பார்த்தபோது ஒரு வகையில் மனம் கலங்கியது. அவரது வீரம் நினைக்கும் போது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
ஆங்கிலேயர்களிடம் மண்டியிட்ட பல மன்னர்களும் சிற்றரசர்களும் இருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போர் தொடுத்து பலமுறை அவர்களை விரட்டி தோற்கடித்து பின்னர் அவர்களுக்கு எதிரான போரில் தனது அரசை காப்பாற்றும் முயற்சியில் கொலை செய்யப்பட்ட திப்பு சுல்தானின் வீரத்தை பறைசாற்றும் வாள்.
திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் அச்சத்துடன் தான் அணுகினார்கள். திப்புவின் வீரத்தின் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத மரியாதை இன்றும் தொடர்கிறது.
-சுபா

சிந்துவெளி அகழாய்வு அரும் பொருட்கள்

சிந்துவெளி அகழாய்வு அரும் பொருட்கள் -பிரித்தானிய அருங்காட்சியகத்தில் Room No.33

https://www.facebook.com/share/v/1QMmDm8aQg/


Saturday, March 8, 2025

இசைஞானி இளையராஜா சிம்பொனி அரங்கேற்றத்தில்..

 இசைஞானி இளையராஜா சிம்பொனி அரங்கேற்றத்தில்..









லண்டன்

மகளிர் தினம் 2025



 -பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும்

-சுயமரியாதையோடு தன் காலில் நிற்பதற்கும்
-அறிவோடு செயல்பட்டு தனக்கான மரியாதையை நிலை நிறுத்திக் கொள்வதற்கும்
-பரந்த பார்வையோடு உலகைக் காண்பதற்கும்
- தனக்கான சுய அடையாளத்தைத் தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்கும்
ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் காலம் இது.
ஆயினும் கூட
தங்களைப் பின்னுக்கு இழுக்கும்
-உணர்வுகளுக்கும்
-ஐயங்களுக்கும்
-அச்சங்களுக்கும்
-உறுதியற்ற தன்மைகளுக்கும்
-சமையலறையை வாழ்க்கையாக நினைக்கும் சிந்தனைக்கும்
- சுய பச்சாதாபத்திற்கும்
-தன் மேல் நம்பிக்கை இல்லா தன்மைக்கும்
-தன்னை நம்பாமல் ஓர் ஆணை மட்டுமே முழுமையாக நம்பிக்கொண்டிருக்கும்
பெண்களுக்கு விடிவு வராது.
பெண்களே, உலகம் பல வாய்ப்புகளை நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றது. "அவற்றை நாம் முயற்சி எடுத்து பார்க்கின்றோமா?" என்பதுதான் பெண்கள் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!
பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காதல் காரணமாகின்றது. தன்னை இழந்து ஓர் ஆணை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பதற்கு முன் அதற்கு அந்த நபர் தகுதியானவர் தானா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள். படித்த உயர் பதவியில் இருக்கும் பெண்கள் கூட திருமணம் ஆன ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதும், மற்ற பெண்ணை ஏமாற்றியவர்களைக் காதலிப்பதும் திருமணம் செய்வது கொள்வதும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே சீரழித்துக் கொள்வதற்குக் காரணமாகிறது.
சீராகப் பயணிக்க வேண்டிய பல பெண்களின் வாழ்க்கை திட்டமிடாத போக்கினால் சிதைந்து போகிறது.
பெண்களே
இதுவரை இல்லை என்றாலும்
இன்று தொடங்கி
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.
வாசிப்பின் வழியும் பயணங்களில் வழியும், விரிவான அறிவார்ந்த நட்பு வட்டங்களின் வழியும் உங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
உணர்வுக்கு ஆட்படுவது நிம்மதியைக் குலைக்கும்.
அறிவோடு செயல்படுவது
வாழ்க்கையை மேம்படுத்தும்!
அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!
-சுபா
8.3.2025