Monday, October 2, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 134

உ.வே.சாவை தமிழ் தான் வாழ வைத்தது. 

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழக மக்களும் ஈடுபடும் வாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில் வருமானத்தை மனதில் கொண்டு மட்டுமே செயல்படத் தொடங்கியிருந்தால் உ.வே.சாவின் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு உயர்ந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆயினும் கூட தனது எண்ணமும், சிந்தனையும், கருத்தும், செயல்பாடும் முழுதும் தமிழ் ஆராய்ச்சி மட்டுமே என அவர் உழைத்தார். தமிழ் தன்னைக் காப்பாற்றும். சோறுபோடும். வாழ வைக்கும் என அவர் முழுமையாக நம்பினார். அப்படியே தமிழால் வாழ்ந்தார். உயர்ந்தார். அக்காலச் சூழலும் தமிழுக்காக உழைக்கும் நல்லோரை ஓரளவு ஆதரித்துப் பாராட்டும் வகையில் இருந்தது என்றே காணமுடிகின்றது. இன்றோ நிலமை வேறு.

நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு. தமிழர் வரலாற்று ஆராய்ச்சிகளில் மட்டுமே நாம் முழு கவனத்தைச் செலுத்துவோமா? அதில் முழு வீச்சுடன் இறங்கிச் செயல்படத் தொடங்கும் போது நம்மால் மேலும் பல வரலாற்றுப் பாதுகாப்பு முயற்சிகளை செவ்வணவே செய்து முடிக்க முடியும். தக்க ஆய்வு நூல்களை எழுதிப் பதிப்பிக்க முடியும். நேரமும் காலமும் அதிகம் இருக்கும் போது கவனத்தைக் குவித்து சில முக்கியக் காரியங்களைச் செய்யலாமே என்று. ஆனால் நிதர்சனத்தில் அது இயலாத காரியமாகத்தான் இருக்கின்றது. அடிப்படை வாழ்க்கையை நடத்தவும் வரலாற்று ஆய்வுகளைச் செய்யவும், பல இடங்களுக்குப் பயணித்து தகவல்களைச் சேகரிக்கவும் சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டிய சூழல் தான் எனக்கு உள்ளது. கணினித் துறையில் எனது உழைப்பின் வழி நான் ஈட்டும் பணத்தைக் கொண்டுதான் இந்த வரலாற்றுப் பாதுகாப்பு முயற்சிகளையும், வலைப்பக்க வெளியீடுகளையும் என்னால் சமாளிக்க முடிகின்றது. முழு நேரமாக இறங்கி தீவிரமாகச் செயல்பட எண்ணினால் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்வதோடு தனிப்பட்ட வகையில் குடும்பத்தை நடத்துவதற்கான வருமானத்தைப் பெறுவதில் எனக்குச் சிரமம் ஏற்படுவதோடு மன உலைச்சலும் கட்டாயம் ஏற்படும். அது மட்டுமன்றி நல்ல காரியம் செய்யப் பணம் படைத்தோரைப் புகழ்ந்து பேசி கையேந்திக் கொண்டிருக்கும் அவல நிலைக்கும் ஆளாக நேரிடும் என்பதே எனது முழு நேரமாக இப்பணிகளில் ஈடுபடமுடியாத இந்த நிலைப்பாட்டின் முக்கியக் காரணமாக அமைகின்றது. எனக்கிருக்கும் பிரச்சனை போலவே பல சமூக ஆர்வலர்களுக்கும் நிலைமை இருப்பதைக் காண முடிகின்றது. ஆக, சூழலுக்கேற்ற வகையில், ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரால் முடிந்த சில பணிகளை இயன்றவரைச் செயலாற்றுவதே கூட போதும் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. 

உ.வே.சாவைப் பொருத்தவரை கல்லூரியில் அவருக்கிருந்த பணி அவரது ஆய்வுகளுக்கு முற்றிலும் உதவும் நிலை என்றில்லாத சூழலிலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியதால் மாத வருமானம் அவருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதோடு அவரது மாணவர்களும் அவருடன் இணைந்து பழஞ்சுவடி பதிப்புப் பணியில் அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் அவர் வாடகை வீட்டிலே தான் குடியிருக்கும் சூழல் அப்போது அவருக்கிருந்தது. பல ஊர்களுக்குச் சென்று தேடி சேகரித்தப் பழஞ்சுவடிகள் அவர் வீட்டில் நிறைந்திருந்தன. அவர் எழுதிய கையெழுத்துச் சுவடிகளும் வேறு இருந்தன. ஆக அதிகமான நூல்கள் சேர்ந்து விட்டமையால் புதிய வீட்டிற்குச் சென்றால் வசதியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆக ஒரு வீட்டைக் கும்பகோணத்தில் வாங்குவது என முடிவு செய்து கொண்டார் உ.வே.சா. 

சேகரிப்பில் இருந்த பணத்தோடு கடனாக ரு.3000 ஒருவரிடம் பெற்று ஸஹாஜி நாயகர் தெருவில் ஒரு வீட்டினை வாங்கினார். இந்த வீடு 3 கட்டும் மாடியும் உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். இந்தக் ”கட்டு” எனும் சொல் எதனைக் குறிக்கின்றது எனத் தெரியவில்லை. 3 பகுதிகளாக அல்லது அறைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன். இந்த வீடு கல்லூரிக்கும் அருகாமையிலேயே இருந்ததும் வசதியாக அமைந்தது. 

புறநானூற்று அச்சு வடிவத்தைப் பார்த்தவர்களில் ஒருவர் ஜமீன்தார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் ஆவார். அந்த அச்சுப்பதிப்பின் தரத்தை மகிழ்ந்து புகழ்ந்து ஒரு பாராட்டுக் கடிதம் ஒன்றினை உ.வே.சாவிற்கு அனுப்பி வைத்தார் அவர். அதோடு காலம் வரும்போது சன்மானம் கொடுத்து சிறப்பிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பாண்டித்துரைத் தேவர் அவர்களின் கவனத்தைப் பெற்றதும் அவரது கடிதமும் உ.வே.சாவின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி மிக முக்கிய தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சமயம் அது. பல தமிழறிஞர்களை வரவேற்று அவர்களை ஊக்குவித்து தமிழ் ஆய்வுகள் தொடர அவர் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார். ஆக, இந்தச் சூழலில் அவரது கடிதம் உ.வேசாவிற்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது கடிதம் கிடைத்த செய்தியை திருவாவடுதுறை ஆதீனம் சென்ற போது சொல்லி மகிழ்ந்தார் உ.வே.சா. 

அடுத்த சில தினங்களில் வள்ளல் பாண்டித்துரை தேவர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை தந்திருந்தார். ஆதீனகர்த்தர் இச்செய்தியைச் சொல்லி உ.வே.சாவை வந்து காணுமாறு அழைத்திருந்தார். இச்சந்திப்பு பயனுள்ள ஒரு சந்திப்பாக அமைந்தது. உ.வே.சாவின் பணியைப் பாராட்டி ரூ 500க்கு ஒரு உண்டியலை உ.வே.சாவிற்கு தாம் இராமநாதபுரம் திரும்பியதும் அனுப்பி வைத்தார் வள்ளல் பாண்டித்துரை தேவர். இச்செய்தியை அறிந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும் ரூ.300 பரிசாக உ.வே.சா விற்கு அளித்தார். இந்தப் பண வரவினால் வீட்டிற்காக வாங்கிய கடனை உ.வே.சா அடைத்து முடித்தார். 

இந்தச் சூழலில் மணிமேகலையைப் பதிப்பிப்பதா அல்லது புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலை அச்சுப்பதிப்பாகக் கொண்டு வருவதா என்ற எண்ணம் உ.வே.சாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. புறப்பொருள் வெண்பாமாலை என்பது புறப்பொருளின் இலக்கணங்களைக் கூறுவது. ”வெண்பாமாலை” என்றும் அதற்கு ஒரு பெயர் உள்ளது. சேரர் குலத்தில் பிறந்த ஐயனாரிதனார் என்பவரால் இயற்றப்பட்டது இது. உரைகள் சிலவும் இதற்கு இருந்தன. உ.வே.சாவிடம் இருந்த உரையின் ஆசிரியர் மாகறல் சாமுண்டி தேவநாயகர் என்பது மதுரைத் தமிழ்ச்சங்க சுவடிகளை நண்பர்கள் உதவியோடு ஆராய்ந்ததில் உ.வே.சா அறிந்து கொண்டார். முழு கவனத்துடன் இந்த நூலின் அச்சுப்பதிப்பாக்கப்பணியைத் தொடங்கினார் உ.வே.சா.

தொடரும்...

சுபா

1 comment:

  1. இந்த வீடு 3 கட்டும் - ஒரு வீட்டுக்கு, சமையலறை, ஹால் முதலிய அடங்கியது ஒரு கட்டு. அதன் பின்பு, கிணற்றடியுடன் கூடிய பட்டகசாலை (பட்டாசாலை) இரண்டாவது கட்டு. அதற்குப் பின்புறம் தோட்டம் போன்றோ (அங்குமே கிணறு இருக்கலாம், அதன் அருகில் துளசி மாடம் இருக்கும்) அதனுடன் பின்புறம் கழிப்பறைகள் சேர்ந்தது மூன்றாவது கட்டு. இவை ஒவ்வொன்றிலும் மேலிருந்து வெளிச்சம் வரும்படி, திறந்த வெளி இருப்பதால், ஒரு வீட்டில் மூன்று பகுதியும் தனித்தனியாகத் தெரியும் (நெடுக நீளமாக வீடுகள் இருக்கும். ஒரு தெருவில் வாசல் ஆரம்பித்து பின் தெருவில் முடியும்). இதுதான் நான் அறிந்துள்ள மூன்று கட்டு வீடு.

    ReplyDelete